செம வரவேற்பில் செல்வ மகள் திட்டம்!



தெரிஞ்ச விஷயம் தெரியாத விஷயம்

‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்...’ என ஒரு மேட்டர் உள்ளதென்றால் இப்போதைக்கு அது போஸ்ட் ஆபீஸ் க்யூவில் நிற்பதுதான். சமீப காலமாக அட்ரஸ் சொல்பவர்களுக்கு அடையாளமாய் மட்டுமே இருந்து வந்த அஞ்சல் நிலையங்கள் இப்போது பெற்றோர்களின் மோஸ்ட் வான்டட். இதற்கெல்லாம் காரணம், பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமான ‘சுகன்ய சம்ரிதி’. தமிழில், ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டம்’.

‘மிஸ் பண்ணிடாதீய... அப்புறம் வருத்தப்படுவீய’ என வாட்ஸப்பில் அலர்ட் வரும் அளவுக்கு இந்தத் திட்டத்தில் அப்படி என்ன இருக்கிறது? சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலான மெர்வின் அலெக்ஸாண்டரிடமே கேட்டோம்...‘‘இது 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம்.

 அவர்களின் திருமணம், கல்வி போன்றவற்றில் பெற்றோரின் சுமைகளைக் குறைப்பதற்காக இந்த வருடம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அறிமுகமாகி இரண்டு மாதங்கள் ஆனாலும் சமீபத்தில் இது மிகப் பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. சென்னையில் மட்டுமே கடந்த மாதம் சுமார் 50,000 பேர் இந்தத் திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.

10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோரோ அல்லது அவர்களது பாதுகாவலர்களோ இந்த சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்கலாம். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதால் இந்த வருடம் மட்டும் 11 வயது வரை உள்ள பெண் குழந்தைகளையும் இதில் சேர்த்துக்கொள்கிறோம்.

அதற்காக பெண் குழந்தைகளின் பெயர்களைப் பயன்படுத்தி நாமினியாக யாரும் இந்தக் கணக்கைத் துவங்க முடியாது. இந்தத் திட்டத்தின் நன்மைகள் அனைத்தும் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே போக வேண்டும் என்பதே குறிக்கோள். அதனால்தான் இந்தக் கெடுபிடிகள்’’ என்றவர், இந்தத் திட்டத்தில் உள்ள மற்ற சில விதிமுறைகளையும் வரிசைப்படுத்தினார்.

இரண்டுதான்...‘‘ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகள் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேரலாம். அதற்கு மேலுள்ள குழந்தைகள் சேர முடியாது.’’எவ்வளவு செலுத்தலாம்?‘‘இந்தத் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட ஒரு கணக்கு கிட்டத்தட்ட சேமிப்புக் கணக்கு போலத்தான். தினசரியோ அல்லது மாதாமாதமோ எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் இதில் செலுத்தலாம்.

ஆனால் 100, 200, 300 என்று ரவுண்டாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 100 ரூபாய். மொத்தமாக ஒரு வருடத்தில் செலுத்தப்பட்டிருக்கும் பணத்தைக் கணக்கிட்டால் குறைந்தபட்சம் 1000 ரூபாய் வரவேண்டும். இல்லையேல் அந்தக் கணக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படும். ரூ.50 அபராதத் தொகையோடு இப்படிப்பட்ட கணக்கை மீண்டும் உயிர்ப்பிக்கவும் முடியும். ஒரு வருடத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரைதான் செலுத்தலாம்.’’

எப்போது எடுக்க முடியும்?

‘‘எந்தப் பெண் குழந்தையின் பெயரில் கணக்கு துவங்கப்பட்டதோ அந்தக் குழந்தைக்கு 18 வயதாகும் வரை இந்தக் கணக்கில் உள்ள தொகையை யாராலும் எடுக்க முடியாது. அதாவது, 10 வயதுப் பெண் குழந்தை பெயரில் துவங்கப்பட்டிருந்தாலும் மினிமம் 8 வருடத்துக்கு இந்தக் கணக்கைத் தொட முடியாது.

18 வயதுக்குப் பிறகு உயர் கல்வி உள்ளிட்ட செலவுகளுக்காக செலுத்தப்பட்ட மொத்தத் தொகையில் இருந்து பாதியைப் பெற முடியும். திருமணம் என்றால் கணக்கை முடித்துக்கொண்டு முழுத்தொகையையும் பெற்றுக்கொள்ள முடியும். கல்வியோ, திருமணமோ அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பது அவசியம்!’’நீட்டிக்கலாம்!

‘‘இந்தத் திட்டத்தின் மொத்த முதிர்ச்சிக் காலம் 21 ஆண்டுகள். ஆனால், கணக்குத் துவங்கியது முதல் குறைந்தபட்சம் 8 வருடங்களாவது இதில் பணம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். 14 வருடங்கள் வரை பணம் செலுத்தலாம். ஒருவேளை 14 வருடங்களுக்கு மேலும் இந்தக் கணக்கில் பணம் போட வேண்டும் என்று விரும்பினால், அதற்கும் வழி வகை உண்டு. அஞ்சலகத்தில் முறையாக விருப்பத்தைத் தெரிவித்து விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தக் காலத்தை நீட்டிக்கலாம்.’’வட்டி எவ்வளவு?

‘‘இந்தச் சேமிப்புத் திட்டத்தில் செலுத்தப்படும் பணத்துக்கு வருட வட்டி 9.1 சதவீதம் கொடுக்கப்படுகிறது. அஞ்சலகங்களது சேமிப்புத் திட்டங்களில் சீனியர் சிட்டிசன் சேமிப்புக் கணக்குக்கு மட்டுமே இதற்கு இணையான வட்டியைக் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தில் ஒரு வருடத்தின் அதிகபட்ச சேமிப்பு லிமிட்டான ஒன்றரை லட்ச ரூபாயை ஒரே தடவையாகச் செலுத்தினாலும் அதற்குரிய வட்டியை சேமிப்பாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். பெண்ணுக்கு 18 வயதாகும்போது, இந்த வட்டித் தொகையை மொத்தமாகவோ அல்லது மாதாமாதமோ பெற்றுக்கொள்ளலாம்!’’
எப்படித் துவங்குவது?

‘‘திட்டத்தில் இணைய விரும்பும் பெற்றோர்கள் அல்லது கார்டியன்கள், தங்கள் வீட்டு முகவரிக்கான ஆதாரம், பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், அல்லது பள்ளிச் சான்றிதழ் போன்ற ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வீட்டுக்கு அருகில் இருக்கும் எந்த அஞ்சலகத்திலும் இந்தக் கணக்கைத் துவங்கலாம். இந்தச் சேமிப்புத் திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது’’ என்றார் அவர்.

வெகு சீக்கிரமே அஞ்சல் துறை பல்வேறு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் இந்தத் திட்டம் பற்றிய விழிப்புணர்வைச் செய்ய இருக்கிறதாம். எனவே, இனி குழந்தைகள் ‘பென்சில் வாங்கிக் கொடு... பேனா வாங்கிக் கொடு’ என்பதைப் போல ‘செல்வ மகள் திட்டத்தில் சேர்த்து விடு!’ என்றும் கேட்கலாம்!

- டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்