நான் டீசன்ட் குக்!



புல் மீல்ஸ் வித் காஜல்

‘கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு...’ தான் காஜல் அகர்வாலின் ஸ்பெஷல். ஆனால் அதிகம் பேருக்குத் தெரியாத இன்னொரு ஸ்பெஷல், இந்த க்யூட் பொண்ணு வைத்திருக்கும் செம சாப்பாட்டு மெனு. அதுக்காக ‘சிக் டயட்’னு நினைச்சிடாதீங்க. ‘இந்த பொறப்பு தான் நல்லாருசிச்சு சாப்பிடக் கிடைச்சது...’ பாடலை அப்படியே வாழ்க்கையில் ஃபாலோ பண்ணுகிறது பாப்பா. ஜப்பானீஸ் ஸீ ஃபுட்ஸ், பஞ்சாபி ராஜ்மா சாவல் - பரோட்டா, தாய்லாந்து நூடுல்ஸ் என எந்த ஏரியாவில் எது சூப்பர் என்பது காஜலுக்கு ஃபிங்கர் டிப்பில். ‘இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்’ என்ற பில்டப்போடு அவர் பகிர்ந்தவை...

‘‘மும்பையில நாங்க கூட்டுக்குடும்பமா இருக்கோம். ஷூட்டிங் இல்லேன்னா, அப்பா, அம்மா, தங்கை நிஷா, பாட்டியோட செம ஹேப்பி டேஸ்தான். விதவிதமா பஞ்சாபி ஃபுட்ஸ் சமைப்பதில் எங்க பாட்டி எக்ஸ்பர்ட். நான் சின்னக் குழந்தையா இருக்கறப்ப ஒவ்வொரு சண்டேவும் நாங்க ஃபேமிலி கெட் டுகெதர் மாதிரி ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம். அப்போ பாட்டி செஞ்சு போட்ட ராஜ்மா சாவல், பனீர் மக்கானி, பரோட்டா... இதெல்லாம் இப்பவும் என் மெனுவில் இருக்கு.

சின்ன வயசில இருந்தே எனக்கு ஹோட்டல் சாப்பாட்டு மேல அவ்ளோ இன்ட்ரஸ்ட் இல்ல. முன்னெல்லாம் நான்வெஜ் சாப்பிடுவேன். இப்போ ப்யூர் வெஜ். ரைஸ் ஃபுட்ல காதி சாவல் பிடிக்கும். சில சமயம் அரிசிக்கு பதில் தினையோ, காராமணியோ சேர்த்துப்பேன். தமிழ்நாடு, ஆந்திரான்னு ஷூட்டிங் வந்தால் இட்லி, தோசையை மிஸ் பண்ண மாட்டேன். கடல் கடந்து போனா, தாய்லாந்து ஃபுட்ஸ்தான் ரொம்ப இஷ்டம். ‘பனீர் சடே’ன்னு ஒரு டிஷ்... வெஜ்தான். ஆனா, அப்படியே சிக்கன் டேஸ்ட். ஜப்பான்ல சுஷி பிடிக்கும். எலுமிச்சை இலை, புதினா, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லின்னு பல இலைகளை வச்சு ஒரு டிஷ் வியட்நாம்ல ரொம்ப ஃபேமஸ்.

இத்தாலி ஃபுட்ஸ்ல பீட்சா... ஐ லவ் பீட்சா! ஸ்பெயின்ல ‘ஃப்ரைடு பொடேடோ அண்ட் சாஸ்’ யம்மி..! அப்புறம் ஒரு விஷயம்... எந்த ஏரியாவா இருந்தாலும் சரி, அந்த ஊர் பாரம்பரிய உணவு வகைகளை எடுத்துக்கறதுதான் பெஸ்ட். அதுதான் உடலுக்கும் ஆரோக்கியம். சான்பிரான்சிஸ்கோல பச்சைக்காய்கறிகள் வச்சு ‘ஹை டயட் ஃபுட்’ சூப்பர். லண்டன்ல நிறைய சொல்லலாம்... சோயா பீன்ஸை அவிச்சு செய்யிற ‘எடமாமே’ எனக்கு ஆல் டைம் ஃபேவ ரிட். லண்டன்ல எங்கே போனாலும் அது இருக்குதானு கேட்பேன்.

பொதுவா ஃப்ரஷ் காய்கறிகள், பழங்கள்னா ரொம்ப இஷ்டம். மாம்பழ சீஸன்ல தினம் மூணு மாம்பழமாவது சாப்ட்ருவேன். ஸ்ட்ராபெர்ரீஸ்க்கு ஃபேன் நான். அதில் கலோரீஸ் அளவும் கம்மி. ஸ்வீட்ஸ், சாக்லெட்ஸ்னு வந்துட்டா நான் கலோரி பத்தியெல்லாம் கவலைப்படுறதில்ல. வீட்ல அம்மா எப்பவும் சாக்லெட் கேக்ஸ், ஃப்ரஷ் ஃபுரூட் கேக்ஸ் வாங்கி வச்சிருப்பாங்க, எனக்காக!ஓரளவு டீசன்ட் குக் நான். மைக்ரோவேவ் சமையல்னா, என்ஜாய் பண்ணி சமைப்பேன்.

கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள எந்த உணவையும் சேர்த்துக்கறதில்ல. ஆரோக்கியமான ஃபேட், ஹெல்த்தி ஃபுட்தான் எடுத்துப்பேன். சமைக்கறதும் அதைத்தான். கொழுப்பு மட்டுமில்ல... புரோட்டீனும் சரிவிகிதத்தில் இருக்குற மாதிரி தேர்ந்தெடுத்து சாப்பிடுவேன். தண்ணீர் நிறைய குடிப்பேன்.

இவ்ளோதான் என்னோட ஃபுட் சீக்ரெட்ஸ்’’ என்கிற காஜல் அகர்வால், ஐதராபாத்தில் இருந்தாலும், மும்பையில் இருந்தாலும், ஜிம்மில் கார்டியோ காம்பினேஷன் எடைப்பயிற்சி மேற்கொள்கிறார். எங்கே ஷூட்டிங் போனாலும், கூடவே யோகா மேட் இருக்கிறது. வாரத்திற்கு 5 நாள் யோகா செய்வது காஜலின் ஹெல்த்தி ஹாபி!

- மை.பாரதிராஜா