அழியாத கோலங்கள்



சாருஹாசன் - ஓவியங்கள்: மனோகர்

கமல் பற்றி எழுதும்போது சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி சொல்லாமல் முடிக்க முடியாது. மிகச் சரியாக 40 ஆண்டு களுக்கு முன்... நான்  சென்னைக்கு இடமாற்றம் ஆன புதிதில் ஒரு நாள் கமலை சந்திக்கப் போனபோது இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களின் ஷூட்டிங்கைப்  பார்க்க நேர்ந்தது. ஒரு மாடியில், மேலிருந்து கீழே அடிக்கும் சில விளக்குகளை ஒளிர விட்டுக்கொண்டிருந்தார் கேமராமேன். ‘பகலில்  எடுக்கும் படத்துக்கு ஏன் மாடியிலிருந்து கீழ் நோக்கி வெளிச்சம் அடிக்கிறார்கள்’ என்று புரியாத பரமக்குடி வக்கீல் அதைப் பார்க்கிறான்.
அன்று தாடியுடன் ஒரு புதிய நடிகர், ஃபுல் சூட் அணிந்தபடி நின்று பேசுகிறார். அதைப் படமாக்கி முடித்துவிட்டு, அதற்குப் பின் கமல்  மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போலவும், மோட்டார் சைக்கிள் பில்லியனில் அந்த தாடி வைத்த ஃபுல் சூட்காரர் உட்கார்ந்து கமலுடன்  பேசுவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன.



அந்த ஃபுல் சூட் பேர்வழிதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்தக் காட்சிகள் படமாக்கி முடித்ததும், மறுபடி வந்து இருவரையும் நிற்க  வைத்து பேசும் காட்சிகளைப் படமாக்கினார் இயக்குநர் சிகரம். அன்று கமல் என்னிடம் சொன்னது, ‘‘இந்த மனிதன் ஒரு எக்ஸ்ட்ரா அல்ல...  எக்ஸ்ட்ராடினரி நடிகன். வெகு சீக்கிரமே இவர் மிகப் பிரபலமாகும் வாய்ப்பு இருக்கிறது’’ என்பது. அதன்பின் ஒரு நாள்... பிரபல சினிமா  இதழான ஃபிலிம் ஃபேர் போட்டோகிராபரும் அவருடன் எழுத்தாளர் எஸ்.என்.நாராயணன் என்பவரும் சேர்ந்து பல நடிகர், நடிகைகளை  கமல் வீட்டில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அன்று கே.பாலசந்தர் அவர்களின் ‘மூன்று மூடிச்சு’ படத்தின் காட்சிகள்  கமல் வீட்டு மாடியில் படமாக்கப்பட்டன. நான் தற்செயலாக அங்கு இருந்தேன். எழுத்தாளர் நாராயணனிடம் ரஜினியை சுட்டிக் காட்டி,  ‘‘இவர் படத்தை எடுத்து, ‘சிறந்த நடிகன் ஆவார்’ என்று தலைப்பிட்டு வெளியிடுங்கள்’’ என்றேன்.

அன்று ரஜினிகாந்த் கமலின் நண்பர் என்ற முறையில் எனக்கு நெருங்கிய பழக்கமே தவிர, அவர் நடிப்பு பற்றி சிந்திக்கவில்லை. பின்னாளில்  ஒரு பத்திரிகைப் பேட்டியில் ரஜினி சொல்லியிருந்தார், ‘‘அன்று கமலின் சகோதரர் சொன்னதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டேன். அது  உண்மையாகிவிட்டது’’ என்று! அது என் கணிப்பு அல்ல... கமலின் கணிப்பு என இன்றுதான் ஒப்புக்கொள்கிறேன். அது எம்.ஜி.ஆரும்  சிவாஜியும் கொடி கட்டிப் பறந்த காலம்... அன்று ஒரு பிரபல ஆங்கிலப் படத்தின் கதையை படமாக்கும் யோசனையை கமலிடம்  சொன்னபோது, ‘‘இந்த மாதிரி ஸ்டன்ட் நடிப்பை மக்கள் ஒப்புக்கொள்வதற்கு குறைந்தபட்சம் நடிகர் ஜெய்சங்கர் அளவாவது புகழ்பெற்ற  ஹீரோ வேண்டும். இன்னும் கொஞ்ச நாள் போனால், ரஜினியை வைத்து வேண்டுமானால் எடுக்கலாம். நான் இப்படி முழுக்க முழுக்க  ஸ்டன்ட் படத்துக்கு ஒத்து வர மாட்டேன்!’’ என்று தம்பி கமல் மறுத்தது இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
       
