20 ரூபாய்க்கு இளநீர்...50 பேருக்கு வேலை...



இளநீர் செயின் ஸ்டோர் நடத்தும் எம்.காம். பட்டதாரி!

உக்கிர வெயிலின் வெம்மை தணிக்க இளநீர் விலையைக் கேட்டால், உடலோடு வயிறும் சேர்ந்து எரிகிறது. சர்வ சாதாரணமாக 40 ரூபாய், 50 ரூபாய் என்கிறார்கள். ஆனால், ஜெயக்குமாரின் சென்னை இளநீர்க் கடையில் இளநீர் குடித்தால் வயிறோடு மனதும் குளிர்கிறது. சிறிதோ, பெரிதோ, எதுவாயினும் 20 ரூபாய்தான். சென்னை முழுவதும் 30 கடைகள் வைத்திருக்கிறார். எல்லாக் கடையிலும் ஒரே விலை.

கடையில் தொங்கும் போர்டில் மொபைல் நம்பர் இருக்கிறது. விற்பனையாளர் விலையை அதிகமாகச் சொன்னால் அழைத்து புகார் செய்யலாம். திறந்தவெளி தள்ளுவண்டி வணிகத்தை ஒழுங்குக்கு உட்படுத்தி, செயின் ஸ்டோர் லெவலுக்கு நவீனப்படுத்தி, மக்களின் வயிற்றில் இளநீர் வார்க்கும் ஜெயக்குமார், எம்.காம் பட்டதாரி. கடைகளை நிர்வகிக்கும் ஜெயக்குமாரின் மனைவி பிட்ஸி, சி.ஏ. முடித்தவர். சூப்பர்வைசர், கலெக்ஷன் ஸ்டாஃப், ஆன்லைன் ஆர்டர், எஸ்.எம்.எஸ் ஆர்டர் என ஏக நேர்த்தியாக இளநீர்க் கடை நடத்துகிறார்கள்.
மீன் வணிகத்தில் இருந்த ஜெயக்குமார் இளநீர் வியாபாரத்துக்கு வந்தது சுவாரசியமான கதை.

''அப்பா மீன் ஏற்றுமதி செய்யறார். நானும் அப்பாவோட பிசினஸைப் பாத்துக்கிட்டிருந்தேன். எப்போதாவது இளநீர் குடிக்கிறதுண்டு. 30, 40 ரூபாய்க்குக் குறைஞ்சு இளநீர் கிடைக்கிறதே இல்லை. சில நேரங்கள்ல விலைக்குப் பயந்தே குடிக்காமப் போயிருக்கேன். விருத்தாசலம் பக்கத்துல கோனாங்குப்பம் பகுதியில எங்க குலதெய்வம் கோயில் இருக்கு. ஒருமுறை குடும்பத்தோட அங்கே போயிருந்தோம்.

கோயிலுக்கு எதிர்ல ஒரு இளநீர்க் கடை. எல்லாம் பெரிய பெரிய இளநீர்... விலை 20 ரூபாய்தான். ஆச்சரியமா இருந்துச்சு. சென்னையில இருந்து 200 கி.மீ. தள்ளியிருக்கிற ஊர்ல பாதி விலைக்கு இளநீர் கிடைக்குதுன்னா உண்மையிலேயே இளநீர் விலை என்னன்னு ஆராய்ச்சியில இறங்கினேன். 

வருஷா வருஷம் வெயில் அதிக மாகிக்கிட்டே இருக்கு. இளநீர் விலை அதிகமா இருக்கறதால, மக்கள் செயற்கைக் குளிர்பானங் களைக் குடிக்கிறாங்க. அதனால ஏகப்பட்ட பிரச்னை. வாங்க முடியற விலைக்கு இளநீரை வித்தா மக்கள் குளிர்பானங்கள்ல போய் விழ மாட்டாங்க. மத்தவங்களுக்கு போய் புத்தி சொல்றதை விட நாமளே மாற்றத்தைத் தொடங்கி வச்சா என்னன்னு யோசிச்சேன். 20 ரூபாய்க்கு இளநீரைத் தரணும்; நிறைய பேருக்கு வேலையும் தரணும். 

விவசாயிகள் கையில இருந்து மூணு கை மாறித்தான் வியாபாரி கிட்டே இளநீர் வருது. இடையில டிரான்ஸ்போர்ட், ஏத்துற கூலின்னு பல செலவுகள் இருக்கு. இதுபோக வியாபாரி லாபம் வச்சு விக்கணும். பெரிய அளவுல செஞ்சா நிச்சயம் கம்மியா விற்கலாம்.உடனடியா ஆள் தேட ஆரம்பிச்சேன். 3 பேர் கிடைச்சாங்க.

3 மீன்பாடி வண்டி வாடகைக்கு எடுத்தேன். மூணாவது ஏஜென்ட் ஒருத்தர்கிட்ட 300 இளநீர் வாங்கினேன். மயிலாப்பூர், மெரினா பீச், பட்டினப்பாக்கம் பகுதிகள்ல கடைகளை ஆரம்பிச்சோம். முதல்ல நிறைய நஷ்டம்தான். ஆனா மக்கள் கொடுத்த வரவேற்பு உற்சாகமா இருந்துச்சு.

