இன்டர்வியூ



ஆபீஸ் கண்ணாடி அறைக்குள் அவர் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்துவிட்ட முருகேசன், கதவைத் தட்டிவிட்டு நேராக அவரிடம் சென்று,  ‘‘சார், இந்தப் பை உங்களோடதுதானான்னு பாருங்க. என் ஆட்டோ பின் சீட்டுல கிடந்தது. பெட்ரோல் பங்க் போனப்ப பார்த்தேன்.  கடைசியா நீங்கதான் சவாரி வந்தீங்க! அதான் கேட்கலாம்னு வந்தேன்’’ என்றான்.
பையைக் கையில் வாங்கிய வசந்தம் சிட் ஃபண்ட்ஸ் ஓனர் சீனிவாசன், ‘‘ரொம்ப நன்றி முருகேசன்!’’ என்றார்.



‘‘சார், என் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்!’’ - ஆச்சரியமானான்.
‘‘பேர் மட்டும் இல்ல, நீ எம்.காம் கிராஜுவேட், வேலை தேடிக்கிட்டு இருக்கே. வேலை கிடைக்கிற வரைக்கும் வீட்டுக்குச் சுமையா சும்மா  இருக்க வேணாம்னு ஆட்டோ ஓட்டுறே... எல்லாமே எனக்குத் தெரியும்.
என் கம்பெனியில அசிஸ்டன்ட் மேனேஜர் வேலைக்கு ஆள் தேவைப்பட்டது. அதான் வித்தியாசமா  ஒரு இன்டர்வியூ பண்ணினேன். நீ பாஸ்  பண்ணிட்டே. இதுக்குள்ள நிறைய நகைகள் - கவரிங்தான் - உன்னை டெஸ்ட் பண்றதுக்காக போட்டு வச்சேன். நீ பிரிச்சுக் கூடப் பார்க்கல.  அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை கையோட வாங்கிட்டுப் போயிடு. வர்ற வெள்ளிக்கிழமை வந்து வேலையில சேர்ந்துடு!’’ என்றபடி முருகேசன்  தோளைத் தட்டிக் கொடுத்தார் சீனிவாசன்.
கண்களில் நீர் முட்ட கரம் கூப்பினான் முருகேசன்!  

-ஜெயதமிழண்ணா