செக்ஸர்கள் தேவை!



வருடத்துக்கு சுமார் 37 லட்ச ரூபாய் சம்பளம் தரத் தயார். ஆனாலும் அந்த வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை. பிரிட்டன் அரசாங்கமே இதனால் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறது. அப்படி என்ன முக்கியமான வேலை என்கிறீர்களா? ‘கோழிக்குஞ்சுகளை ஆணா, பெண்ணா?’ எனப் பரிசோதிக்கும் சிக் செக்ஸர் வேலைதான் அது!நேற்று பிறந்த கோழிக்குஞ்சுகளில் ஆண் எது, பெண் எது எனக் கண்டறிவது அத்தனை சுலபமில்லை.

அதன் வயிற்றை நேக்காக அழுத்தினால், அது கழிவை பிசுக்கி வெளியேற்றும். அப்போது திறக்கும் அதன் ஆசன வாயை உற்று நோக்க வேண்டும். அதன் ஓரம் முகப்பரு சைஸில் ஒரு கட்டி தெரிந்தால் அது ஆண். தெரியாவிட்டால் பெண். இப்படி அன்றாடம் கோழிகளின் பின்புறத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான் சிக் செக்ஸரின் முழுநேரப் பணி. எனவேதான், ‘இதெல்லாம் ஒரு வேலையா’ என நவயுக மாணவ, மாணவிகள் யாரும் இந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பதே இல்லை.

ஆனால், கோழிப் பண்ணையாளர்களைப் பொறுத்தவரை இது மிக மிக முக்கியமான வேலை. மெஷின்களால் பார்க்கவே முடியாத வேலை. பிறந்தவுடன் கோழிகளில் ஆண் - பெண்ணைக் கண்டறிந்தால்தான் அதற்கேற்றபடி அவற்றுக்கு உணவிட்டு வளர்க்க முடியும். ஆண் கோழிகள் கறிக்கோழிகளாக வளர்க்கப்படும். பெண் கோழிகள் முட்டை உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். இப்போது இந்த வேலைக்கு ஆள் இல்லாததால் பிரிட்டனில் முட்டை உற்பத்தியே பாதிக்கப்பட்டு, விலை எகிறிவிட்டதாம்.

இந்த வேலையைப் பொறுத்தவரை, 5 விநாடிகளில் ஒரு கோழியைப் பரிசோதித்துவிட வேண்டும். நமது பரிசோதனை முடிவு 10க்கு 9 சரியாகவும் இருக்க வேண்டும். 3 வருடம் டெடிகேஷனோடு படித்து பயிற்சி எடுத்துக்கொண்டால்தான் இது சாத்தியம்!கிரிக்கெட்டில் சிக்ஸர் இல்லை... கோழிப் பண்ணையில் செக்ஸர் இல்லை... என்னய்யா யுனைடெட் கிங்டம் நீங்க!

- ரெமோ