ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 55

‘‘காலாலங்கிரிக்குள் சென்று பார்த்துவிட நான் முடிவெடுத்து வள்ளிமுத்துவிடமே வழி கேட்டேன். அப்போது ஒருவன் தலையில் பானையுடன்  எங்களைத் தாண்டினான். அவனை ‘எலே ஈ’ என்று வள்ளிமுத்து அழைத்து நிறுத்தினார். அவனும் நின்று திரும்பினான்.‘பானைல என்ன  தண்ணியா?’‘பதநீர் சாமி...’‘கொஞ்சம் தாயேன்...

’‘கையை நீட்டுங்க...’அவன் மறுபேச்சில்லாமல் பதநீர்ப் பானையை சரித்து வள்ளிமுத்து குடிக்கச்  செய்தான். எனக்கும் தாகமாய் இருந்ததால் நானும் ஆசைப்பட்டேன். தயக்கமின்றி எனக்கும் அதை குடிக்கத் தந்தான்.அப்படி ஒரு பானத்தை நான் என் வாழ்நாளில் பருகியதே இல்லை.

‘வத்ராயிருப்பு தென்னப் பதனி இது... வத்ராயிருப்பு தமிழ்நாட்டு கேரளாவாச்சே. வற்றாத இருப்புதான் வத்திராயிருப்புனு வழக்குச் சொல்லாச்சு. அதுல  ராஜ மரமா பாத்து ஏறி இறக்குன பதனி இது’ என்று விளக்கம் கொடுத்தார் வள்ளிமுத்து.‘தென்னையில் ராஜ மரம் என்று ஒரு ரகமா?  கேள்விப்பட்டதே இல்லையே...’ என்றேன்.‘ராஜா மாதிரி உயரம், அழகு, பலம்னு எல்லாம் உள்ள மரத்தை ‘ராஜ மரம்’னு அடையாளப்படுத்திச்  சொல்வோம். இது வட்டார வழக்கு! தென்னைதான் சூரியனோட நெருக்கமான மரம்.

நம்ம தலை மேல விழற சூரியக் கதிருக்கும் தென்னை மேல விழற கதிருக்கும் வித்தியாசம் இருக்கு. இந்த மரம்தான் கல்லடிபடாது; பறவைகளும்  பெருசா கூடு கட்டாது. மட்டையை ெவட்ட வெட்ட துளிர்க்கும். பூமித் தண்ணியை தன் நீண்ட உடம்பு வழியாக பம்ப் செட் ேமாட்டார் மாதிரி மேல  தூக்கிட்டு வந்து சொம்புல அடைச்ச மாதிரி தேங்காய்ல தேக்கும். அதை இளநீர்னு சொல்வோம்.

இளநீர், தேங்காய்... இது மட்டுமேகூட போதும். ஒரு மனுஷன் ஆரோக்கியமா வாழ போதுமான உணவு இது. இந்தத் தேங்காய்க்கு மூணு கண்ணு.  அதனால இது சிவனுக்குச் சமம். இதை உடைக்கும்பாது ஏற்படுற சப்தம், தப்பான அதிர்வுகளை சரியான அதிர்வா ஆக்கிடும். அதாவது நம்மைச் சுத்தி  திருஷ்டிங்கற விஷயம் இருந்தா, அது தப்பான அதிர்வு. அதை நம்ம உடம்போட ‘ஆரா’வுல பாக்க முடியும். அந்த திருஷ்டியை இது அதிருஷ்டியா -  அதாவது நமக்குப் பயன்படற அதிர்ஷ்ட விஷயமா மாத்திடும்!

ஏன்னா, வெளியுலகம் பார்த்திடாத - சூரியன் தீண்டாத - மேல இருந்து மழையா வராம, கீழ இருந்து மேல வந்த தண்ணி இளநீர் மட்டும்தான். இது  உடையும்போது தெறிக்கறதுல ஏற்படற சப்தம் சுப சப்தமா மாறிடுது. அதனாலதான் நல்லதுக்கு சூறைக்கா உடைக்கற பழக்கம் உருவாக்கப்பட்டது.  அதை முச்சந்தியில செய்யும்போது மூன்று வழில ஒரு வழியால நம்ம திருஷ்டி தெறிச்சு ஓடிடும். இப்படி தென்னையைத் தொட்டு மட்டுமே பேச  நிறைய விஷயமிருக்கு.

