தமிழ் சினிமா தட்டி வந்த விருதுகள்!



2014ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் எட்டை அள்ளியிருக்கிறது தமிழ் சினிமா. சிறந்த குழந்தைகள் படமாக ‘காக்கா முட்டை’; துணை நடிகராக பாபி சிம்ஹா; எடிட்டராக விவேக் ஹர்சன்;

பாடகியாக உத்ரா உன்னிகிருஷ்ணன்; பாடலாசிரியராக நா.முத்துக்குமார்; குழந்தை நட்சத்திரங்களாக விக்னேஷ், ரமேஷ்; தமிழ்ப்படமாக ‘குற்றம் கடிதல்’; சினிமா புத்தகமாக ஜி.தனஞ்செயனின் ‘பிரைடு ஆஃப் தமிழ் சினிமா’ என விருதுகள் கிடைக்க, இவர்கள் அனைவருமே தங்கள் கலைவாழ்வின் உன்னதமான அனுபவத்தில் திளைக்கிறார்கள்.

பாபி சிம்ஹா

‘‘சத்தியமாக எதிர்பார்க்கலை. மனதால் நினைக்கவும் இல்லை. ஆனால், ‘ஜிகர்தண்டா’வில் கிடைத்த பாராட்டு உற்சாகப்படுத்தியது உண்மை. கார்த்திக் சுப்புராஜ், அப்பா, அம்மா, கடவுள், உறவுகள், நண்பர்கள், ரசிகர்கள்னு எல்லோரும் சேர்ந்து உருவாக்கினவன்தான் இந்த பாபி. என் வளர்ச்சியை தன் வளர்ச்சியா நினைக்கிற நல்ல மனுஷங்க...

குறிப்பா கார்த்திக் சுப்புராஜ் மாதிரியானவங்கதான் என் பலம். என் வரம். சும்மா வேடிக்கையாக வந்தேன். உள்ளே வரக் கஷ்டப்பட்டது உண்மை. ஆனால், இவ்வளவு சீக்கிரம் இந்த விருது... ‘டேய் பாபி, விளையாட்டு இல்லடா, இந்த விருதுக்கு இன்னும் தகுதி யாக்கிக்கோ’ன்னு மனசு அலாரம் அடிக்குது. என்னை ஏற்றுக்கொண்ட தமிழ் ரசிகர்களுக்கு சல்யூட்!’’

இயக்குநர் பிரம்மா

‘‘‘குற்றம் கடிதல்’ எனக்கு நிறைவான சந்தோஷம் அளித்தது. நான் எடுத்த படம் என்பதற்காக அல்ல. அதனுடைய தீம் அப்படி. நல்ல முயற்சிகளை யாராவது பாராட்டும்போது, தோள் தட்டி ‘வெரிகுட்’ சொல்லும்போது, விருது வழங்கும்போதுதான் நாம் இன்னும் அடுத்த கட்டத்துக்குப் போகிறோம். நண்பர்களே, கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். தியேட்டர்களில் சீக்கிரம் பார்க்கக் கிடைக்கும்!’’

நா.முத்துக்குமார்

‘‘ரெண்டாவது முறையாகவும், தொடர்ந்தும் தேசிய விருது கிடைத்தது அதிகபட்ச சந்தோஷம். அன்பையும் பிரியத்தையும் போதிக்கிற பாடல்களுக்கு எப்போதுமே கூடுதல் மரியாதை கிடைக்கும். நான் இவ்வகையான பாடல்களை விரும்பியே எழுதுவேன். ‘சைவம்’ படத்தில் எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நண்பன் விஜய்க்கும், தம்பி ஜி.வி.பிரகாஷுக்கும் நன்றி என்கிற ஒரு வார்த்தை போதாது.

என் பாடலுக்கு உயிர் கொடுத்த உத்ராவுக்கும் விருது கிடைத்தது என் மகளுக்கே கிடைத்த மாதிரி இருந்தது. குடும்பத்தோடு நேரம் கழிக்க முடியவில்லையே என நினைத்துக்கொண்டு குடும்பத்தோடு மலேசியாவுக்கு கிளம்பிவிட்டேன். ஃபிளைட் ஏறப் போகும்போது, இந்த விருது கிடைத்ததே பறப்பது மாதிரி இருந்தது. என் ஆசான் பாலுமகேந்திரா இருந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பார்!’’

