ஆல்கஹாலை விட்டேன்... ஆல் இஸ் வெல் ஆனேன்!



‘மகாநதி’ சங்கர் எமோஷனல்!

காமெடி ரௌடிக்கும் காமெடி இன்ஸ்பெக்டருக்கும் அளவெடுத்து செய்த ஆளு ‘மகாநதி’ சங்கர். கமலின் ‘மகாநதி’யில் முரட்டு ஜெயிலராக  இந்தப் பெயர் பெற்றவர். ‘பாட்ஷா’வில் கூட ரஜினி ஃப்ரெண்ட். ‘‘வணக்கம் தல! புது வண்ணாரப்பேட்டையில இருக்கு வீடு...  தண்டையார்பேட்டை தாண்டினதும் போன் பண்ணுங்க... வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்!’’ என்கிறார் பணிவாக! வட சென்னை நெரிசலுக்குள்  பக்கா மல்லுவேட்டி மைனர் லுக்கில் புல்லட் வலம் வர தனி தைரியம் வேண்டும். அந்த தைரியம் சங்கருக்கும், அதில் ஏறிக்கொள்ளும்  தைரியம் நமக்கும் இருந்தது.



‘‘இது நம்ம ஏரியா தல. பொறந்து வளர்ந்ததெல்லாம் இங்கதான். அப்பாவுக்கு ஹார்பர்ல வொர்க். ஒரு அண்ணன், ரெண்டு தம்பிங்க, ஒரு  தங்கச்சி. அப்பாவுக்கு அப்புறம் அவர் வேலையை அண்ணன் கவனிக்கறாரு. எனக்கு விளையாட்டுலதான் புத்தி போச்சு. சைக்கிளிங், நீச்சல்  எல்லாத்துலயும் துறுதுறு. அஞ்சாங்கிளாஸ் வரை பரீட்சையில பசங்க பக்கத்து பக்கத்துல உக்கார்ந்தாங்க. காப்பி அடிச்சு பாஸ் பண்ணினேன்.  ஆறாங்கிளாஸ்ல தனித்தனியாக்கிட்டாங்களா... படிப்பே பிடிக்கல! நாய் கடிச்சதை சாக்கா வச்சி படிப்புக்கே முழுக்கு போட்டுட்டேன். ஆனா,  ஸ்போர்ட்ஸை விடல. நிறைய விஷயங்களை குரு இல்லாமலே கத்துக்கிட்டேன். சிலம்பமும், பாக்ஸிங்கும் குருநாதர் வச்சு முறைப்படி  கத்துக்கிட்டேன். பொழப்புக்காக ஸ்டீல் பட்டறை வேலை, கூலி வேலைன்னு போயிட்டிருந்தேன். சூப்பர் சுப்பராயன் மாஸ்டரோட  ஃபைட்டர்கள் எல்லாரும் எங்க ஏரியா பசங்கதான். அவங்க மூலமா ஸ்டன்ட் யூனியன்ல ஆள் எடுக்குறாங்கன்னு கேள்விப்பட்டு போனேன்.



அது 1987ம் வருஷம். என் பாடி, பாக்ஸிங் எல்லாம் பார்த்து சிபாரிசே இல்லாம யூனியன்ல ஃபைட்டர் கார்டு கொடுத்தாங்க. அங்கே  எம்.எஸ்.தாஸ் மாஸ்டர் அறிமுகம் கிடைச்சது. அவர் மூலமா ‘பிளட்ஸ்டோன்’ படத்துல ரஜினி சாருக்கு டூப் போட்டேன். ஒகேனக்கல்ல  உள்ளூர் நீச்சல்காரங்களே குதிக்கத் தயங்குற ஒரு சூசைட் பாயின்ட் அது. தற்கொலை பண்ண அங்க விழுந்தாலே 3 நாள் கழிச்சுதான் பாடி  மிதக்கும்னாங்க. அப்படிப்பட்ட இடத்துல துணிஞ்சு குதிச்சேன். இண்டஸ்ட்ரில எனக்கு நல்ல நேம் கிடைச்சது.

விஜயன் மாஸ்டர், ராஜு மாஸ்டர்னு ரெண்டு பேர் டீம்லயும் சேர்ந்து தெலுங்குல என்.டி.ஆர் சார்ல இருந்து சிரஞ்சீவி வரை எல்லாருக்கும்  டூப் போட்டுட்டேன். அர்ஜுன் - குஷ்பு நடிச்ச ‘ரோஜாவைக் கிள்ளாதே’ படத்துல ஒரு ஃபயர் ஆக்ஸிடென்ட். அதுல நான் இறந்துட்டேன்னே  யூனிட்ல எல்லாரும் நினைச்சிட்டாங்க. அதுலயும் உயிர் பிழைச்சு வந்தேன். அப்போதான் ஸ்டன்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா சார், ‘கேரக்டர்  ரோல் பண்றியா?’னு கேட்டார். வெயிட்டை ஏத்திக்கிட்டு கமல் சாரைப் போய் பார்க்கச் சொன்னார். 66 கிலோ இருந்த நான் 82 கிலோவாகி  போனேன்.   அப்ப கமல் கேம்ப கோலாவில் ‘மகாநதி’ ஷூட்டிங்ல இருந்தார். நான் பாக்ஸர்ங்கறதுனால கேள்வியே இல்ல. உடனே போய்  ஹேர் கட் பண்ணிட்டு வரச் சொல்லிட்டார். அந்த ஜெயிலர் கேரக்டர் என் வாழ்க்கையையே - பேரையே மாத்திச்சு.

