‘‘என்ன பொன்னுரங்கம் சார், நான் சொன்ன பெண்ணை பார்த்தீங்களா? பேசி முடிச்சிடலாமா?’’ என்றவாறே வீட்டிற்குள் வந்தார் தரகர் காளியப்பன்.‘‘அது வேண்டாம் தரகரே’’ என்றார் பொன்னுரங்கம்.‘‘ஏன் வேணாம்ங்கிறீங்க? கொஞ்சம் வசதி இல்லாதவங்கதான். ஆனா, நல்ல பொண்ணு சார்’’ பெண் வீட்டார் சார்பாக நின்று பேசினார் தரகர்.

‘‘பொண்ணு நல்லாத்தான் இருக்கா. ஆனா, வசதி இல்லாத குடும்பம்... அதனால எல்லாரும் சிம்பிளா இருப்பாங்கன்னுதானே நீங்க சொன்னீங்க? போய் பார்த்தா, பொண்ணு பட்டுப் புடவையும், ஏகப்பட்ட நகை அலங்காரத்தோடவும் ஆடம்பரமா இருந்தா. நகைகள் குறைஞ்சது எழுபது பவுனாவது இருக்கும். வசதியில்லைன்னு சொல்லி எங்களை ஏமாத்தப் பாக்கறாங்க’’ என்று பொரிந்தார் பொன்னுரங்கம்.
‘‘ஐயோ, அதைச் சொல்றீங்களா? அது பெண்ணுக்கு அலங்காரம் பண்றதுக்காக அக்கம் பக்கத்துல வாங்கின இரவல் நகைகள் சார்’’ என்றார் தரகர்.‘‘அப்படின்னா அது இன்னும் மோசம். இந்த மாதிரி போலி கௌரவம் பார்க்குறவங்க வீட்டிலிருந்து பொண்ணு எடுக்கவே கூடாது. நீங்க வேற இடம் பாருங்க தரகரே!’’ - உறுதியாகச் சொன்னார் பொன்னுரங்கம்.
சி.ஸ்ரீரங்கம்