இதுல பதநீர்ங்கறது இளநீருக்கும், கள்ளுக்கும் இடைப்பட்டது. பதமான நீர்தான் பதநீர். இதுதான் காலாலங்கிரி சாமிங்க விரும்பிக் குடிக்கற நீர்.  சிறுநீரகப் பையை சுத்திகரிச்சு, கணையத்தை பலப்படுத்தி, உடம்புல வெப்பத்தை சமப்படுத்தறதுல இதுக்கு இணை இல்லை!’
- வள்ளிமுத்து தென்னை மரத்துக்குக் கொடுத்த வியாக்கியானம் என்னை வியக்க வைத்தது.

அதில் மிக முக்கியம், பூமியில் இருந்து நாம் பெறும் நீர் இளநீர்... மற்ற நீரையெல்லாம் ஆகாயம் வழங்க, அதை ஆறு, குளம் மூலமே பெறுகிறோம். இங்கே  பூமி, பாத்திரம் மட்டுமே எனும் விஷயம்தான்.அந்த ‘ஈ’ என்பவனிடமே வள்ளிமுத்து என்னை இணைத்து, ‘இவர் காலாலங்கிரிய பாக்கணுமாம்...  கூட்டிப் போ!’ என்றிட, அந்த ‘ஈ’ என்னை ஒரு மாதிரி பார்த்தான்.‘என்னப்பா பாக்கறே?’ என்றேன்.

‘நான் எல்ல வரைதான் கூட்டிப் போவேன். உள்ள வர உங்களுக்கு விதி இருக்கணும்ங்க!’ என்றான்.‘அது என்ன விதி?’‘சித்தர் சாமிகளே வந்து  கூட்டிக்கிட்டு போனாதான் நீங்க உள்ள போக முடியும். அங்க இருக்கவும் முடியும்...’‘ஓ... ஒரு பாறை மேல நின்னு ‘சிவாயநம’னு எத்தனையோ தடவை  சொல்லணும்னு சொன்னாங்களே... அந்த மாதிரியா?’‘அதேதான்...’‘மீறி உள்ள வந்தா?’‘உங்க ஆயுசு முடியணும்னு இருந்தா வருவீங்க. அவ்வளவுதான்  அதுக்கு அர்த்தம்!’

‘இதெல்லாம் சும்மா பீலா... நான் நம்ப மாட்டேன்; பயப்படவும் மாட்டேன்...’ என்று சொல்லிவிட்டு, அவனோடு காலாலங்கிரி மலையின் முகப்பு  வரை சென்றேன். பிரார்த்திக்க வேண்டிய பாறையையும் நின்று பார்த்தேன். சிரிப்புதான் வந்தது.’’- கணபதி சுப்ரமண்யனின் ஆய்வுக்  கட்டுரையிலிருந்து...விபா சொன்னதைக் கேட்ட சதுர்வேதி முகத்தில் பலத்த சிந்தனை.‘‘என்ன ஜி... வள்ளுவரை உங்களோட ஒப்பிட்டுச் சொன்னது  வருத்தம் தருதா?’’

‘‘கொஞ்சம் வருத்தம்தான்! ஆனா, இந்த வள்ளுவனாலதான் டெல்லில இருக்கற எனக்கு இந்த காலப் பலகணி பற்றியே தெரிய வந்தது!’’
‘‘அது எப்படி ஜி?’’‘‘ஜோதிடக்கலை உலகம் பூரா பரவி இருந்தாலும், இந்தியாதான் அதோட தாயகம். வராகமிகிரர், கமலமுனி, பாஸ்கர பட்டர்னு  பலரால வளர்ந்ததுதான் ஜோதிடக்கலை.

இதுல தமிழ்நாட்டுல உள்ள சித்த பரம்பரைதான் மோஸ்ட் சுப்பீரியர்ஸ். குறிப்பா போகர், புலிப்பாணி, இடைக்காடர்னு மூணு பேரும், கோள்களோட  பேசற அளவு ஞானத்தோட இருந்தவங்க. இதுல இடைக்காடர் என்பவர் ஆடு, மாடு மேய்க்கற ஆள். ஆனா, கூர்மையான பார்வை உள்ள மனிதர்.  இரவுல ஆகாயத்துல தெரியற நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்தே, பூமில நடக்கப் போறதைச் சொல்ற அளவுக்கு ஞானி...’’