‘மகாநதி’க்கு அப்புறம் அஜித் சார், விஜய் சார்னு நிறைய படங்கள் பண்ணினேன். சொந்தமா வீடு கூட வாங்கினேன். என்னை கைட் பண்ண  யாருமில்லை. சினிமாவில காசு எப்பவும் கிடைக்கும்னு நினைச்சு, இஷ்டம் போல வாழ ஆரம்பிச்சேன். குடிப் பழக்கம் தொத்திக்கிச்சு.  சினிமா என்னை விட்டு விலக ஆரம்பிச்சது. அந்த டைம்ல சினிமா ஸ்டிரைக் வேற... வேலையும் இல்லாம, வருமானமும் இல்லாம  வீட்டை விற்க வேண்டியதாகிடுச்சு.

அப்போதான் திருச்சி பக்கம் துறையூர்ல இருக்கற ஓங்காரக் குடில் அகத்தியர் சன்மார்க்க சங்கத்துக்குப் போனேன். குடிப்பழக்கத்தை விட்ட  பிறகு முருகப்பெருமான் மேல பக்தி அதிகமாச்சு. அதிசயம் பாருங்க... திருமுருகன் சார் சீரியலுக்காக கூப்பிட்டார். அவர் சீரியல்கள்  எல்லாத்திலும் நான் இருப்பேன். ‘நாதஸ்வரம்’ நெல்லியாண்டவரா நல்ல ரீச். பெரிய வில்லனா இருந்த எனக்கு நல்ல மாமனார்னு அவார்டு  வாங்கிக் கொடுத்த கேரக்டர் அது.

இடையில கொஞ்சம் என்னைவிட்டு சினிமா விலகியிருந்தாலும், இப்ப தொடர்ச்சியா படங்கள் வருது. சமீபத்துலகூட ‘இதற்குத்தானே  ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, அதுக்கு அப்புறம் ‘யாமிருக்க பயமே’ மாதிரி ஒருசில நல்ல படங்கள் கிடைச்சது. சிவாஜி சார், பிரபு சார்...  இப்ப ‘வெள்ளக்கார துரை’ படத்துல விக்ரம் பிரபுன்னு மூணு தலைமுறை கூட நடிச்ச பெருமை எனக்கு இருக்கு. 1995ல மேரேஜ் ஆச்சு.  மனைவி பெயர் செல்வி. ரெண்டு பொண்ணுங்க, ஒரு பையன். பெரியவ ஜனனி காலேஜ் படிக்கறா. சின்னவ தாரணி, ஒன்பதாம் வகுப்பு.  மகன் மணிகண்டன், அஞ்சாங்கிளாஸ். என் குழந்தைங்களுக்கு என்னைப் பிடிக்கும்; என்னோட எல்லா காமெடியும் பிடிக்கும். ‘பலமா,  பலவீனமா?’ன்னு தெரியாது. ஆனா, இதுவரைக்கும் இயக்குநர்கள், ஹீரோக்கள் யாருக்கும் நான் போன் பண்ணிப் பேசினதில்ல. என்னை  தொந்தரவா யாரும் நினைச்சிடக் கூடாதுங்கற எண்ணம்தான் காரணம். ‘இந்த கேரக்டர் சங்கருக்குதான் செட் ஆகும்’னு இயக்குநர்கள்  நினைக்கும்போது கண்டிப்பா என்னைக் கூப்பிடுவாங்க. அந்த நம்பிக்கையிலதான் என் வாழ்க்கை ஓடுது.

‘எல்.ஐ.சியில இருந்து குதிச்சு வாடா’ன்னு இயக்குநர்கள் சொன்னா, எனக்கு பருந்து மாதிரியும் வரத் தெரியும்... குரங்கு மாதிரியும் வரத்  தெரியும். ஆண்டவன் அப்படி ஒரு திறமையைக் கொடுத்திருக்கான். காமெடி ரூட்ல போகணுமா? வில்லனா? குணச்சித்திரமா? எனக்கு  தேர்ந்தெடுக்கத் தெரியாது. இயக்குநர்கள் என்னைக் கூப்பிட்டா, கதை கூட கேட்காம போயிடுவேன். இதையேதான் கடைசிவரை  கடைப்பிடிப்பேன்!’’

- மை.பாரதிராஜா
படங்கள்: புதூர் சரவணன்