குங்குமம் ஜங்க்ஷன்



வினோத வழிபாடு!

இது ஒன்றும் புதுவித யோகாசனம் இல்லை. குழந்தை வரத்துக்காக பெண்களின் வேண்டுதல். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு  அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழா சமீபத்தில் நடைபெற்றது. இங்கே, குழந்தை வரம் வேண்டி  விரதம் இருந்து வந்திருந்த 1496 பெண்களுக்கு  குரு பூஜை செய்யப்பட்ட  பிரசாதம் வழங்கப்பட்டது. இந்தப் பிரசாதத்தை பெண்கள் தங்கள்  புடவை முந்தானையில் வாங்கிச் சென்று குளக்கரை படிகளில் வைத்து, கைகளைப் பின்புறம்  கட்டிக்கொண்டு வாயால் சாப்பிட்டனர். இது  இங்கு ஐதீகம் என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள்.



மாறாத மண் மணம்!

மாட்டு வண்டி கட்டிக்கிட்டு குழந்தை, குட்டியோட திருவிழாவுக்குப் போறதெல்லாம் ஒரு காலம். இனி அதைப் பழைய சினிமாவில்  பார்த்தால்தான் உண்டு என பெருமூச்சு விடும் பெரியோர்களே... தாய்மார்களே... இன்றைக்கும் அது நடக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் முன்... ஆண்டவனின் ஆசி பெற வண்டி கட்டிக்கொண்டு  வந்திருக்கிறார்கள், உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமணலிங்கேஸ்வரரை தரிசிக்க!



62ல் தாய்மை வரம்!

‘‘மலடி பட்டத்தைத் தாங்க முடியாமல் தற்கொலைக்கே துணிந்த என்னை என் கணவரின் அன்புதான் வாழ வைத்தது. இப்போது நானும் ஒரு  பெண் குழந்தைக்குத் தாயாகி இருக்கிறேன். என் 35 வருட கனவை நினைவாக்கிய டாக்டர்கள் என் கடவுள்கள்’’ என கண்கலங்குகிறார்  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் உள்ள காமாட்சிபுரத்தைச் சேர்ந்த கருப்பாயி. இவருக்கு வயது 62. இவரது கணவர் ராமுவுக்கு  66 வயது. இதை சாத்தியமாக்கியது, சேலம் சிசு மருத்துவமனை  டாக்டர்கள் முத்துகுமார்-உமாபாரதி தம்பதிதான். ‘‘கருப்பாயிக்கு  கருப்பையில் கட்டி. கருக்குழாயில் அடைப்பும் இருந்தது. கூடவே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் எல்லாமும். தகுந்த ஆராய்ச்சி  செய்து தொடர் சிகிச்சை அளித்தோம். எங்களின் உழைப்பு வீண் போகவில்லை. அந்தத் தாயின் ஆனந்தக் கண்ணீர்தான் எங்களின் இந்த  சாதனைக்கு உண்மையான பரிசு!’’ என நெகிழ்கிறார்கள் இந்த டாக்டர் தம்பதி.

திருந்துங்க ஆபீஸர்ஸ்!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செங்கரையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். ஓட்டல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ படித்துள்ளார். 4  ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் ஒரு கப்பலில் சமையல் வேலைக்குச் சென்றவர், தன்னுடன் வேலை செய்யும்  பெல்ஜியம் நாட்டைச்  சேர்ந்த சாராவிடம் காதலில் விழுந்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கொல்லிமலை கோயிலில் சாராவுக்குத் தாலி கட்டினார் சுரேஷ்குமார்.
கடைசி நிமிடம் வரை தம் காதலுக்கு வில்லனே இல்லை என ஜாலி மூடில் இருந்த சுரேஷிற்கு செக் வைத்து வில்லனாகி இருக்கிறார்கள்  திருமணப் பதிவு செய்யும் அதிகாரிகள்.  ‘‘திருமணத்தைப் பதிவு செய்ய ஒரு லட்ச ரூபாய் கேட்கிறார்கள்’’ என்று புகார் சொல்கிறார்  சுரேஷ்குமார். திருந்துங்க ஆபீஸர்ஸ்!

உயிர் பெற்ற ஓவியங்கள்!

சென்னை லலித் கலா அகடமி குழந்தைகளின் ஓவியங்களால் அழகு பூசிக் கொண்டிருந்தது. அத்தனையும் ஆஸ்க் இன்ஸ்டிடியூட் ஆஃப்  டிசைன் ஓவியப்பள்ளி மாணவ, மாணவியரின் கைவண்ணம்.கோட்டோவியத்தில் அழகு காட்டிய மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்
குளம், எட்டாம் வகுப்பு ஷமிதாவின் படைப்பு. சென்னையில் முதன்முதலாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியபோது வரிசையில் நிற்கும்  ஆம்புலன்ஸ் வண்டிகளே அனன்யா வரைந்திருக்கும் ஓவியம். ஏழாம் வகுப்பு படிக்கும் விபாவுக்கு பேசுவதைவிட ஓவியம் வரைவதுதான்  பிடிக்குமாம். கிராமத்து தெருவில் ஒரு மாட்டு வண்டி உயிர்பெற்று உலவிக் கொண்டிருந்தது அந்த ஓவியத்தில். ரூபேஷ் வரைந்த சிங்கமும்  பழங்களும் அத்தனை அழகு. கை ரிக்‌ஷா வண்டிகளுக்கு ஆர்.டி.ஓ பதிவு எண் வழங்கிய தகவலை  ஜனனி வரைந்த ஓவியம்  சொல்ல,  பீச்சில் தண்ணீர் குடிக்கும் தன் தோழியை முதுகில் தாங்கும் அன்பை  வெளிப்படுத்துகிறது அஸ்வினின் ஓவியம்.