கேரளாவில் மாஸ் கிஸ்ஸிங்
இது வளர்ச்சியா? விபரீதமா? சொல்லத் தெரியவில்லை. ஆனால், இதுவரை ‘வெளிநாட்டு விநோதம்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற செய்தி வகை இது. ஜஸ்ட் மாநில பார்டர் தாண்டி மலையாள மண்ணில் நடந்தேறியிருக்கிறது. பொது இடத்தில் முத்தம் கொடுக்க உரிமை வேண்டி, ஜோடிகள் நடத்திய முத்தம் கொடுக்கும் போராட்டம்தான் அது!

கோழிக்கோட்டில் ஒரு ஹோட்டலில், ஜோடிகள் முத்தம் கொடுக்க இடவசதி செய்து கொடுத்திருந்தார்களாம். அப்படியே விட்டிருந்தால் இது அடுத்த தெருவுக்குக் கூடத் தெரிந்திருக்காது. ‘‘இது பண்பாட்டுக்கு எதிரானது’’ என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அந்த ஹோட்டலை துவம்சம் செய்ய, பிரச்னை செல்ஃப் ஸ்டார்ட் ஆனது.‘‘முத்தம் என்பது காதலின் மொழி.

அதைத் தடுக்க எந்த சக்தி யாலும் முடியாது!’’ என்ற முழக்கத்தோடு ஒரு குரூப் ஃபேஸ்புக்கில் மைக் பிடிக்க, லைக் அள்ளியது. ‘காதல் முத்தம்’ (Kiss of Love) என்ற பெயரில் எழுந்த இந்த குரூப், ஒரு கட்டத்தில் இந்திய சோஷியல் மீடியாவை கலக்கி எடுத்தது. ‘காதல் முத்தம்’ என்ற பெயரிலேயே நூதனப் போராட்டம் ஒன்றை நடத்தும் அளவுக்கு துணிச்சல் தந்தது இந்த ஆதரவுதான்.
‘இந்த அடாவடி நீதிக் காவலர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், நவம்பர் 2ம் தேதி ஆயிரம் ஜோடிகள் கொச்சியில் சந்தித்து முத்த மழை பொழிவோம்!’ என அவர்கள் அனவுன்ஸ்மென்ட் கொடுக்க, ‘ஆயிரத்தில் எங்களையும் சேர்த்துக்கங்கப்பா’ என ஆளாளுக்கு பெயர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த மேட்டரைக் கையாளும் கடமை வந்து சேர்ந்தது ஒரு தமிழகத் தம்பதி வசம். ஆம், கொச்சி கலெக்டர் எம்.ஜி.ராஜமாணிக்கமும் அந்த நகரத்து போலீஸ் துணை கமிஷனர் நிஷாந்தினியும் கணவன் - மனைவி. சட்டம் ஒழுங்கை மட்டுமே கணக்கில் கொண்டு இவர்கள் இருவருமே இந்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். ஆனாலும் கோர்ட்டுக்குப் போய் ‘இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த தடையில்லை’ என தீர்ப்பு பெற்றது ‘காதல் முத்தம்’ தரப்பு. அப்புறம் என்ன? முத்தப் போராட்டம் களம் காணத் தயார்.
நவம்பர் 2ம் தேதி பிற்பகல் மூன்று மணி... கொச்சி நகரத்தின் மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போனது. காரணம், முத்தப் போராட்டம் நடக்கும் மரைன் டிரைவ் பகுதியில் பத்தாயிரம் பேர் குவிந்திருந்தனர். ஆனால் அதில் முத்தம் தர வந்தது வெறும் 50 பேர் மட்டுமே. இந்த நிகழ்ச்சியை எதிர்த்து கோஷம் போட வந்த பண்பாட்டுக் காவலர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம். ஜஸ்ட், நடப்பதை வேடிக்கை பார்க்க வந்த கூட்டம்தான் 10 ஆயிரம். என்ன இருந்தாலும் நாம எல்லாத்தையும் வேடிக்கை பார்த்தே பழகின கூட்டமாச்சே!
முத்தம் கொடுக்க வந்தவர்களை போலீஸ் படை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்து விட்டது. திடீரென்று பத்து பேர், ‘கிஸ் ஆஃப் லவ்’ என கோஷம் எழுப்பி தரையில் அமர... அவர்களையும் அலேக்காக போலீஸ் வேனில் ஏற்றினார்கள். சில ஜோடிகள் வேனில் இருந்தவாறே லிப் லாக் செய்து பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் வராமல் பார்த்துக் கொண்டார்கள். கூட்டாக முத்தமிடும் நிகழ்ச்சி நடக்கவில்லை என்றாலும்...
ஒவ்வொரு ஜோடியும் கைதாக, கைதாக, புதுப்புது ஜோடிகள் ஆங்காங்கே முத்தக் காட்சியை மீடியாக்களுக்கு பரிசாக்கினார்கள். அவை பெரும்பாலும் கன்னத்தில் கொடுத்த போஸ்ட் ஆபீஸ் முத்தம்தான் என்றாலும், நீண்ட லிப் லாக் உம்மாக்களுக்கும் பஞ்சமில்லை. இவர்களை விடவும் போலீஸுக்கு சவாலாக அமைந்தது பார்வையாளர் வர்க்கம்தான். பலமுறை தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க வேண்டியிருந்தது.
ஏதோ ஒரு மாதிரியாக நடந்து முடிந்த இந்த நிகழ்வை, நம்மூர் சினிமா சக்சஸ் பார்ட்டி போல ‘மாபெரும் வெற்றி’ என அடுத்த நாளே டிக்ளேர் செய்து விட்டது போராட்டக் குழு. ‘‘வெறும் ஃபேஸ்புக்கில் அறிவிப்பு கொடுத்து திரண்ட கூட்டம்தான் இது. இன்று யார் நினைத்தாலும் சோஷியல் மீடியாவில் ஆள் திரட்டி, அரசையும் மீடியாவையும் கலங்கடிக்க முடியும் என்றாகிவிட்டது. இது நல்லதுக்கில்லை!’’ எனப் புலம்ப ஆரம்பித்திருக்கிறது கேரள அரசு வட்டாரம். நாம என்னதான் ‘உச்’சுக் கொட்டினாலும் ‘இச்’சு கொட்டிட்டாங்களே!
- கொச்சியிலிருந்து பிஸ்மி பரிணாமன்