பேருதவி



‘‘என்னங்க... இப்ப உடனடியா நம்ம பொண்ணு படிப்புக்கு அம்பதாயிரம் ரூபாய்க்கு என்ன பண்றது?’’ - மனைவி மாதவி கேட்டாள்.
‘‘நானும் ஆபீஸ், பேங்க், நண்பர்கள்னு எல்லார்கிட்டேயும் கேட்டுப் பார்த்திட்டேன், கிடைக்கல மாதவி. பேங்க்ல பர்சனல் லோன் கூட  ட்ரை பண்ணிட்டேன். அதுக்கும் ரெண்டு, மூணு மாசம் ஆகும்ங்கறாங்க!’’ என்றான் விவேக்.
‘‘நான் தர்றேன்ம்மா. கவலைய விடுங்க...’’ - திரும்பிப் பார்த்தால், அங்கே ஹவுஸ் ஓனர் தர்மலிங்கம் புன்னகையுடன் நின்றிருந்தார்.



‘‘வயசானவன்... பொழுது போகலை... உங்ககிட்ட ஏதாவது பழைய நாவல் இருந்தா படிக்க வாங்கலாம்னு வந்தப்போதான் என் காதுல நீங்க  பேசினது விழுந்தது. நானோ ரிட்டயரான மனுஷன். செலவும் பெரிசா எதுவும் கிடையாது. குழந்தையோட படிப்புக்கு என்னால முடிஞ்ச  சின்ன உதவியை செய்யலாம்னு பார்க்கறேன்..!’’
‘‘நீங்க எதுக்கு சார்... நாங்க எப்படியாவது...’’ - விவேக் இழுத்தான்.
‘‘சங்கடப்பட வேண்டாம். இது உங்க பணம்தான். புரியலையா? நீங்க மூணு வருஷத்துக்கு முன்னால இங்கே குடி வந்தப்போ தந்த  அட்வான்ஸ் பணம் அம்பதாயிரம்... பேங்க்ல சும்மாதானே கிடக்கு.
வாங்கிக்கோங்க. முடிஞ்சப்போ மாசா மாசம் வாடகையோட சேர்த்துக் கொடுங்க. சரிதானே..?’’
விவேக்-மாதவிக்கு பேருதவி செய்த தர்மலிங்கம் அங்கே கடவுளாகத் தெரிந்தார்!

எஸ்.எஸ்.ராஜேஷ்