குட்டிச்சுவர் சிந்தனைகள்!



வீட்டில் வைத்திருந்த கண்ணாடித் தொட்டியில் நீந்தும் மீன்களுக்கு குளிருமென போர்வை போர்த்திவிட அடம் பிடித்த குழந்தையை பார்த்திருக்கிறேன். மரத்தில் இருந்த கூட்டில் இருந்து மொட்டை மாடிக்குத் தவறி விழுந்த அணில் குஞ்சுக்கு தான் சாப்பிடும் பிஸ்கெட்டை ஊட்டிவிட அடம்பிடித்த குழந்தையை நண்பன் ஒருவன் வீட்டில் கண்டிருக்கிறேன்.

வழி தவறி வந்த பட்டாம்பூச்சி ஒன்றை தனது படுக்கையில் படுக்க வைக்க வேண்டுமென அழுது புரண்ட பெண் குழந்தையின் கதையைக் கேட்டிருக்கிறேன்.

‘சாக்லெட் வேணுமா? காசு வேணுமா?’ என்றதுக்கு ‘சாக்லெட்தான் வேணும். அதுவும் ரெண்டு வேணும். இன்னொண்ணு எங்க தம்பி பாப்பாவுக்கு!’ என்று வாழ்க்கையைச் சொல்லிச் சென்றது ஒரு குழந்தை. தன் தங்கச்சி பாப்பா தலையை இடித்துக்கொண்ட கதவை மிரட்டிக்கொண்டிருந்த குட்டி அண்ணனைக் கண்டிருக்கிறேன். காலக்குழப்பத்தோடு ‘நாளைக்கு நாங்க ஊருக்கு போறோம், நேத்துதான் வருவோம்!’ என பேசும் குழந்தையின் மொழிகள் திருவாசகத்தை விட திரு வாசகம்.

குழந்தைகள் ஹோம் வொர்க் செய்யும்போது, எதையோ யோசித்துக்கொண்டு பென்சிலை வாயில் வைத்துக் கடிப்பது எந்த ஓவியனும் வரையாத அழகு. சிறு குழந்தைகள் சரியாக கை கூப்பக்கூட தெரியாமல் கடவுளைத் தொழுவது அந்தக் கடவுளையே அந்த குழந்தைகளுக்கு பக்தனாக்கி விடுகிறது.

கனவில் சிரிக்கும் குழந்தைகள் எல்லாம் நம் கவலை கொல்லும் டாக்டர்கள். வீட்டுச் சுவர்களில் விவரம் தெரியா வயதுகளில் குழந்தைகள் கிறுக்கி வைத்ததுதான் கடவுள் போட்ட ஆட்டோகிராப். இப்படி குழந்தைகள் நம்மளை எல்லா நேரங்களிலும் சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாம்தான் அவர்களை சந்தோஷப்படுத்த காசு முக்கியமென எல்லா சந்தோஷங்களையும் இழந்துகொண்டிருக்கிறோம்.

மகா பாரதமான நம்ம நாட்டில், மகாபாரத காலத்தில் ஆரம்பிச்சு இப்போ வரை குடி என்பது கொண்டாடும் விஷயமாக இருக்கிறது. உலகிலேயே சாராயக் கடைகளை அரசாங்கமே ஏற்று நடத்துவது நம்ம நாட்டில்தான். அளந்து குடித்தது, அளவாய்க் குடித்தது என சந்தோஷத்துக்கு குடித்தது போய், இப்போ மொத்த சம்பாத்தியத்தையும் குடிக்குமளவு நாமளும் மாறிப் போயிட்டோம். மாநில அரசாங்கங்கள் போடும் தொலைநோக்குத் திட்டங்களையும், தொடரும் கடைகளின் எண்ணிக்கைகளையும் பார்த்தா, அடுத்த 10 வருடங்களில் நாட்டில் படிக்காதவனும் இருக்க மாட்டான்... குடிக்காதவனும் இருக்க மாட்டான்னு நினைக்கிறேன்.

பள்ளி மாணவர்கள் எல்லாம் கூட குடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால பார்களை மூடுங்க, முடியலன்னா பள்ளி களை மூடுங்கங்கிற மூடுக்குக் கூட நம்மாளுங்க வந்தாச்சு. இந்த நேரத்துல போயி சினிமா தியேட்டர் ஸ்லைடுல ஆரம்பிச்சு, டி.வி சீரியல் காட்சிகளின் கீழ, பாட்டிலுக்கு மேலன்னு ‘குடிக்காதே’ன்னு அட்வைஸ் பண்றது இருக்கே... அதுதான் ரோட்டுல ஆணிய போட்டுட்டு, பங்ச்சர் கடை வச்சு போணி பண்ற டெக்னிக்கு.

