கவிதைக்காரர்கள் வீதி



சொந்தம்

அலைபேசியில் அழைத்து விட்டு
வரலாமே என
சொந்தம் பாராட்டும்
அங்கிள்களும் ஆன்ட்டிகளும்
நிறைந்த நகரங்களுக்கு
சற்றுத் தொலைவில்
இன்னமும் இருக்கிறார்கள்
‘யார் வந்துருக்கா பாரு’
என மோரையோ,
செம்பில் பருக நீரையோ
தரும் சித்திகளும்,
அக்காக்களும், அத்தைகளும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்...
- வெ.தரன், கோவை.

யாசகம்


உள்ளே
வேண்டுவன யாவும் வேண்டி
வாயிலில்
அமர்ந்து யாசிப்பவர்களுக்கு
சில்லறையிடாமல்
வெளியே வருபவர்கள்
புலம்புகிறார்கள்...
கடவுளுக்கு
கண் இல்லையென்றும்
கருணை
இல்லையென்றும்!
- தளபதி.கோபால், மோகனூர்

வடக்குத் தெரு

ஊராட்சி வானொலி
கிளை நூலகம்
வாணக் கிடங்கு
வடக்கு வாசல்
சத்திர ஸ்டாப்
பேஷ்கார் வீடு
அடையாளங்கள் தொலைந்தாலும்
பேர் மட்டும்  தொலையாமல்  
கிடக்கிறது அங்கே
வடக்குத் தெரு
- நாகேந்திர பாரதி, சென்னை-24

சஞ்சலப்பு

தீபாராதனைத் தட்டில்
விழுகின்ற ரூபாய் நோட்டுகளால்
சஞ்சலப்படாதிருக்கும்
கடவுள் சிலை போல்
இருப்பதில்லை பூசாரிகள்
- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்