போராட்டம் தான் எனக்கு விடுதலை...



கவிஞர் இன்குலாப் இப்போது...

மனுசங்கடா - நாங்கமனுசங்கடா ஒன்னப்போல அவனப்போல
எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா’

என விடுதலைக் குரலில் முழங்கிய, மக்கள் கவிஞர் இன்குலாப்பிற்கு உடல்நிலை சரியில்லை. சாதாரண மனிதர்களின் தேசிய வியாதியாகிய சர்க்கரையின் மிகுதியால் ஒரு காலை இழந்து, எங்கும் நடமாட முடியாமல் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார். தமிழ்நாடு எப்போதும் போல் எந்த சலனமும் இல்லாமல் உலகக்கோப்பை கிரிக்கெட் பார்த்து முடித்து ஐ.பி.எல். போட்டிகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது!எப்படி இருக்கிறார் இன்குலாப்?

சென்னையின் புறநகர்ப் பகுதி... ஊரப்பாக்கம் தார்ச்சாலையிலிருந்து கீழிறிங்கும் மண் சாலையில் அத்துவான வெளியில் இருக்கிறது எந்த அலங்காரமும் இல்லாத இன்குலாப்பின் வீடு. ஓய்வு பெற்ற பேராசிரியர் என்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. வெடிப்புற்று கவிதை பாடிய இன்குலாப், இன்று மிகவும் மெலிந்திருக்கிறார்.

வலது முழங்காலுக்குக் கீழ் முழுவதும் இழந்திருக்கிறார். ஆனால் வீடு தேடி வருபவர்களை வரவேற்று உபசரிப்பதில் அனுபவம் முதிர்ந்து கனிந்த ஓர் ஞானியைப் போல் இருக்கிறார். ஒரு நோயாளிக்குத் தேவைப்படும் கூடுதல் வசதிகள் எதுவும் அந்த வீட்டில் இல்லை.

ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவரது மனைவி, எதிர் அறையில் கட்டிலில் படுத்திருக்கும் கணவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்தக் காவிய மௌனத்தில் நாங்கள் குறுக்கிடுகிறோம். எங்களைக் கண்டவுடன் எழுந்து அமர்கிறார் கவிஞர். அடுத்து வரப்போகும் சித்திரை மாத வெயிலை நினைத்தால் இப்போதே நமக்குக் கவலை பிறக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்.

‘‘71 வயதாகிவிட்டது. இன்னும் கொஞ்சம் கவனத்துடன் உடல்நலத்தைப் பேணியிருக்கலாம். ஆனால் தனிப்பட்ட காரியங்களைச் செய்வதில் விருப்பம் அதிகமாக இல்லை. என்னை எப்போதும் பொது மனிதனாகவே கருதி வந்திருக்கிறேன். கலைஞன் என்பவன் எனக்கு பொது மனிதனாகத்தான் தெரிகிறான். சாகுல் ஹமீது என்ற தனிமனிதனின் லாப நஷ்டக் கணக்குகளை விடவும், இன்குலாப் என்ற பொது மனிதனைத்தான் இன்றும் உயர்த்திப் பிடிக்க விரும்புகிறேன். போராட்டவாதியாகவேதான் இருக்க விரும்புகிறேன்’’ என்கிறார் அவர் கம்பீரமாக!

எழுபதுகளில் பார்த்த அந்தப் புரட்சிக்கார இளைஞர் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. அதே துடிப்பு... அதே வேகம்... அதே கனல். இன்குலாப்பை எது இப்படி வைத்திருக்கிறது? அவரோடு தொடங்கியவர்கள் பலர் காலச்சக்கரத்தில் கடையாணி கழன்று எங்கெங்கோ சிதறிக் கிடக்கிறார்கள். இன்குலாப் மட்டும் எப்படி இன்னும் இப்படி? மக்கள் கவிஞரின் கண்களில் ஒளி தெரிகிறது. குரலில் நம்பிக்கை கொப்பளிக்கிறது. நோயை விடவும் அவரை வருத்துவது நம் சமூகத்தின் இழிவுகள்தான்.

‘‘எனக்கு இந்தச் சமூகம் எவ்வளவோ கொடுத்திருக்கிறது. இதற்கு நான் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் நிறைய இருக்கின்றன. மக்களையும் தத்துவத்தையும் நான் ஒருபோதும் குறைசொல்ல மாட்டேன். எனக்கு சமூகத்தில் செய்வதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறது. என் உடல்நிலை என்னை பெரிய காரியங்களுக்கு அனுமதிக்கவில்லையே என்ற வருத்தத்தைவிட, வாழ்க்கை எனக்கு அதன் போராட்டங்களுக்கு இடையிலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. போராட முடியாமைதான் எனக்கு துக்கம். போராட்டம்தான் என் விடுதலை!’’

இவ்வளவு பற்றுறுதியுடன் பேசும் ஒரு கலைஞனை உண்மையிலும் உண்மையாக நாம் என்றாவது புரிந்துகொண்டிருக்கிறோமா? நமக்காகப் பாடுபடும் போராளிகளுக்கு நாம் தரும் பரிசுதான் என்ன? அவர்கள் நம்மிடத்தில் எதையும் யாசிக்கவில்லை. எப்பொழுதும் உடலாலும் அறிவாலும் நமக்காக உழைத்து உழைத்து ஓடாகத் தேய்வதுதான் அவர்களின் விதியாக இருக்கிறது. இவர்களை வரலாற்றுச் செய்திகளாக அல்லாமல், நமது அன்றாட ஞாபகங்களில் நாம் என்னவாக வைத்திருக்கிறோம்?