கடைகளோட எண்ணிக்கையை அதிகமாக்கினாதான் இதைத் தொடர்ந்து செய்யமுடியும்னு புரிஞ்சுது. '10 ஆயிரம் ரூபாய் சம்பளம், ஒரு இளநீருக்கு 1 ரூபாய் கமிஷன், முன் அனுபவம் தேவையில்லை, இளநீர் கடைக்கு ஆள் தேவை’ன்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்தேன். நிறைய பேர் வரத் தொடங்கினாங்க. என் எண்ணத்துக்குப் பொருந்திப் போற ஆட்களை மட்டும் தேர்வு செஞ்சேன். பாண்டிச்சேரி, கடலூர், மரக்காணம், கூவத்தூர் பகுதிகள்ல இருந்து சென்னைக்கு இளநீர் வருது. அந்தப்பகுதி ஏஜென்ட்கள்கிட்ட நேரடியா இளநீர் வாங்கினேன்.

வழக்கத்தை விட 1 ரூபா கம்மியா கிடைச்சுச்சு. கடைகள் நிறைய வந்தாச்சு. ஒரு பிராண்ட் உருவாக்கணும். அடுத்து விலை... 20 ரூபாய்க்கு மேல விற்கக்கூடாது. அதை எல்லாக் கடைகள்லயும் நானே நேரடியா கண்காணிக்க முடியாது. அதனால என்னுடைய மொபைல் நம்பரை எழுதி வச்சேன். அது கஸ்டமரை இன்னும் கடைக்கு நெருக்கமாக்குச்சு. ‘எங்க பகுதிக்குக் கடையைக் கொண்டு வாங்க’ன்னு நிறைய பேர் கூப்பிட்டுச் சொல்லத் தொடங்கினாங்க. இப்ப 30 கடைகள் ஆயிடுச்சு. தினமும் 5000 இளநீருக்கு மேல விற்பனையாகுது.

இதுவரை நஷ்டத்துல போய்க்கிட்டிருந்த வியாபாரம் இப்போ மேலே வந்திருக்கு. இந்த வருட இறுதிக்குள்ள 100 கடைகளாவது திறக்கணும். இதுதவிர வேறுசில திட்டங்களும் இருக்கு. விவசாயிகள்கிட்ட நேரடியா கொள்முதல் பண்ண முடிஞ்சிட்டா விலை நம்ம கன்ட்ரோலுக்குள்ள வந்துடும்.

அப்போ இன்னும்கூட விலையைக் குறைக்கமுடியும். இளநீர் மட்டை இப்போதைக்கு குப்பையாத்தான் போகுது. ஆனா அதை இயற்கை வேளாண்மை, எரிபொருள்னு பல விஷயங்களுக்குப் பயன்படு¢த்தலாம். அதுவும் காசாயிடுச்சுன்னா இன்னும் சுலபமாயிடும்...’’ - நம்பிக்கையோடு பேசுகிறார் ஜெயக்குமார்.

இந்த வெற்றி ஜெயக்குமாருக்கு எளிதாக சாத்தியமாகவில்லை. எதிர்ப்புகள், பிரச்னைகள் அனைத்தையும் அன்பால் கடந்திருக்கிறார். பிற வியாபாரிகளுக்கு தொந்தரவு இல்லாத வகையில் தன் கடையை அமைக்கிறார். எங்கிருந்தாலும் வாடிக்கையாளர்கள் தேடிச் செல்கிறார்கள்.

‘‘நாமெல்லாம் கடவுளோட வேலைக்காரங்க. நம்மால மத்தவங்களுக்கு என்ன பலன்னு யோசிக்கிறவன் நான். மீன் பிசினஸ்ல கூட மனசாட்சிக்கு விரோதமா 5 ரூபா அதிக விலை வச்சு விக்க மனசு ஒப்புக்காது. அந்த உந்துதல்லதான் இளநீர் வியாபாரத்தை ஆரம்பிச்சேன். விலை கம்மியா கொடுக்கிறது ஒரு மகிழ்ச்சின்னா, 50 பேருக்கு வேலை கொடுக்க முடிஞ்சது இன்னொரு மகிழ்ச்சி. இன்னும் எத்தனை பேர் வந்தாலும் என்கிட்ட வேலை ரெடியா இருக்கு...’’அவர் புன்னகையும், வார்த்தைகளும் இளநீராய் இனிக்கின்றன.

ஏப்ரீல்

பறவை மனிதன்


பறவை போன்ற இறக்கைகளுடன் சின்னஞ்சிறு மனித உடல் தொல்பொருள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக போட்டோ ஆதாரமே கிளம்பியது 2007 ஏப்ரலில். கிளப்பிவிட்டது லெபானன் சர்கிள் எனும் மேஜிக் கம்பெனி. ரோம் நகரத்தில் வாக்கிங் போன நபர் இதைக் கண்டெடுத்ததாக அவர்கள் சொன்ன தகவல் செம ரியலாக இருந்ததால், ‘இது ஏப்ரல் ரீல்’ எனச் சொன்ன பிறகும் பொதுமக்கள் நம்பவில்லை!

வெ.நீலகண்டன்
படங்கள்: புதூர் சரவணன்