மொதல்ல நான் ஒண்ணு கேட்கிறேன்... ‘குடி’னு எந்த குடிகாரனாவது உங்களுக்கு அட்வைஸ் பண்றானா? அப்புறம் ஏன்யா, ‘குடிக்காதே’ன்னு அவனை டார்ச்சர் பண்றீங்க? மொதல்ல குடிச்சவன்கிட்ட இருக்கிற பங்ச்சுவாலிட்டி படிச்சவன்கிட்ட இருக்கா? சொல்லுங்க... இருக்கா? காலையில பத்து மணியானா போதும்... டான்னு டாஸ்மாக் வாசல்ல நிக்கிறானே... அவன் எங்க? சினிமா, டிராமா, கல்யாணம்னு எல்லா இடத்துக்கும் லேட்டா கிளம்பற நாம எங்க? அன்னைக்கு நைட் குடிச்சே ஆகணும்னு முடிவெடுத்து, அந்த நாளுக்கு ஒரு வேலை தேடி, அதுக்காக சம்பாதிக்கிற ஒரு குடிகாரன் எங்க?

எப்படியும் சம்பளம் வந்துடும்னு ஆபீஸ்ல பெஞ்சு தேய்க்கிற நாம எங்க? காசைத் தூக்கி எறிஞ்சு போதையாகுற குடிகாரன் எங்க? காசை சேர்த்து வைக்கிறேன்னு காசுக்கே போதையாகுற நாம எங்க? பாதாள சாக்கடை திறந்திருந்து, அதுல ஒருத்தன் விழுந்தா அது அவன் குற்றமா? இல்லை அதை தொறந்து வச்சிருந்த கார்ப்பரேஷன் குற்றமா? இனிமேலாவது குடிக்கிறவனை தொந்தரவு பண்ணாம, கவர்மென்ட்டை தொந்தரவு பண்ணுங்க. போங்கய்யா போங்க, போய் புள்ளை குட்டிங்களை குடிக்க வைங்க... சாரி, படிக்க வைங்க!

கதை: எங்களின் இதயதெய்வம், எங்கள் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், ஏழைகளின் நம்பிக்கை, கஷ்டங்களின் விடிவெள்ளி, மக்கள் மனங்களின் முதல்வர், ரத்தத்தின் ரத்தங்களின் ஒரே சொத்து, அன்பின் ஆணிவேரே, பணிவின் காற்றே, பாசத்தின் ஊற்றே, உங்களை வணங்கி இந்த பட்ஜெட் உரையை ஆரம்பிக்கிறேன். நம்ம மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. வளர்ச்சிப் பாதையில் இருந்த ஸ்பீட் பிரேக்கர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் 100 மீட்டருக்கு ஒரு தெரு விளக்கு பொருத்தப்பட்டு, அதன்...
சபாநாயகர் : மதிய உணவுக்கு நேரமாயிடுச்சு. பட்ஜெட் உரை மதிய உணவுக்குப் பிறகு தொடரும்...

எங்களின் இதயதெய்வம், எங்கள் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், ஏழைகளின் நம்பிக்கை, கஷ்டங்களின்  விடிவெள்ளி, மக்கள் மனங்களின் முதல்வர், ரத்தத்தின் ரத்தங்களின் ஒரே சொத்து, அன்பின் ஆணிவேரே, பணிவின் காற்றே, பாசத்தின் ஊற்றே, உங்களை வணங்கி இந்த பட்ஜெட் உரையை ஆரம்பிக்கிறேன். நம்ம மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. வளர்ச்சிப் பாதையில் இருந்த ஸ்பீட்பிரேக்கர்கள்...

சபாநாயகர் : மாலை ஐந்து மணியாகிவிட்டபடி யால், பட்ஜெட் உரை நாளை தொடரும்...

எங்களின் இதயதெய்வம், எங்கள் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், ஏழைகளின் நம்பிக்கை, கஷ்டங்களின் விடிவெள்ளி, மக்கள் மனங்களின் முதல்வர், ரத்தத்தின் ரத்தங்களின் ஒரே சொத்து, அன்பின் ஆணிவேரே, பணிவின் காற்றே, பாசத்தின் ஊற்றே, உங்களை வணங்கி இந்த பட்ஜெட் உரையை ஆரம்பிக்கிறேன். நம்ம மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. வளர்ச்சிப் பாதையில் இருந்த...

சபாநாயகர்: மதிய உணவுக்கு நேரமாயிடுச்சு, பட்ஜெட் உரை மதிய உணவுக்குப் பிறகு தொடரும்...

நீதி: சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா?

ஆல்தோட்ட பூபதி