‘‘இதெல்லாம் இப்பவும் சாத்தியம்தானே?’’‘‘எல்லாமே சாத்தியம்தான்! ஆனா, அதுக்கு ஒரு வழிமுறை இருக்கு. குருநாதரால மட்டுமே அதை சொல்லித்  தர முடியும்!’’‘‘விஞ்ஞானக் கண்டுபிடிப்பெல்லாம் தனிமனிதர்களோட விடா முயற்சியால வந்ததுதானே?’’‘‘விஞ்ஞானத்தை இதோட முடிச்சு  போடாதே... இது விஞ்ஞானத்துக்கு தாத்தா...’’‘‘அப்ப அவங்கல்லாம் எப்படிக் கத்துக்கிட்டாங்க... அவங்களுக்கு யார் குரு?’’
‘‘குருங்கறவர் ஒரு மனிதனாதான் இருக்கணும்னு இல்லை. ஒரு சிலந்தி வலை பின்னுது... நம்மால முடியுமா?’’
‘‘முடியாது...’’

‘‘காக்கா, குருவியெல்லாம் கூடு கட்டுது... நம்மால முடியுமா?’’
‘‘நமக்குத்தான் அவசியமேயில்லையே ஜி...’’‘‘கேட்டதுக்கு மட்டும் பதில்!’’‘‘முடியாதுதான்...’’

‘‘அப்ப... நம்மால முடியாததை முடிக்கற ஒரு சிலந்தியும், குருவியும் கூட நமக்கு குருதான்!’’‘‘சரி... அந்த வள்ளுவர்கிட்ட வாங்க!’’‘‘அவன்கிட்ட பரம்பரை  பரம்பரையா வந்துக்கிட்டிருக்கற ஜோதிடக்கலை இருக்கு. கூடுதலா வாஸ்து, நிமித்தம்னும் அவனுக்கு அனுபவம் அதிகம்!’’‘‘சரி...  அதனால?’’‘‘ஒருத்தரோட சாகற நொடியை சரியாச் சொல்ல முடிஞ்சவன் அவன்...’’‘‘அதனால?’’‘‘அப்படிச் ெசால்லி அதன்படியே செத்தும் போன  ஒருத்தரோட மனைவி மூலமா அவனப் பத்தி தெரிய வந்தது.

டெல்லில இருக்கற அரசியல்வாதிகளைப் பத்தி நான் உனக்கு சொல்ல வேண்டியதேயில்லை. நூத்துல தொண்ணூறு பேருக்கு தன் வெற்றியும், அதனால  வந்த பதவியும் தொடருமான்னு கேள்வி. ஆளுங்கட்சிக்கு தோக்கக் கூடாதுங்கற கவலை... எதிர்க்கட்சிக்கோ ஜெயிச்சே தீரணும்ங்கற வெறி... இதுக்கு  நடுவுல வியாதியால பிரச்னை, பிள்ளைகளால பிரச்னை, பக்கத்து நாடுகளால பிரச்னைனு நிறைய! இதுதான் எல்லாரையும் என்னை மாதிரி  காலஞானிகள்கிட்ட அனுப்பி வைக்குது.  அந்த சமயத்துல எனக்குப் போட்டியா வந்தவன்தான் இந்த வள்ளுவன்!’’
‘‘இப்ப எனக்குப் புரியுது... ஆமா, இந்த காலப் பலகணி பத்தி எப்படித் தெரிய வந்தது?’’

‘‘காலப் பலகணியை இவனோட தாத்தா ஏற்கனவே பார்த்து பலன்களையும் குறிச்சுக்கிட்டு வந்துட்டார். அதை வச்சு இவன் சொன்ன கணிப்புகள்,  அப்படியே நடந்தது. உடனே இவன் மேல ஆழமான கவனம் விழுந்தது. அப்ப மந்திரி பதவில இருந்த ஒருத்தர், ‘ஜோதிடத்துல எப்படி இப்படிச்  ெசால்ல முடியுது’னு கேட்கவும், ‘இது நான் சொன்னதில்லை, பலகணி சொன்னது’னு வள்ளுவன் மெல்ல பலகணியைத் தொட்டுப் பேசினான்.
மந்திரி விடுவாரா? ‘அந்தப் பலகணி எங்க இருக்கு’னு கேட்டதுக்கு, ‘எனக்கே தெரியாது. அதைப் பத்தி சிந்திக்கறதும் நல்லதில்ல... அதப் பார்க்க விதி  இருந்தா எல்லாம் தானா நடக்கும். இல்லன்னா அதைப் பத்தி யோசிக்கறவங்க செத்துடுவாங்க... இதுவரை அப்படித்தான் நடந்துக்கிட்டு வருது’ன்னும்  சொன்னான்.