‘எது சரி... எது தவறு...’ என்று நாம் முடிவு செய்யும் முன் ஆயுள் முடிந்துவிடுகிறது, அல்லது  சமூக  நியதிகளே மாறி விடுகின்றன. 1853ம்   ஆண்டில்  கார்ல்  மார்க்ஸ் என்ற  அறிஞர்  ஜெர்மனியில்  சிந்திக்கவும்  எழுதவும் வாய்ப்பின்றி  இங்கிலாந்து வந்து,   லண்டனில்   உட்கார்ந்து  ‘டாஸ் காபிடல்’  என்ற நூலை  எழுதி  வைத்தார். அவருடைய பரம  எதிரிகள் கூட  மறுத்தாலும்  மறக்க முடியாத ஒரு  படைப்பு அது. (பொருளாதாரத்தையும் அரசியலையும் பிணைக்கும் விஷயங்களைப் பேசும் இந்நூல் ‘மூலதனம்’ என தமிழிலும்  வந்திருக்கிறது. கம்யூனிஸ்ட்களுக்கு அரிச்சுவடி என்பார்கள் இதனை!)

1968ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நான் சென்னை வந்தபோது கமல், ‘‘ ‘டாஸ் காபிடல்’ படித்திருக்கிறாயா?’’ என்று கேட்டார். நான்  பலமுறை படிக்க முயற்சித்திருக்கிறேன். பிரபல காங்கிரஸ்காரரின் மகன் என்பதால் இடதுசாரிக் கட்சி என்னிடம் அதிகம் ஒட்டவில்லை.  நான் பெரியாரின் மாணவனாக ஒரு ஏகலைவன் போல் பாடம் கற்றவன். இன்று நினைத்துப் பார்க்கும்போதுதான், கமல் தர்க்க ரீதியாகச் சிந்தித்து சொன்ன பல விஷயங்கள் பின்னாட்களில் தொடர்ந்து நடந்தது புரிகிறது. கமல் ரசிகர்களில் பலரே இதை ‘ஜோசியம்’  என்பார்கள். 200 ஆண்டுகளுக்கு முன் பிறந்த சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி Origin of Species என்ற புத்தகத்தில் ‘குரங்கிலிருந்து  பிறந்தவன் மனிதன்’ என்ற கருத்தைச் சொல்லும்போது, ‘An answer arrived by a Logical process of Thinking will have an Objective Reality’  என்றார். பகுத்தறிவு சார்ந்த சிந்தனையில் வரும் முடிவுகள் வெளியுலகில் உண்மையாக ஒரு நாள் தோன்றும். ஒருவேளை நான் சொல்லும்  ‘இல்லை’ என்ற விடையை விட, ‘இருந்தால் நன்றாக இருக்கும்’ என்ற கருத்து சற்றே உயர்வாகவும் இருக்கலாம்.

"அன்று கமல் ரஜினி பற்றி என்னிடம் சொன்னது, ‘‘இந்த  மனிதன் ஒரு எக்ஸ்ட்ரா அல்ல... எக்ஸ்ட்ராடினரி நடிகன். வெகு சீக்கிரமே இவர் மிகப் பிரபலமாகும் வாய்ப்பு இருக்கிறது’’ என்பது!"

(நீளும்...)