உலகை மிரட்டும் ஜிகா ஜுரம்!



ஹாலிவுட் படங்களில் வரும் வேற்றுக்கிரக வில்லன்கள் போல ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு வைரஸ் வைரலாகப் பரவி உலகை மிரட்டும்.  பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போல கடந்த ஆண்டு எபோலாவின் ஆண்டாக இருந்தது.

இந்த ஆண்டு ஜனவரியிலேயே, பயத்தில் ஜில்லிட  வைக்கும் ஜிகா வைரஸ் மருத்துவ நிபுணர்களை தூக்கம் இழக்கச் செய்திருக்கிறது. தென் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் வேகமாகப்  பரவி வரும் இந்த வைரஸ், நம் ஊருக்கும் வரும் ஆபத்தை மறுப்பதற்கு இல்லை. இதற்கு சிகிச்சை தர மருந்துகளோ, வரும்முன் காப்பதற்கு தடுப்பு  மருந்தோ இல்லை என்பதுதான் மிரட்சியை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

* அது என்ன ஜிகா?

பல புது வைரஸ்களையும் போலவே இதையும் ஆப்ரிக்காவில்தான் முதலில் கண்டுபிடித்தார்கள். உகாண்டா நாட்டின் ஜிகா காடுகளில் மஞ்சள் ஜுரம்  பரவிய 1947ம் ஆண்டில், அந்த ஜுரத்துக்குக் காரணமான இந்த வைரஸைக் கண்டறிந்து, அதே காட்டின் பெயரை வைத்தார்கள். ரீசஸ் குரங்குகளின்  உடலில் இந்த வைரஸ் அப்போது இருந்தது. அவ்வப்போது இது திடீரென பரவும்; அப்புறம் காணாமல் போகும்.

* எப்படிப் பரவுகிறது?

டெங்கு, சிக்குன் குன்யா போன்ற சமீபகாலமாக நம் மக்களை வாட்டிக்கொண்டிருக்கும் ஜுரங்களைப் பரப்பும் அதே ஏடிஸ் எஜிப்டி கொசுவே இந்த  ஜிகா வைரஸையும் பரப்புகிறது. கர்ப்பிணித் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுகிறது. ஜிகா வைரஸ் உள்ள ரத்தத்தை ரத்த தானம் செய்யும்போது  பரவுகிறது; தாம்பத்ய உறவின்மூலமும் பரவும்.

* அறிகுறிகள் என்ன?

டெங்கு, சிக்குன் குன்யா போலவே இதன் அறிகுறிகளும் இருப்பதுதான் சிக்கலை இன்னும் மோசமாக்குகிறது. கொசு கடித்ததிலிருந்து, அல்லது வைரஸ்  பரவியதிலிருந்து 3 முதல் 12 நாட்களுக்குள் ஜுரம் வரும். அலர்ஜி வந்து சொறிந்தால் சிவப்பது போல உடலெங்கும் சிவப்பு சிவப்பாக தடிப்பு ஏற்படும்.  கண்கள் சிவக்கும். தலைவலி கடுமையாக இருக்கும். மூட்டுக்களிலும் வலிக்கும்.  
 
* இப்போது என்ன பிரச்னை?

இதுவரை ஆப்ரிக்க நாடுகள், பசிபிக் கடல் தீவு நாடுகள், சில தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாண்டி வேறெங்கும் ஜிகா வைரஸ் தாக்கியதில்லை.  முதல்முறையாக தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இது திடீரென படுவேகத்தில் பரவி பலரைத் தொற்றியுள்ளது. குறிப்பாக ஜிகா தாக்கிய  கர்ப்பிணிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

அவர்களின் உடலிலிருந்து இது குழந்தைகளுக்கும் பரவுகிறது. ஜிகா தாக்கிய குழந்தை, அளவில் சிறிதான  தலையோடு பிறக்கிறது. மூளை வளர்ச்சியும் தடுக்கப்படுகிறது. இதனால் காலம் முழுக்க அந்தக் குழந்தை, அறிவுத்திறன் வளராமலே வாழ வேண்டிய  கொடூரம்! கடந்த சில நாட்களில் இப்படி 2782 குழந்தைகள் பிறந்து, அவற்றில் 40 குழந்தைகள் இறந்தும் போயுள்ளன.

இதனால் கர்ப்பிணிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். ‘கொசுக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளைத் தவிர்த்திடுங்கள்; அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதைத்  தவிர்த்திடுங்கள்’ என அரசாங்கம் இப்போது அட்வைஸ் செய்கிறது.இது பரவும் வேகம்தான் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

இப்போது  அமெரிக்கக் கண்டத்தில் 21 நாடுகளில் ஜிகா தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. (ஆனாலும், அமெரிக்காவில் இதன் தாக்குதல் நேரடியாக இல்லை!)  ஏடிஸ் கொசு உலகம் முழுக்க வசிக்கும் ஒரு இனம். எனவே ஒருவர் தன் உடலில் ஜிகா வைரஸோடு உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், அவரைக்  கடித்து கொசு அங்கேயும் நோயைப் பரப்புவது சாத்தியம்.

* நமக்கு ஆபத்து இருக்கிறதா?

அமெரிக்க நாடுகளுக்கு இங்கிருந்து செல்பவர்கள் அதிகம். எனவே இங்கிருந்து செல்பவரோ, அமெரிக்க நாடுகளிலிருந்து வருபவரோ தன் ரத்தத்தில்  இதைச் சுமந்து வரக்கூடும்.ஏடிஸ் கொசு இந்தியா முழுக்க நீக்கமற நிறைந்திருக்கிறது. குளிர் காலம், வெயில் காலம் என்ற வித்தியாசம் இல்லாமல் கடந்த  இரண்டு ஆண்டுகளாக டெங்கு பல பகுதிகளை வாட்டி எடுத்தது.

குறிப்பாக தமிழகம் இதனால் பெரிதும் அவதிப்பட்டது. டெங்குவைப் பரப்பும் ஏடிஸ்  கொசு இந்த ஜிகாவையும் பரப்பினால் பெரிய ஆபத்து நேரும். ஜிகா இங்கு வருவதற்கு முன்பாகவே அதற்கான பரிசோதனை வசதிகளை புனேவில்  இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்.

எனினும், ‘‘நாம் இதற்காக பயப்படத் தேவையில்லை’’ என ஆறுதல் அளிக்கிறார், இந்த இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் மௌர்யா. ‘‘இதே ஏடிஸ்  கொசுதான் ஆப்ரிக்க நாடுகளில் மஞ்சள் ஜுரத்தைப் பரப்புகிறது. ஆனால் அந்த ஜுரத்தால் இந்தியாவுக்கு ஆபத்து இல்லை. காலம் காலமாக இந்தக்  கொசு கடித்தாலும், எப்போதுமே நமக்கு மஞ்சள் ஜுரம் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. ஜிகாவும் அப்படித்தான் நமக்கு ஆபத்தைத் தராது என  நம்புகிறோம். எனினும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது’’ என்கிறார் அவர்.

கொசுக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளைத் தவிர்த்திடுங்கள்; அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்!

- அகஸ்டஸ்