இன்றைய வாழ்க்கைக்கான தரிசனங்கள் மகாபாரதத்தில் அடங்கியிருக்கு!



மகாபாரதம் படித்திருக்கிறீர்களா?

ராஜாஜியில் தொடங்கி சோ வரை பலரும் வியாசரை அடிப்படையாக வைத்து எழுதி இருக்கிறார்கள்; எழுதியும் வருகிறார்கள். குறைந்தது முந்நூறு முதல் அதிகபட்சம் மூவாயிரம் பக்கங்கள் வரை இவை இருக்கும்.

இந்த நிலையில்தான் உலக நாவல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு பாகங்கள் வீதம் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மகாபாரதத்தை ‘வெண் முரசு’ என்னும் பொதுத் தலைப்பின் கீழ் புதினமாக எழுத ஆரம்பித்திருக்கிறார் ஜெயமோகன். ஒவ்வொரு பாகமும் குறைந்தது ஆயிரம் பக்கங்கள் கொண்டவை.

வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்’, கமலின் ‘பாபநாசம்’ படங்களுக்கு வசனம், ஐந்துக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுவது என பிசி ஷெட்யூலில் ஓடிக் கொண்டிருப்பவர், இந்த மகாபாரத மெகா ப்ராஜெக்ட்டையும் பெருங்கனவோடு கையில் எடுத்திருக்கிறார்.

 ‘‘இதுக்கான பொறி பல வருஷங்களுக்கு முன்னாடியே விழுந்துடுச்சு. சாகித்ய அகடமி சார்பா நடந்த ஒரு கூட்டத்துல, மகாபாரதம் எப்படி இந்திய மண்ணை பல்லாயிரம் ஆண்டுகளா பாதிச்சபடியே இருக்குன்னு இந்திரநாத் சவுத்ரி பேசினார். என்னை மொத்தமா புரட்டிப் போட்ட பேச்சு அது...’’ - விழிகள் விரியப் பேசும் ஜெயமோகன், அதன் பிறகு ‘மகாபாரதம்’ தொடர்பாக வெளியான எல்லா மொழி நாவல்களையும் தேடித் தேடி படிக்க ஆரம்பித்திருக்கிறார்.

‘‘அதுல இரண்டு மலையாள நாவல்கள் என்னை பாதிச்சன. ஒண்ணு, பி.கெ.பாலகிருஷ்ணனோட ‘இனி நான் உறங்கட்டும்’. அடுத்தது, எம்.டி.வாசுதேவன் நாயரோட ‘இரண்டாம் இடம்’. இந்த இரண்டும் தமிழ்லயும் மொழிபெயர்ப்பாகி இருக்கு. மகாபாரதக் கதை மாந்தர்கள் சராசரி மனுஷங்களா இந்த இரண்டிலும் அணுகப்பட்டிருப்பாங்க. இது தொடர்பா பேசறதுக்காக பி.கெ.பாலகிருஷ்ணனைத் தேடிப் போனேன். என்னுடைய எண்ணத்தை பகிர்ந்துக்கிட்டேன். பொறுமையா கேட்டவர், ‘இதையெல்லாம் ஒரு நாவலா எழுதுங்க’ன்னு சொன்னார்.

ஆனாலும் தைரியம் வரலை. சின்னச் சின்னதா சில சிறுகதைகள் எழுதிப் பார்த்தேன். அப்படியும் பயம் விலகலை. இப்படியே ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் வரை ஓடிப் போச்சு. இந்த ஆண்டோட தொடக்கத்துல திடீர்னு முடிவு செய்தேன், இதுக்கு மேல தள்ளிப் போட வேண்டாம்னு. துணிஞ்சு இறங்கிட்டேன்...’’ என்று சொல்லும் ஜெயமோகன், தனது ttp://www.jeyamohan.in/ வலைத்தளத்தில் நாள்தோறும் ஓர் அத்தியாயம் வீதம் ‘வெண் முரசு’ மெகா நாவலை எழுதத் தொடங்கியது இப்படித்தான்.

‘‘என்னைப் பொறுத்தவரை மகாபாரதம்ங்கிறது ‘என்சைக்ளோபீடியா ஆஃப் இமேஜஸ்’. ஒவ்வொரு இமேஜும் ஒவ்வொரு கதையை உணர்த்துது. அதனாலதான் இப்ப வரைக்கும் பலரும் பல மாதிரியா தொடர்ந்து தங்களோட மொழில அதை எழுதிக்கிட்டே இருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் பாரதம் தொடர்பா சொல்றதுக்கு ஒவ்வொரு விஷயம் கிடைக்குதுங்கிறதுதான் இதனோட ஸ்பெஷாலிட்டி.

உதாரணமா ‘திருதராஷ்டிரன் காந்தார தேச இளவரசி காந்தாரியை மணந்தான்’னு ஒரு வரில சொல்லிடலாம். ஆனா, யோசிக்கும்போது இதுக்குள்ள வேற ஒரு கதை இருக்கறது புரியும். ‘காந்தார தேசம்’ங்கிறது இன்றைய ஆப்கானிஸ்தான்.

