தமிழர்களின் நேசத்துக்குரிய லீ!



தன் வாழ்நாளில் நான்கு நாடுகளின் தேசிய கீதத்தைப் பாட நேர்ந்த ஒருவருக்கு ‘என் தேசம் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு சுபிட்சமாக இருக்க வேண்டும்’ என்பதைவிடப் பெரிய லட்சியக்கனவு இருந்துவிட முடியுமா?

சிங்கப்பூரை அப்படி ஒரு கனவோடு செதுக்கியவர் லீ குவான் யூ. கொசுக்கடியும் அழுக்கு வீதிகளும் பசித்த மக்களுமாக இருந்த ஒரு துறைமுக நகரத்தை உலகின் வளமான தேசமாக மாற்றியவர். இன்றைக்கும் ‘ஊரை சிங்கப்பூர் போல மாற்றுவோம்’ என்பதுதான் இந்தியாவில் மட்டுமின்றி, எல்லா நாடுகளிலும் அரசியல் கோஷமாக இருக்கிறது. ‘‘என் வாழ்வையே தியாகம் செய்து இந்த தேசத்தை உருவாக்கினேன்.

சிங்கப்பூரில் ஏதாவது தப்பாக நடந்தால் எனது கல்லறையிலிருந்தும் எழுந்து வருவேன்’’ எனச் சொன்ன லீ, தனது 91வது வயதில் மறைந்திருக்கிறார்.மலேசியாவின் வால் போல நீண்டிருக்கும் ஒரு குட்டித் தீவு சிங்கப்பூர்.

சிறிய மீன் பிடி துறைமுகமாக இருந்தபோது சீனர்கள் நிறைய பேர் வந்து குடியேறினார்கள். பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றி இதைப் பெரிய துறைமுகமாக மாற்றினார்கள். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் கைக்கு மாறியது சிங்கப்பூர். போர் முடிந்ததும் மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி.

சிங்கப்பூரில் குடியேறிய சீன நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்த லீ, பிரிட்டன் சென்று சட்டம் படித்தவர். தாய்மொழியான மாண்டரின் அவ்வளவாகப் பேச வராது. ஜப்பான் நிகழ்த்திய அடக்குமுறையைக் கண்டு கொதித்து அரசியலுக்கு வந்தவர், தன்னைப் போல ஆங்கிலம் படித்த கனவான்களோடு இணைந்து ‘பீப்புள்ஸ் ஆக்ஷன் பார்ட்டி’ என்ற கட்சியை ஆரம்பித்தார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் நடத்தப்பட்ட தேர்தல்களில் வென்று, சிங்கப்பூரின் முதல் பிரதமர் ஆனார்.

மலேசியாவோடு இணைந்தால்தான் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற முடியும் என நம்பினார். இதற்காக மக்களிடம் வாக்கெடுப்பு நடந்தது. ‘மலேசியாவோடு இணைய வேண்டுமா?’ என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்ற பதில் மட்டுமே தரும்படி வாக்குச்சீட்டு இருந்தது. ‘வேண்டாம்’ என்று சொல்வதற்கு ஆப்ஷனே இல்லை.

லீ எப்போதுமே இப்படித்தான்! ஜனநாயகரீதியான சர்வாதிகாரம்தான் அவரது ஸ்டைல். செல்வம் கொழிக்கும் மலேசியாவோடு இணைந்தால் சிங்கப்பூர் வளம் பெறும் என்ற நம்பிக்கையில் இப்படிச் செய்தார். ஆனால் சில மாதங்களிலேயே சீனர்களுக்கும் மலாய்களுக்கும் சிங்கப்பூரில் பெரிய கலவரம் வந்தது. கவலையடைந்த மலேசிய அரசாங்கம், சிங்கப்பூரை தனி நாடாகப் பிரித்து லீயிடம் கொடுத்துவிட்டது. இதை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும்போது லீ தன் வாழ்நாளில் ஒரே முறை கதறி அழுதார்.

மலேசியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையே இருக்கும் குட்டி நாடு. எந்த இயற்கை வளமும் கிடையாது; குடிக்கத் தண்ணீருக்குக்கூட அண்டை நாடுகளிடம் கையேந்த வேண்டும். (இன்றும்கூட மலேசியாவிலிருந்து தண்ணீர் வருகிறது!) பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறியபோது பெரும் நிறுவனங்களும் போய்விட, பெரும் வேலையில்லாத் திண்டாட்டம். வறுமை. இது இனவெறி கும்பல்களை சுலபமாக வளர்த்துவிட்ட சூழல்! இப்படி பூஜ்யத்திலிருந்து கட்டமைக்கப்பட்டது லீயின் சிங்கப்பூர்.

‘‘சிங்கப்பூரின் இயற்கை வளம், எங்கள் மக்களும் அவர்களின் கடின உழைப்பும்தான்’’ என சொல்வார் லீ. உலகிலேயே தொழில் தொடங்குவது சுலபமாக இருக்கும் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கிறது. ஒரே நாளில் எல்லா அனுமதிகளையும் வாங்கிவிட லாம். இதனால் சர்வதேச நிறுவனங்கள் ஆசையாக வந்தன.

இன்று உலகிலேயே அதிக கார்ப்பரேட் நிறுவனங்கள் இருப்பது சிங்கப்பூரில்தான். சிங்கப்பூரில் குறைந்தபட்சக் கூலி என எதுவும் கிடையாது. ‘இப்படி நிர்ணயம் செய்வது போட்டி போட்டு உழைக்கும் திறனைக் குறைத்துவிடும்’ என்பார் லீ. உழைக்கத் தயங்காதவர்களுக்கு சிங்கப்பூர் சொர்க்கம். இன்றைய சிங்கப்பூரில் ஆறில் ஒன்று கோடீஸ்வரக் குடும்பம்.

இது மட்டுமே லீயின் வெற்றி இல்லை. பெரும்பான்மை இனங்கள் சிறுபான்மையினரை விழுங்கிவிடாமல் சமூக அமைதியை ஏற்படுத்தியதுதான் அவரது ஆகப்பெரிய சாதனை! சிங்கப்பூரில் பெரும்பான்மையாக இருப்பது சீனர்கள். லீயும் சீனர்தான். ஆனால் அந்த தேசத்தின் முதன்மையான ஆட்சி மொழி ஆங்கிலம்.

சீனர்களின் மாண்டரின், மலாய் மற்றும் தமிழ் ஆகியவை இணை ஆட்சிமொழிகள். சில கட்சிகள் சீனப் பேரினவாதம் பேசியபோது கடுமையாக ஒடுக்கினார். சட்டத்தின் முன் அனைவரும் சமம். மக்களுக்கு குடியிருப்பு களை அரசே அமைத்துத் தரும். ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே இனத்தவர் மட்டும் இருந்துவிட முடியாது.

இவ்வளவு சீனர்கள், இவ்வளவு மலாய்கள், இவ்வளவு தமிழர்கள் என அனைவரும் இருப்பர். சுத்தமும் பொது ஒழுங்கும் அங்கு சிறப்பு. பொது இடத்தில் எச்சில் துப்பினால் தண்டனை (பபுள்கம் கூட தடை செய்யப்பட்ட அயிட்டம்!), விதிகளை மீறினால் பிரம்படி, போதைக் குற்றங்களுக்கு மரண தண்டனை. சர்வாதிகாரி என விமர்சனம் எழுந்தபோது, ‘‘என் மீது பயம்  வரவில்லை என்றால் என் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை’’ என்றார் புன்னகையோடு!

தோட்டத் தொழிலாளிகளாகவும் கூலிகளாகவும் போன தமிழர்களின் வாரிசுகள் சிங்கப்பூரில் ஜனாதிபதி பதவி வரை உயர முடிந்தது. உலகத் தலைவர்கள் பொதுவாக மற்ற நாடுகள் பற்றி கருத்து சொல்வதில்லை. ஆனால் லீ இந்த விஷயத்திலும் வித்தியாசமானவர். இலங்கையில் ராஜபக்ஷே அரசு நிகழ்த்திய இனப் படுகொலை களைக் கண்டித்த அவர், ‘‘பேரினவாத அரசுகள் வென்றதில்லை. தமிழர்கள் ஒருநாள் உரிமையை நிச்சயம் பெறுவர்’’ என்றார். அதைப் பார்க்கும்வரை அவர் இருந்திருக்கலாம்!

- அகஸ்டஸ்