பிடித்தம்



நந்தினி எக்ஸ்போர்ட்ஸ். அன்று சம்பள நாள். அங்கு  குழுமியிருந்த முன்னூறு தொழிலாளர்களுக்கு மத்தியில் பேசினார் முதலாளி குப்தா.

‘‘இவ்வளவு நாள் லாபத்துல இயங்கின நம்ம கம்பெனி, போன மாசம் எதிர்பாராதவிதமா நஷ்டமாகிடுச்சு. இந்த நஷ்டத்தை என்னால  மட்டும் சரிசெய்ய முடியும்னு தோணலை. அதனால, அதை ஈடு கட்ட உங்க ஒவ்வொருத்தர் சம்பளத்துல இருந்தும் ரூபாய் ஐந்நூறு பிடித்தம்  செய்திருக்கேன். பிடித்தம் போக மீதிச் சம்பளத்தை நீங்க வாங்கிக்கலாம்’’ - சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டார் குப்தா.

ஊழியர்கள் மத்தியில் பலத்த முணுமுணுப்பும் சலசலப்புமாக இருக்க, ஒருவழியாக சமாதானமாகி சம்பளத்தை வாங்கிச் சென்றார்கள் ஊழியர்கள்.


அடுத்த நாள்...
அதிர்ச்சியோடு ஓடி வந்தார் பி.ஏ. ‘‘சார்! நேத்து நீங்க சம்பளத்துல பிடித்தம் பண்ணதால நம்ம ஊழியர்கள் முந்நூறு பேர்ல நூறு பேர் வேலைக்கு வரலை!’’ முதலாளி குப்தா முகத்தில் மகிழ்ச்சி.

‘‘கம்பெனி ஆரம்பிச்சதுல இருந்து போன மாசம்தான் பெரிய லாபம் கிடைச்சது. ஒருவேளை நஷ்டமாயிருந்தா யாரெல்லாம் நம்ம கூட  இருப்பாங்கன்னு தெரிஞ்சிக்கத்தான் இப்படி ஒரு பரீட்சை வச்சேன். இதில் பாஸ் ஆனவங்க உள்ளே... மத்தவங்க வெளியே. இப்ப இருக்கிற  ஊழியர்களுக்கு அடுத்த மாசத்தில் இருந்து ஆயிரம் ரூபாய் இன்க்ரிமென்ட் போட்டுடு. புதுசா ஆட்களை வேலைக்கு எடுத்துடு!’’ என்ற  முதலாளியைப் பார்த்து வாயடைத்து நின்றார் பி.ஏ.

வெ.பாலாஜி