மந்திரி பயந்து என்கிட்ட வந்து, ‘இப்படி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்... உண்மையா இருக்க முடியுமா’னு கேட்டார். நான் அப்பதான் வள்ளுவனப்  பத்தியும், பலகணி பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். இவன் மேல குறி வச்சேன். அதோட விளைவுதான் ஒரு தகரப் பெட்டில இருந்த குறிப்பு ஏடுகள்,  சோழிகள், திசைமானி, ஸ்படிக பெண்டுலம்... இத்யாதி... இத்யாதிகள்!

அதையெல்லாம் வச்சு நானே பலகணியை அடைய விரும்பினேன். ஆனா வள்ளுவன் ஆர்க்கியாலஜிஸ்ட் கணபதி சுப்ரமண்யன் பக்கம் திரும்பிட்டான்.  அது நான் எதிர்பார்த்திடாத திருப்பம்!’’‘‘திருப்பத்துக்கே திருப்பம் தர்ற உங்களுக்கே திருப்பமா?’’‘‘விபா! ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ!  சன்யாசத்துல பிரம்ம சன்யாசி, விஷ்ணு சன்யாசி, சிவ சன்யாசினு மூணு ரகம் உண்டு. பிரம்ம சன்யாசிகள்  ஒரு வழில குருநாதரைக் கொண்டு  உருவாகறவங்க. விஷ்ணு சன்யாசிகள் குடும்ப உறவோட உடம்பு அடங்கின நிலைல சன்யாசத்துக்கு வர்றவங்க. சிவ சன்யாசிகள்  தன்னிச்சையா  சித்தர்களா திரியறவங்க. இந்த ரகத்துல நான் விஷ்ணு சன்யாசி.

இந்த விஷ்ணு சன்யாசி சந்தோஷமா  எல்லா சுகங்களையும் அனுபவிச்சி  முடிச்சிட்டு அப்புறம்தான் ஆன்மிக உலகத்தோட ஆழமான பகுதிக்குப்  போவான். நானும் அப்படிப்பட்டவனே! ஆனா, அந்தப் பலகணி சிவ சன்யாசிகளால உருவாக்கப்பட்டது. எனக்கு அது தானா வசப்படாது.  வசப்பட்டாலோ, அதன்பின் என்னை விட்டு அது எங்கேயும் போகாது!’’‘‘சரி, முடிவா என்ன சொல்லப் போறீங்க?’’

‘‘சொல்ல என்ன இருக்கு... அதை அடையற முயற்சியில ரொம்ப தூரம் வந்துட்டோம். நிறைய உயிர்ப்பலிகளையும் கொடுத்தாச்சு. இதுல உயிரே  போனாலும் பின்வாங்கக் கூடாது...’’‘‘அப்ப வள்ளுவன் சொன்னபடி உயிர் போனாலும் போயிடுமா?’’‘‘நிச்சயம் போகும்... சராசரி மனுஷனா இருந்தா?  நான்தான் அதைக் கடந்தவனாச்சே..?’’‘‘இருந்தாலும் உங்களால இப்ப சரியா எதையும் கணிக்க முடியறதில்லையே ஜீ!’’

‘‘அதுக்கு நான் புலனை அடக்கணும். அக்னி வளர்த்து ஆஹுதி கொடுத்து தேவ சக்திகளை வசப்படுத்தணும். இந்த மாதிரி நிறைய இருக்கு...’’
‘‘இப்ப என்ன செய்ய உத்தேசம்?’’‘‘முதல்ல அவங்கள நெருங்குவோம். என்னப் பத்தி தெரிஞ்சி இனி புட்டுப் புட்டு வைக்கப் போற அந்த  ரஞ்சித்ங்கறவனை நான் பலி கொடுக்கறேன்! முதல்ல கமிஷனருக்கு போன் போடு...’’‘‘போட்டு?’’‘‘சைபர் க்ரைம்ல ஒரு கறுப்பு ஆடு, ஒரு சாதாரண  மனுஷனுக்கு உதவிக்கிட்டு இருக்கு. குறிப்பா, என்னைப் பத்தி தெரிஞ்சுக்க பாக்கறான்னே சொல்லு. அப்படியே அந்த ரஞ்சித் ஒரு எதிர்க்கட்சிக்காரன்,  ஆத்திகவாதிகளுக்கு எதிரானவன்னும் ஒரு பிட்டைப் போடு!’’‘‘இப்ப ரஞ்சித்தைக் கொல்றதா முக்கியம்?’’

