நியூஸ் வே



* விமானப் பயணங்களின்போது ஆங்கில நாவல்கள் படிப்பது ஸ்ருதி ஹாசன் ஹாபி. சமீபத்தில் சுகன்யா வெங்கட்ராகவன் எழுதிய ‘டார்க் திங்ஸ்’  த்ரில்லர் நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்திருக்கிறார்!

* இந்தியில் ‘அகிரா’, ‘ஜூலி 2’ படங்களில் செம மாடர்ன் காஸ்ட்யூம்களில் கலக்கியிருக்கிறார் ராய் லட்சுமி. தெலுங்கிலும் இப்போது கமிட்  ஆகியிருப்பதால், மும்பைக்கும் ஐதராபாத்திற்குமாக பறந்து கொண்டிருக்கிறார்!

* ‘பிரேமம்’ சென்னையில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த மணிரத்னம், கார்த்தியை வைத்து எடுக்கவுள்ள  ப்ராஜெக்ட்டின் ஆடிஷனுக்கு சாய்பல்லவியை வரவழைத்திருக்கிறார். ஆடிஷனில் பாஸ் மார்க் வாங்கி விட்டது பொண்ணு.

*ஒரே விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் கலந்துகொண்டால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்குமா? ‘‘நான்  முதல்வராக இருக்கும்போது அதிகாலையிலேயே எழுந்து நியூஸ்பேப்பர்களைப் படித்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பேன்.  இப்போதைய முதல்வர் காலையில் நீண்ட நேரம் தூங்குகிறார். என எடியூரப்பா பேச, சித்தராமய்யா துளியும் அலட்டிக்கொள்ளாமல் பதில்  சொன்னார்... ‘‘உங்கள் ஆட்சியில் நிறைய ஊழல்; பிரச்னை. அதனால் தூக்கம் வரவில்லை. அதற்கு நான் என்ன செய்வது?’’

* ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பிரியை த்ரிஷா. ரஹ்மானின் கோவை இசை நிகழ்ச்சிக்கு நேரில் சென்று அவரது பாடல்களில் கரைந்து வந்திருக்கிறது  பொண்ணு!

* பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆர்வத்தோடு களம் இறங்குகிறது ஆம் ஆத்மி கட்சி. இப்போதே தலைப்பாகை கட்டிக்கொண்டு பஞ்சாபியில்  பேசியபடி மாநாடுகளை நடத்த ஆரம்பித்துவிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு எம்.பி.க்களை அந்தக் கட்சிக்குத்  தந்த மாநிலம் இது. ‘‘இங்கு போட்டியே எங்களுக்கும் ஆம் ஆத்மிக்கும்தான்’’ என காங்கிரஸ் வேறு சொல்ல, ஆளும் அகாலி தளம் மற்றும் பி.ஜே.பி  கூட்டணி கடுப்பில் இருக்கிறது.

* இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர், பிரெஞ்சு அதிபர் ஹோலண்டே. அவருக்கு அளிக்கப்பட்ட மதிய விருந்தில்  கலந்துகொண்ட ஒரே சினிமா பிரபலம், ஐஸ்வர்யா ராய். ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதால் பிரான்ஸில் ஐஸ்  ரொம்பவே பிரபலம். பிரெஞ்சு அதிபரோடு பேசியபடி அவரது டேபிளில் அமர்ந்து உணவருந்தினார் ஐஸ்வர்யா.

* ஒளிப்பதிவாளர் பி.சி.ராம் பிறந்த நாளை சிவகார்த்திகேயன் பட யூனிட்டே கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. பி.சி.ராம் குடும்பத்தை வாழ்த்த,  கவிஞர் அறிவுமதி,  ஒளிப்பதிவாளர்கள் ராம்ஜி, கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பலரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்திருந்தது ஹைலைட்!

* ‘‘சமோசாவில் ஆலு (உருளைக்கிழங்கு) இருக்கும்வரை பீகார் அரசியலில் லாலு இருப்பேன்’’ என்று சொன்ன லாலு பிரசாத் யாதவ் - நிதிஷ் குமார்  கூட்டணி ஆட்சியில், சமோசா மீது 13.5 சதவீத வரி விதித்திருக்கிறார்கள்.

* ஜப்பானிய லெஜண்ட், இயக்குநர் அகிரா குரோசவாவின் கல்லறைக்குச் சென்று மனம் உருகி வந்திருக்கிறார் மிஷ்கின். ‘‘வாழ்க்கையில் எனக்குக்  கிடைத்த அருமையான ஒரு தருணம் அது’’ என நெகிழ்கிறார் மிஷ்கின்!