இயக்குநர் மணிகண்டன்

‘‘சிறந்த குழந்தைகள் படமாக ‘காக்கா முட்டை’ தேர்வானது என் கடமையை இன்னும் அதிகமாக்கி விட்டது. இப்பவும் பெரியவர்களுக்கான படத்தைத்தான் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இனிமேல் குழந்தைகளுக்கான படம் வெளிவர என் படம் உதவலாம்.

டொரன்டோ முதற்கொண்டு சர்வதேச விருது களை இந்தப் படம் பெற்றபோது, ‘நம் நாட்டிலும் கிடைக்காமலா போய் விடும்’ என நம்பியது வீண் போகவில்லை. குடிசைப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த சிறுவர்களை நடிக்க வைத்து, அவர்கள் டெல்லிக்கே போய் விருது வாங்கும் அனுபவத்தையும், சந்தோஷத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு அதுதான் பெருமிதம்!’’

விவேக் ஹர்சன்

‘‘சினிமாவின் எடிட்டிங் ரொம்ப தனித்திருக்கிற வேலை. ஒரு இயக்குநரின் கனவை நனவாக்குகிற பெரு முயற்சியில்தான் எங்கள் வெற்றி இருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்த கார்த்திக் சுப்புராஜையும் என்னை ஆளாக்கிய என் குரு ஆண்டனி சாரையும் இந்த சமயத்தில் நினைத்துப் பார்க்கிறேன்!’’

தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார்

‘‘‘தங்கமீன்கள்’ வெளியிட்டபோது சந்தோஷமாக இருந்தது. நல்ல ஓப்பனிங் கிடைத்தும், அடுத்த வாரம் தியேட்டருக்கு மக்கள் வந்தால், அங்கே படம் இல்லை. நேஷனல் அவார்டு கிடைத்த பிறகுதான் நிறைய பேர் அதைப் பார்க்க விரும்பினார்கள். ‘குற்றம் கடிதல்’ படத்துக்கு பட விழாக்களில் கிடைத்த அங்கீகாரத்தைப் பார்த்து தேசிய விருதுக்கும் அனுப்பினோம். விருது கிடைத்தது பெரிய கௌரவம். தொடர்ந்து துணிந்து நல்ல படங்கள் தயாரிப்பேன்!’’

உத்ரா உன்னிகிருஷ்ணன்

‘‘என்னைக் காட்டிலும் என் டாடிக்கு ரொம்ப ஹேப்பி. ‘சைவம்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் அங்கிள் கூப்பிட்டாங்க. அன்னிக்கு பார்த்து எனக்கு குரல் சரியில்லை. அப்படியும் பாடச் சொன்னார். விஜய் அங்கிள், பாட்டெழுதின முத்துக்குமார் அங்கிளை மறக்க முடியாது. எவ்வளவு பெரிய பாடகிகள் வாங்கின பரிசு! இப்போ இந்த சின்னப்பொண்ணுக்கும் கிடைச்சது கடவுள் அனுக்கிரகம்தான். வேறென்ன!’’

ஜி.தனஞ்செயன்

‘‘‘பிரைடு ஆஃப் தமிழ் சினிமா 1931-2013’ புத்தகத்தை எல்லா மொழிக் கலைஞர்களும் பாராட்டினாலும் தேசிய விருது கிடைத்தபோது என் உழைப்புக்குக் கிடைத்த மரியாதையாகிவிட்டது. எஸ்.ராம
கிருஷ்ணன், ஜெயமோகன் மாதிரியான பெரிய எழுத்தாளர்களும் இதைக் கொண்டாடினார்கள். இதன் மலிவுப் பதிப்பையும் கொண்டு வர
உத்தேசம்!’’

- மை.பாரதிராஜா