‘‘நான் போனே பேச முடியாதபடி பண்ணிட்டானே? பேசினா அது ரெக்கார்ட் செய்யப்படுமே! இப்பகூட மத்திய மந்திரிகள் அந்தரங்கமா பேசலாம்.  ஏதாவது கேட்கலாம். என் பிரைவசியே போயிடுச்சே?’’‘‘புரியுது... கமிஷனர்தான் சரியா நடவடிக்கை எடுக்கணும். எடுப்பாரா?’’
‘‘அதுக்கு டெல்லில நம்ம மினிஸ்டருக்கு பிரஷர் கொடு. எல்லாம் தானா நடக்கும்!’’‘‘அப்புறம்..?’’

‘‘நாம இரண்டு பேருமே உருமாறணும். நான் என் தாடி முடியில இருந்து சகலத்தையும் நீக்கிக்கறேன். ஒரு காட்டுவாசி போல என்ன மாத்திக்கறேன்.  நீயும் ஒரு காட்டுவாசிப் பெண்ணா மாறிடு...’’‘‘அவங்கள பின்தொடரும்போது அடையாளம் தெரிஞ்சிடாம இருக்கவா?’’
‘‘ஆமா...’’‘‘அதுக்குள்ள அவங்க ரொம்ப தூரம் போயிடுவாங்க. குறிப்பா மலைக்குள்ள இறங்கிட்டா டவர் கிடைக்காது. போன்ல பேச முடியாது.  அதனால நம்பளாலயும் அவங்க இருக்கற இடத்தை ட்ரேஸ் பண்ண முடியாது!’’

‘‘அப்ப கார்ல போய்க்கிட்டே மேக்கப் போட்டுக்குவோம். ஒரு கடைல ரேசர், அப்புறம் உனக்கு புடவை வாங்கிக்க...’’
‘‘உத்தரவு ஜி! தப்பா எதுவும் ஆயிடாம இருந்தா போதும்...’’‘‘ஆகவே ஆகாது. நான் அந்தப் பலகணியை அடையாம விடமாட்டேன். நீ முதல்ல போன்  போட்டு நான் சொன்னதைச் செய்து முடி. அப்புறம் காரை எடு. அவங்கள அதிகபட்சம் 100 மீட்டர் தூர அளவுல நாம நெருங்கித் தொடர்ந்துகிட்டே  போகணும். உம்... ஜல்தி!’’

சதுர்வேதியின் புத்திசாலித்தனத்தை ஒருபுறம் வியந்தபடியே விபா முதலில் டெல்லிக்கு போன் செய்தாள். பின் கமிஷனருக்கு!
அப்படியே காரில் வேகமானாள். வழியில் ஒரு கடையில் ரேசரை வாங்கியவள், துணிக்கடையில் நூல் புடவையாகப் பார்த்து வாங்கிக்கொண்டாள்.  அதையெல்லாம் கட்டிப் பழக்கம் இல்லை அவளுக்கு. அதைக்கூட எப்படியாவது கட்டிக்கொண்டு விடலாம். முகத்தின் பளபளப்பை, க்ரீமும்  எண்ணெயும் பூசி உருவாக்கிய மினுமினுப்பை, பியூட்டி பார்லருக்குப் போய்  ட்ரிம் செய்துகொண்ட புருவங்களை என்ன செய்வது? அப்படியே  விட்டுவிட வேண்டியதுதான்!

கார் பறந்துகொண்டிருந்தது. சாலையோரமாக மொபட்டில் பயணிக்கிற மேலுக்கு சட்டைகூட போட்டிராத ஒரு விவசாயிகூட செல்போனில் பேசியபடி  சென்று கொண்டிருக்கக் கண்டாள். டீக்கடை ஒன்றில் பாட்டுச் சத்தம் காதைக் கிழித்தது. வழியெங்கும் ஃப்ளக்ஸ் போர்டுகளில் பூப்பெய்திய பெண்கள்  சிலரும், காலமாகிவிட்ட சிலரும் சிரித்தனர்.

