புரட்சி பக்தியும் கவர்ச்சி சந்நியாசினியும்!



ராதே மா ரகளை

சந்நியாசிகள் சர்ச்சைக்குள்ளாவது புதிதில்லை. வில்லங்கமான ஆண் சாமியார்களின் செய்திகளைப் படித்தே பழகிப் போன நமக்கு, பெண்  சந்நியாசிகளும் இதற்கு சளைத்தவர்கள் இல்லை என்று காண்பித்திருக்கிறது மும்பை பெண் சந்நியாசினி ‘ராதே மா’ விவகாரம்.  தரிசனத்தின்போது முத்தம் கொடுக்கிறார், பக்தைகளிடம் தவறாக நடக்கிறார், ஆண்களிடம் வரதட்சணை மோகத்தைத் தூண்டுகிறார்,  எதிர்ப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்... செக்ஸ் முதல் கிரிமினல் குற்றம் வரை என்ன புகார் இல்லை ராதே மா மீது! சினிமா  பாட்டுக்கு கிளாமர் டிரஸ்ஸில் இவர் குத்தாட்டம் போட்ட ஸ்டில்கள் ட்விட்டரில் வெளியாக, விஷயம் வைரலாகிவிட்டது!



‘ராதே மா’வின் உண்மையான பெயர் சுக்விந்தர் கவுர். பஞ்சாபைச் சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஆன்மிகம் பக்கம் வந்து  அசாதாரணமாக வளர்ந்து நிற்கிறார். வயது 50 ஆகிறது. இரண்டு மகன்கள். ஒரு மகள். இரண்டாம் மகன் ‘இஷ்க் (காதல்).காம்’ எனும் இந்திப்  படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மகளுக்குத் திருமணமாகி குழந்தையும் பிறந்துவிட்டதால் இவர் பாட்டியும் ஆயாச்சு. ஆனாலும் ராதே  மாவைப் பார்த்தால் வயது 50 என்று சொல்ல முடியாது. ஸ்லிம் உடல், ஸ்டைல் உடை என சினிமா நடிகை தோற்கும் தோற்றம். ஆண்,  பெண் பக்த கோடிகள் எந்த வித்தியாசமும் இல்லாமல் ராதேவைத் தூக்கலாம்; கட்டிப் பிடிக்கலாம்; கொஞ்சலாம்; முத்தமும் கொடுக்கலாம்...  அப்படியொரு புரட்சி பக்தியை இந்தியாவில் விதைத்த பெருமை ராதே மாவையே சாரும்.



ராதே அணியும் உடை ஒவ்வொன்றும் பல லட்சங்கள் விலையுள்ளது. அதுபோல், விலையுயர்ந்த வைரங்களையும் அணிவார். பயணிப்பது  இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் காரில். தங்கத்தில் செய்யப்பட்ட திரிசூலத்தையும், சிவப்பு ரோஜா பூவையும் இரு கைகளில்  பிடித்திருக்கும் ராதே, சிவப்பு நிற உடையை மட்டுமே தரிசன நேரங்களில் அணிவார். இதர பொழுதுகளில் சாதாரண டிரஸ்ஸில் இருப்பார்.  இப்படி ஒரு ஷாப்பிங் மாலில் மினி பாவாடை, ஹை ஹீல் ஷூ, தொப்பி அணிந்து சோபாவில் ஒய்யாரமாகப் படுத்திருக்கும் இவரது  போட்டோ சோஷியல் நெட்வொர்க்கில் வெளியாக, சன்னி லியோனையும் இவரையும் ஒப்பீடு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் பலரும்!  உண்மையில் இவர் சன்னி லியோனின் ரசிகை எனவும் சிலர் சொல்கிறார்கள்.  

தன்னை துர்கா தேவியின் அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் ராதே, தன்னை தரிசித்தாலே வேண்டுதல்கள் நிறைவேறும் என்கிறார்.  நாளுக்கு நாள் அவரிடம் பக்தர்கள் மட்டும் குவிந்துகொண்டே இருக்கிறார்கள். இந்திப் பட இயக்குனர் சுபாஷ் கை, பி.ஜே.பி தலைவரும்  நடிகருமான மனோஜ் திவாரி, புனே திரைப்படக் கல்லூரி முதல்வர் ஆகியிருக்கும் சர்ச்சைக்குரிய கஜேந்திர சௌகான், பாடகி டோலி  பிந்திரா, கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் ராதேயின் பக்த கோடிகளில் அடக்கம். ஆன்மிகத்தில் வெற்றி வலம் வந்த  ராதேவுக்கு முதல் பிரச்னையைக் கொளுத்திப் போட்டவர் அவரின் உறவினரான, நிக்கி குப்தா என்பவர்தான். அடிப்படையில் ராதேவுக்கு  காதல் திருமணங்களைப் பிடிக்காது. ‘‘வரதட்சணை கேட்டு கணவன் என்னை மிரட்டக் காரணமாக இருப்பவர் இந்த ராதே!’’ என்று 2012ல்  நிக்கி கொடுத்த புகாரை இன்றும் மும்பை போலீஸ் விசாரித்து வருகிறது. ராதேயின் பக்தையும் தோழியுமான பாடகி பிந்திராவும் ‘‘ராதேயால்  என் உயிருக்கு ஆபத்து... எனக்கு பாதுகாப்பு வேண்டும்!’’ என்று மும்பை போலீசிடம் மனு தந்திருக்கிறார்.

‘‘தரிசனம், வழிபாடு என்ற பெயரில் அங்கே அருவருப்பான சம்பவங்கள் நடக்கின்றன. ராதேயால் பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண்கள்  பலரும் என்னிடம் முறையிட்டார்கள். பயம் காரணமாக யாரும் புகார் தர முன் வராததால் நானே புகார் தந்திருக்கிறேன்!’’ என்கிறார்  ராதேவுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் மும்பை பெண் வழக்கறிஞர் பால்குனி. இத்தனை எதிர்ப்புகள்... சர்ச்சைகள்... எதைப் பற்றியாவது  அலட்டிக் கொண்டாரா ராதை? ‘‘இதுதான் என் ஸ்டைல்... பிடிச்சிருந்தா வா... பிடிக்கலைன்னா விட்டுடு!’’ என்பதில் தெளிவாக இருக்கிறார்  அவர்.

‘‘நான் கடவுள் இல்லை... உங்களைப் போலத்தான் கடவுள் என்னையும் படைத்தார். நான் ராதே மா... உங்களுக்கான வழிகாட்டி. நான்  கடவுளை சேவிப்பவள். நீங்கள் என் குழந்தைகள்... நான் பரிசுத்தமானவள். மக்கள் எனக்கு நிறைய தானங்கள் செய்கிறார்கள். அது போலவே  நானும் பலருக்கு தானம் செய்கிறேன். என்னிடம் போதிய பணம் உள்ளபோது, பிறரை நான் ஏன் ஏமாற்ற வேண்டும்? நான் எந்த  விசாரணைக்கும் தயார்... குற்றம் ஏதும் நிரூபிக்கப்பட்டால் தீக் குளிக்கவும் தயார்!’’ எனச் சொல்லியிருக்கிறார் ராதே.

"ஒய்யாரமான இவரது  போட்டோ சோஷியல் நெட்வொர்க்கில் வெளியாக, சன்னி லியோனையும் இவரையும் ஒப்பீடு  செய்ய  ஆரம்பித்துவிட்டார்கள் பலரும்!"

- பிஸ்மி பரிணாமன்