ஏன் தோற்றது இந்தியா?!



உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியா தோல்வியடைந்த அடுத்த நிமிடம், கேப்டன் டோனியின் வீட்டுக்கு பெரும் போலீஸ் படை அனுப்பி பாதுகாப்பு தர வேண்டியிருக்கிறது. இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக தன் நாக்கை அறுத்துக் கொண்டார் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்ற இளைஞர்.

ஆந்திராவைச் சேர்ந்த சாணக்யா என்பவர், முழங்காலில் திருப்பதி மலை ஏறி வேண்டிக் கொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் போட்டுக்கொண்டு நேரில் மேட்ச் பார்க்கப் போனவர்கள் நூற்றுக்கணக்கான இந்தியர்கள். கிரிக்கெட் ஒரு மதமாகவும், பிளேயர்கள் கடவுளாகவும் ஆகிவிட்ட தேசத்தில் ஏமாற்றங்களைத் தவிர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன செய்ய வேண்டும்?

பதினோராவது உலகக்கோப்பை தொடர் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. தென் ஆப்ரிக்கா - நியூசிலாந்து மோதிய முதல் அரை இறுதி ஆட்டம் கிறுகிறுக்க வைத்துவிட்டது. முதல் முறையாக ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு என்பதால் இரண்டு அணிகளுமே ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவோடுதான் விளையாடின. நடுவில் மழை வந்து ஏழு ஓவர்களை ஏப்பம் விட்டிருக்காவிட்டால் தென் ஆப்ரிக்க ஸ்கோர் 350+ எட்டி யிருக்கும். என்ன செய்வது... அவர்களுக்கு ‘தண்ணில கண்டம்’ என்பதை யாரால் மாற்ற முடியும்?

பதிலுக்கு நியூஸி 149/4 என சற்று தடுமாறியபோது, இம்முறை தென் ஆப்ரிக்கா சாதித்துவிடும் என்றே தோன்றியது. எலியட் - ஆண்டர்சன் ஜோடி 5வது விக்கெட்டுக்குப் போராட, தென் ஆப்ரிக்க வீரர்களை ‘சோக்கிங் சிண்ட்ரோம்’ பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்தது. பதற்றத்தால் ஃபீல்டிங்கில் சொதப்பி எளிதான கேட்ச்களைக் கூட முட்டி மோதி விட்டுத்தொலைத்தார்கள்.

தோல்வியின்போது தென் ஆப்பிரிக்க வீரர்கள் துக்கம் தொண்டையை அடைக்க, தேம்பி அழுதது பரிதாபம். நாக் அவுட் சுற்றில் வென்றதே இல்லை என்ற மோசமான வரலாற்றை இந்த முறை மாற்றி அமைத்தாலும், கோப்பையை வெல்ல அந்த அணி இன்னும் எத்தனை காலம் தவமிருக்க வேண்டியிருக்குமோ தெரியவில்லை.

அடுத்த அடி இந்தியாவுக்கு. ஏழுக்கு ஏழு என அசுரத்தனமாக வெற்றி வேட்டையாடிய இந்தியா, சிட்னியில் மண்ணின் மைந்தர்களிடம் மண்டியிட்டது பெரும் சோகம். டாஸ் போனதிலேயே லாஸ் வரப் போகும் சமிக்ஞைகள் தெரிந்தன. துவக்கத்தில், ‘400 தொட்ருவாங்களோ!’ எனும்படிதான் இருந்தது ஆஸ்திரேலியாவின் அதிரடி. ஸ்மித் 105, ஃபின்ச் 82 எனக் கலக்கினாலும் மிடில் ஓவர்களில் அவர்களையே அடக்கி வாசிக்க வைத்தார்கள் நம் பவுலர்கள். இருந்தாலும் கடைசி கட்டத்தில்...

 அதுவும் மிசெல் ஜான்சனை 27 ரன் அடிக்க விட்டது அநியாயம். உமேஷ் நான்கு விக்கெட் வீழ்த்தி னாலும், ஓவருக்கு சராசரியாக 8 ரன் வாரி வழங்கினார். ஷமி, மோகித்தும் கூட ஆஸி. அதிரடிக்கு தப்பவில்லை. பரபரப்பே இல்லாத சேஸிங்... டோனியின் ரன் அவுட்டோடு நம்பிக்கை தகர்ந்தது. ஆனாலும் ஒரு விஷயத்தை உணர வேண்டும்... போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் வெளியான பல கணிப்புகளில், இந்தியாவுக்கு அரை இறுதி சான்ஸைக் கூட யாரும் தந்திருக்கவில்லை. 

சொந்த மண்ணில் சாதிக்கும் இந்திய அணி, அந்நிய மண்ணில் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பது பல கோடி ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது. ஒவ்வொரு வீரரின் பலம், பலவீனங்களை துல்லியமாக அலசிவிட முடிகிற இந்த டெக் யுகத்தில், இந்திய வீரர்களின் பலவீனங்களைச் சரி செய்ய வேண்டிய கடமை கிரிக்கெட் வாரியத்துக்கு இருக்கிறது.

இந்தியாவின் தட்டையான மைதானங்களில் பந்துவீசி பயிற்சி பெறுவதற்காக, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பவுலர்கள் எம்.ஆர்.எஃப் பேஸ் ஃபவுண்டேஷனுக்கு வருகிறார்கள். இந்தியாவின் இளம் வீரர்கள் வெளிநாட்டு மைதானங்களில் திணறாமல் இருக்க, அங்கு போய் பயிற்சி பெறலாமே!

ரெய்னாவுக்கு ஷார்ட் பாலில் கண்டம், இந்திய மிதவேகப் பந்து வீச்சாளர்களுக்கு ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த வராது என்பதெல்லாம் அப்போதுதானே பழங்கதை ஆகும். ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு தொடர் வெற்றியை இந்தியா பெறுவதைக் கண்டு ரசிக்க எத்தனை தலைமுறைக்கு ரசிகர்கள் காத்திருப்பது?

   எது எப்படியோ... உலகக் கோப்பை உற்சவம் முடிந்து ஒரே வாரத்தில் ஐ.பி.எல். அமர்க்களம் ஆரம்பமாவதால் ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள். ஒன்றரை மாதமாக இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து... என்று அடித்துக் கொண்டவர்களுக்கு இனி சி.எஸ்.கே, சன் ரைசர்ஸ், கே.கே.ஆர். என்று பைத்தியம் பிடிக்கப் போகிறது!

-ஷங்கர் பார்த்தசாரதி