அது என்னவோ தெரியவில்லை. இறந்துவிட்ட அவ்வளவு பேர் படங்களுக்கு மேலும் ‘இமயம் சரிந்தது’ என்றே எழுதப்பட்டிருந்தது. வேடிக்கையாக  இருந்தது விபாவுக்கு... விஞ்ஞானக் கரும்பை சக்கையாகப் பிழிந்து பயன்படுத்துபவன்தான் தமிழன். ஆனால், விஞ்ஞானத்துக்காக எதையும் செய்ய  மாட்டானோ?அந்தக் கார் பயணத்தில் இப்படி எல்லாம் விபாவுக்குள் கேள்விகள். சதுர்வேதியோ, ‘மரணம் என்று ஒன்று வந்தால் அதில் விபாவை  சிக்க வைத்து தான் தப்பித்துவிட வேண்டும்’ என்பது போலவே யோசித்தபடி இருந்தான்.

நிற்காதபடி ஒரு மழை தொடங்கிப் பெய்தபடி இருந்தது. அதனால் சாலையில் பெரிய நடமாட்டமில்லை. முக்கியமாக கார் ஓட்டுபவர்கள் வரையில்  கிலி மூட்டும் நாய்களின் நடமாட்டமில்லை. எனவே வர்ஷனால் காரை வேகமாய் செயல்படுத்த முடிந்தது.அது தாணிப்பாறையில்தான் முடிந்து  நின்றது. இனி அங்கிருந்து நடந்துதான் செல்ல வேண்டும்.காருக்குள்ளேயே வள்ளுவர் அந்த பெட்டி சமாசாரங்களை எடுத்தார். வர்ஷன் காரை விட்டு  இறங்கி சற்று மழையில் நனைய விரும்பினான். ப்ரியாவுக்கும் அந்த நனைதல் தேவைப்பட்டது. வள்ளுவரும் புரிந்தது போல் இறங்கினார்.  நனைந்தார்கள். இனி குளிக்கத் தேவையில்லை!

‘‘போதும்... காருக்குள்ள உக்காந்து துவட்டிக்கிட்டு வழியப் பார்ப்போம்’’ என்றார் வள்ளுவர்.அவ்வாறே செய்தனர். வள்ளுவர் எப்போதும்  வைத்திருக்கும் விபூதியை எடுத்து பரபரவென நெற்றியில் பூசிக்கொண்டு, தன் குலதெய்வத்தையும் முன்னோர்களையும் பிரார்த்தனை  செய்துகொண்டார்.பிறகு ஏட்டின் அடுத்த பக்கத்தைப் படிக்கத் தொடங்கினார்.

அப்போது ஒரு அதிசயமும் நடந்தது. முன்பு படித்து முடித்த ஏடுகள் அவ்வளவும் ஈரம் படவும் அப்படியே அழிந்து போனது! தண்ணீரின் ஒரு  சிறுதுளிகூட போதும், அந்த ஏட்டின் எழுத்துக்கள் அழிந்துவிடும் என்பது வள்ளுவருக்குப் புரிந்துவிட்டது. கூரிய எழுத்தாணி கொண்டு  வெட்டெழுத்தாய் எழுதாமல், மூலிகை மசி கொண்டு கொட்டெழுத்தாய் அது எழுதப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டவர் அதற்குப் பின்னாலும் ஒரு  சூட்சமம் இருப்பதை உணர்ந்தவராக ‘‘சிவ சிவா’’ என்றார் சிலிர்ப்போடு...

‘‘என்னய்யா... திடீர்னு ‘சிவசிவா’ங்கறீங்க?’’‘‘ஒண்ணுமில்ல! காலம் நம்மை ஆட்டி வைக்கறதையும், நாமளும் ஆடுறதையும் நினைச்சேன். என்ன ஒரு  கணக்கு... என்ன ஒரு கணக்கு...’’ - என்று சிலிர்த்தார்.‘‘சரிய்யா! ஏடு என்ன சொல்லுது?’’‘‘இரும்மா பாத்துடறேன்...’’ என்று பார்க்க முனையும்போது  வர்ஷனை ரஞ்சித் போனில் கூப்பிட்டான். வள்ளுவரும் தேங்கினார். ரஞ்சித் பேசினான்.