பாலைவனப் பிரதேசத்துல வாழறவங்க எப்பவும் பசிச்ச ஓநாய் மாதிரி பசுமையான நிலப்பரப்பை தேடி அலைவாங்க. அதனாலதான் சகுனி தனக்குன்னு ஒரு தேசம் வேணும்னு தன் அக்கா புருஷன்கிட்டயும், துரியோதனன் கிட்டயும் கேட்டார். அவ்வளவு ஏன்... தைமூர்ல தொடங்கி பாலைவனப் பிரதேசத்துல வாழ்ந்த பலபேரும் இதன் காரணமாகவே பிற நாடுகள் மேல போர் தொடுத்ததையும் நாம வரலாற்றுல படிச்சிருக்கோம் இல்லையா? கிருஷ்ணர், மகாபாரதக் காலத்துல வெறும் யாதவ இளவரசர்தான்.

மகாபாரதம் சொல்லும் அடிப்படையான விஷயம், சத்திரியர்களுக்கும் யாதவர்களுக்கும் நிலவிய முரண்பாடு. அது இப்ப வரைக்கும் இந்திய அரசியல்ல எதிரொலிச்சுக்கிட்டு இருக்கு.
இதுமாதிரி நிறைய சொல்லலாம். அப்ப நடந்ததுதானேன்னு எதையும் ஒதுக்க முடியாது. இன்றைய வாழ்க்கைக்கான தரிசனங்கள் அதுல அடங்கியிருக்கு. பெரிய கேரக்டரோ, சின்ன கதாபாத்திரமோ...

மகாபாரதத்துல இடம்பெற்ற எல்லாருக்குமே ஒரு கதை இருக்கு. அவங்களோட செயல்களுக்கு ஒரு நீதி, நியாயம் இருக்கு. இதை எல்லாம் விரிச்சு எழுத நினைச்சேன். அதனாலதான் பத்தாண்டுகள்னு இலக்கு வைச்சு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயம் வீதம் எழுதிட்டு இருக்கேன். இதன் மூலமா இந்தியத் தத்துவங்களை அறிமுகப்படுத்தவும் எண்ணமிருக்கு...’’ என்கிறவர், இதுவரை ‘வெண் முரசு’ என்னும் பொதுத் தலைப்பில் நான்கு பாகங்களை எழுதி முடித்திருக்கிறார்.

‘‘காடு எரியுதுன்னு வைச்சுப்போம். அதுக்கு முதல் பொறின்னு ஒண்ணு இருக்கும் இல்லையா? அதுமாதிரி குருக்ஷேத்திரப் போரோட முதல் பொறிதான் ‘முதற்கனல்’. அம்பை முதன்முதல்ல சிந்தின கண்ணீர்த் துளிதான் இந்த பாகம். அடுத்ததா ‘மழைப்பாடல்’. மழைக்காக தவளை எப்படி பிரார்த்தனை நடத்துதோ அப்படி குருக்ஷேத்திர போரை உள்ளூர விரும்பின, அதுக்காக பிரார்த்தனை செய்த பெண்களைப் பத்தி இதுல விவரிச்சிருக்கேன். 

மூன்றாம் பாகமான ‘வண்ணக்கடல்’, புறக்கணிக்கப்பட்டவர்களைப் பத்தி உரக்கப் பேசுது. ஏகலைவன், துரோணர், கர்ணன்னு பாரதத்துல ஒதுக்கப்பட்ட மாந்தர்கள் நிறைய இருக்காங்க. இவங்க இந்த பாகத்துல சங்கமிச்சிருப்பாங்க. நான்காவதா எழுதின ‘நீலம்’, தன்னளவிலேயே தனித்த நாவல். ராதையோட கண் வழியே கிருஷ்ணரோட இளமைப் பருவத்தை அணுகியிருக்கேன்.

இதுல ஒரு சுவாரஸ்யமான விஷயமிருக்கு. மகாபாரதம் எழுதப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் பாகவதம் படைக்கப்பட்டது. இதுக்கு பல நூற்றாண்டுகள் கழிச்சுத்தான் ராதை என்கிற கேரக்டரே தோன்றுது. ஆனா, இன்னிக்கி ராதை இந்திய மண்ணுல தவிர்க்க முடியாத சக்தி. அதனாலதான் இப்படி ஒரு பார்வையைச் செலுத்தியிருக்கேன்.

இந்த நான்கையும் தனித்தனி புத்தகமா ‘நற்றிணை பதிப்பகம்’ வெளியிட்டிருக்கு. ஐந்தாவதா இப்ப ‘பிரயாகை’ எழுதிட்டு இருக்கேன். கங்கைல கலக்கற ஐந்து நதிகளை பிரயாகைன்னு சொல்வாங்க. அப்படி பாஞ்சாலி என்கிற திரௌபதியோட பிறப்பை, அவங்களோட ஆளுமையை வளர்த்தெடுத்த நிகழ்ச்சிகளை இதுல பதிவு செய்துட்டு வரேன்’’ என்று சொல்லும் ஜெயமோகன், ‘வெண் முரசு’ பாகங்கள் மூலம் வரும் ராயல்டி தொகையை, தான் எடுத்துக் கொள்வதில்லை.

‘‘நாள்தோறும் என் வலைத்தளத்துல வெளியாகற அத்தியாயத்துக்கு ஷண்முகவேல் ஓவியம் வரையறார். இதுக்காக ஒரு பைசா கூட அவர் வாங்கறதில்லை. அதனாலதான் ராயல்டியை அப்படியே அவருக்குக் கொடுக்கறோம். எனக்கு மகாபாரதத்தை எழுதற திருப்தி போதும்...’’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

- கே.என்.சிவராமன்
ஜெயமோகன்