டிக்... டிக்... டிக்...



எஸ்.ராமன்

‘‘நம்ம  கம்பெனியில வேலை பார்க்கிற இளம் பெண்களை மேற்பார்வையிட  பெண் சூப்பர்வைசர் பதவிக்கு ஆளெடுக்கிறோம் சார். வந்த  விண்ணப்பங்களை வச்சு முதல் ரவுண்ட் இன்டர்வியூ முடிச்சு, தகுதியான பத்து  பேரை செலக்ட் பண்ணியிருக்கோம். உங்க முடிவுக்காகக்  காத்திருக்கோம்!’’ - என்ற  உதவியாளர், பெயர்ப் பட்டியலை எம்.டி பச்சையப்பனிடம் கொடுத்தார்.

‘‘இதில் கல்யாணமானவங்க யார் யார்னு தெரிஞ்சுக்க நீல நிற டிக் அடிங்க...’’ - எம்.டி சொன்னதும், உதவியாளர் நான்கு பெயர்களை டிக்  அடித்தார்.

‘‘இவங்கள்ல யாருக்கெல்லாம் பெண் குழந்தைங்க இருக்குன்னு மஞ்சள் நிறத்தில் டிக் அடிங்க...’’ இருவருக்கு டிக் விழுந்தது.



‘‘இவங்க ரெண்டு பேர்ல யாரோட பெண் குழந்தை வளர்ந்து இப்ப வேலைக்குப் போயிட்டிருக்காங்க?’’ வெளியில்  காத்திருந்த  பெண்களிடம் விசாரித்து உதவியாளர் ஒரு விண்ணப்பத்தை  எம்.டியிடம் கொடுத்ததும், அதில் அவர் பச்சை நிறத்தில் டிக் செய்து,   அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுக்க உத்தரவிட்டார்.

‘‘வேலைக்குப் போற இளம் பெண்ணின் தாயார்தான், தன் மகள் மாதிரி உள்ளவங்களைப் புரிஞ்சுக்கிட்டு அவங்க பிரச்னைகளைத் தீர்த்து  வைக்க முடியும். கம்பெனி வளர்ச்சிக்கும் உதவ முடியும்!’’ -  என்ற எம்.டி.யின் விளக்கம், உதவியாளர் மனதில் நச்செனப்  பதிந்தது.