‘‘வர்ஷா ஜாக்கிரதைடா! அந்த சதுர்வேதி எப்படியோ என்னைக் கண்டுபிடிச்சிட்டான்டா. ராத்திரி 12 மணி சுமாருக்கு க்ரைம் பிராஞ்ச் போலீஸ்  கமிஷனர் சிவில் டிரஸ்ல ஆபீஸ் வந்துட்டார். நல்லவேளை, அப்ப நான் டீ குடிக்க வெளியே போயிருந்தேன். என் ஃப்ரெண்ட் ஒருமாதிரி பேசி  கமிஷனரை சமாளிச்சிட்டான். ‘சதுர்வேதிங்கறவரையே தெரியாது.... யார் சார் அவர்’னு கேட்டு கமிஷனரையே முட்டாளாக்கிட்டான்.
வேற வழியில்லை அவனுக்கு... ஏன்னா, எனக்கு அவன் இல்லீகலாதான் உதவி செய்துக்கிட்டு இருக்கான்.

ஆனாலும் அந்த இல்லீகலுக்குப் பின்னால ஒரு லீகலான விஷயமும் இருக்கு. நிஜத்துல அவன் சதுர்வேதி பத்தி நிறைய தெரிஞ்சி வச்சிருக்கறவன்.  அவன் ஒரு ஆன்மிக வியாபாரின்னு நல்லா தெரிஞ்சவன். அதனாலதான் எனக்கு உதவி செய்தான்!’’ என்று மூச்சு விடாமல் பேசிட, வர்ஷன், ப்ரியா,  வள்ளுவரிடம் திகைப்பு.‘‘சரிடா... இப்ப என்ன செய்யப் போறே?’’

‘‘அவன் போனே பேசலடா... சுதாரிச்சிட்டான். அவனை இனி ட்ரேஸ் பண்றதும் கஷ்டம். போன்ல இருக்கற அவன் சிம்மை கழட்டிட்டான். அதனால  அவன் இருக்கற இடத்தைக் கண்டுபிடிக்க முடியல. ஆனா, நிச்சயமா  உங்களுக்கு ரொம்ப சமீபத்துலதான் இருக்கணும்!’’‘‘அப்படியும் இருக்கலாம். நாங்க  இப்ப சதுரகிரி அடிவாரத்துல இருக்கோம். மழை பின்னி எடுத்துக்கிட்டு இருக்கு. இனி எங்க கைல எதுவுமில்லை. ஏடு காட்ற வழில போகப் போறோம்.  மற்றதெல்லாம் தானா நடக்கக் கூடும்!’’

‘‘இங்க சென்னைலயும் பேய் மழை! தெருவுல முழங்காலுக்குத் தண்ணி ஓடிக்கிட்டு இருக்கு!’’‘‘ஓகே ரஞ்சித்... நீ ஜாக்கிரதையா இரு.  மாட்டிக்காதே!’’‘‘நான் மாட்டமாட்டேன்டா. மாட்டணும்னா ராத்திரியே மாட்டியிருப்பேன். அந்த சதுர்வேதி எமகாதகன். அவன நாம ட்ரேஸ்  பண்ண செல்போன் இருக்கு. நம்மை அவன் எப்படி... குறிப்பா, என்னை அவன் குறிவச்சதுதான் எப்படின்னு தெரியல!’’ - ரஞ்சித்  சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் காரைக் கடந்து காட்டுவாசிகள் வேடத்தில் சதுர்வேதியும், விபாவும்  ஒரு கூடையோடு போயினர்!

அந்தப் பலகணி சிவ சன்யாசிகளால  உருவாக்கப்பட்டது. எனக்கு அது தானா வசப்படாது. வசப்பட்டாலோ, அதன்பின் என்னை 
விட்டு அது எங்கேயும் போகாது!

‘‘நான் தினமும் நூறு கால் கூட பேசுவேன்... பணம் பிடிக்கவே மாட்டாங்க!’’‘‘அப்படி என்ன பிளான்?’’‘‘செல்போன் கஸ்டமர் கேருக்கு பேசுறது  மட்டுமே என் பிளான்!’’

‘‘டாக்டர்! என்னை ஏன் சாப்பாட்டை பாதியா குறைக்கச் சொல்லிட்டீங்க?’’‘‘நீங்க எனக்கு ஃபீஸ் கட்ட சிரமப்படக்கூடாதுன்னுதான்!’’- பி.பாலாஜி  கணேஷ், கோவிலாம்பூண்டி.

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்