‘‘கலைஞர்கள் மட்டுமே கொண்டாடப்பட வேண்டியவர்கள் இல்லை. இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் மதிக்கப்படவும், நேசிக்கப்படவும் வேண்டும். இதை உறுதி செய்து தராத சமூகத்துடன் நான் தொடர்ந்து போரிடுவேன். கலைஞர்கள் கோரும் சிறப்புச்சலுகைகளில் எனக்கு நம்பிக்கையில்லை.

சமத்துவம் நிலவாத சமூகத்தில் கலைஞர்கள் தனிச் சலுகைகளை எதிர்பார்ப்பது என்பது மக்களிடமிருந்து அவர்களை அன்னியப்படுத்திவிடும். என்னை நீங்கள் மதிப்பது என்பது என் செயல்களில் உள்ள நியாயத்தை உணர்ந்து, என் போராட்டத்தைத் தொடர்ந்து சமூகத்தில் முன்னெடுப்பதுதான். சமரசங்கள் செய்துகொள்வதால் கிடைக்கும் பலன்களை விடவும், போராடுவதால் கிடைக்கும் நஷ்டங்களை நான் மதிக்கிறேன். வரலாறு எனக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் நியாயம் செய்ய வேண்டும். செய்யும் என்பது என் உறுதிப்பாடு’’ என்கிறார் அவர் தீர்மானமாக!

கீழ்வெண்மணி, ஈழத்தமிழர் படுகொலை, மதவாதம், சாதிவாதம் என்று சமூகக் கொடுமைகள் பலவற்றையும் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து நின்ற ஒரு களப்போராளி, தன் வலது காலை இழந்த பிறகும் இந்த சமூகத்தில் இருந்து ஒரு தேநீர் கூட எதிர்பார்க்காத தியாகத் திருவுருவாக பேரெழுச்சி பெற்றுப் பேசுகிறார். வ.உ.சியைச் செக்கிழுக்க வைத்த தமிழ்ச் சமூகம், பாரதியாரைப் பட்டினி போட்டுக் கொன்ற கூட்டம், புதுமைப்பித்தனை அற்ப ஆயுளில் கொன்று போட்ட வாழ்க்கை...

இந்தச் சமூகத்திடம் இருந்து இன்குலாப் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதில் வியப்பில்லை. கேரளத்திலும் கர்நாடகத்திலும் தகழிக்கும், வைக்கம் முகம்மது பஷீருக்கும், அனந்தமூர்த்திக்கும் கிடைத்த மரியாதை இன்குலாப்புக்கு ஏன் கிடைக்கவில்லை? சென்னை நகரத்தில் ஒரு வீடு கூட கொடுக்க முடியாத சமூகப் பொறுப்பற்ற அரசாங்கம், அவருடைய மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாம் எப்படி எதிர்பார்க்கலாம்?

‘‘இன்னும் நான் போராட்டத்திற்கான அமைப்பை முழுமையாக ஏற்றிருக்க வேண்டும். போராட்டத்தில் பங்கு பெறுவது என்று இல்லாமல், பல போராட்டங்களை நான் கட்டமைத்திருக்க வேண்டும். சில போராட்ட வாய்ப்புகளை நான் தவறவிட்டேன். எழுத்துபூர்வமாக எளிய மக்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறேன்.

ஆனால், களப்போராளியாக இன்னும் முனைப்புடன் நான் செயல்பட்டு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். என் வாழ்க்கை எப்போதும் பணி அச்சுறுத்தலுக்கும், எதிர்கால அச்சுறுத்தலுக்கும் இடையேதான் கழிந்திருக்கிறது. ‘சில சமயங்களில் உயிர் தரித்திருப்பது வாழ்க்கையாக இருக்கிறது... சில சமயங்களில் உயிர் கொடுப்பது வாழ்க்கையாக இருக்கிறது’ என்று மகாகவி இக்பால் எழுதியதைத்தான் நினைத்துக்கொள்கிறேன்!’’

விடைபெறும்போது அவர் இப்படிச் சொல்கையில், ‘இன்னும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களா?’ என வியந்து நிற்கிறோம். ‘‘ஒரு குழந்தை போல என்னைப் பார்த்துக்கிட்டாரு கவிஞரு. அவருக்கு இப்படி ஆன பிறகு அவரை நான் எப்படி பார்த்துக்கப் போறேன் தம்பி!’’ என நிலைகுலைந்து போய் கேட்கிறார் கவிஞரின் மனைவி. நம்மிடம் பதில் இல்லை!

என் உடல்நிலை என்னை பெரிய காரியங்களுக்கு அனுமதிக்கவில்லையே என்ற வருத்தத்தைவிட, வாழ்க்கை எனக்கு அதன் போராட்டங்களுக்கு இடையிலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. போராட முடியாமைதான்எனக்கு துக்கம்.

 நா.கதிர்வேலன்
படங்கள்: ஆர்.கோபால்