மிதுன லக்னத்துக்கு புதன் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் 23

இந்தத் தொடரில் இதுவரை ரிஷப லக்னத்தைப் பற்றிப் பார்த்தோம். மேலும், ரிஷபத்தின் லக்னாதிபதியான சுக்கிரனைக் குறித்தும், சுக்கிரனோடு  இணைந்து யோகங்களைத் தரும் கூட்டுக் கிரகங்களைக் குறித்தும் பார்த்தோம்.

அடுத்ததாக நாம் மிதுன லக்னத்தைப் பற்றித் தெரிந்துகொள்வோம்...  வாருங்கள்! மிதுன லக்னத்திற்கு அதிபதியாக புதன் வருகிறார். ஒன்பது கிரகங்களிலும் மிகவும் வித்தியாசமான கிரகமாக புதன் விளங்குகிறது. தன்னைத்  தானே தலைவனாக முடிசூட்டிக் கொண்டிருக்கும் கிரகம் இது.

பொதுவாக எல்லா கிரகங்களுமே வெவ்வேறு கிரகங்களின் வீட்டில்தான் உச்சம் அடைகின்றன. உதாரணமாக, செவ்வாயின் வீடான மேஷத்தில்தான்  சூரியன் உச்சமடைகிறது. சுக்கிரனின் வீடான கடகத்தில் சந்திரன் உச்சம் பெறுகிறது. செவ்வாயானது சனியின் வீடான மகரத்தில் உச்சமாகின்றது.  ஆனால், புதன் மட்டும் தன்னுடைய சொந்த வீடான கன்னி ராசியில் உச்சம் பெறுகிறது. இப்படி புதன் எதையும் சாராது தனது இடத்தில், தன்  சொந்தக் காலில் உயர்ந்து நிற்பதை உணர்த்தும் கிரகமாக விளங்குகிறது.

புதனானவர் தனக்கான தனி சாம்ராஜ்யத்தை தானே உருவாக்கிக் கொள்கிறார். ‘உடுக்கை இழந்தவன் கை போல’ உடனடியாக கைகொடுத்து  உயரத்துக்குத் தூக்கி விடும் கிரகமே புதனாகும். இதனாலேயே மிதுனத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்கும், நட்புகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள்.  அதனால் இவர்களை உறவினர்கள் ஓரம் கட்டுவார்கள். புதன் ஆதிக்கமுள்ளவர்களை பொதுவாகவே உறவுகள் ஓரம் கட்டும். அதனாலேயே  நண்பர்களின் உதவியோடுதான் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்.

புதன் என்பது சமாதான கிரகமும் ஆகும். சண்டைக் கோழிகளாக இருப்பவரிடையே சமாதானத்தை உருவாக்குவார்கள். சிரிக்கவும், சிந்திக்கவும்  வைப்பார்கள். அதே போல புதனானவர் சூட்சும புத்தி, சூட்சுமமான கேள்விகளைக் கேட்டல் போன்றவற்றுக்கெல்லாம் உரியவர். எதிலும்  நிபுணத்துவமும் தனித்துவமும் பெற்றுத் திகழவே விரும்புவார்.

எனவே இவர்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுவார்கள். அப்படி வேறுபட்டு நிற்பதுதான் அழகு என்று நினைப்பார்கள். பல நேரங்களில் பல  வேலைகளை சாதித்து விட்டு அமைதியாக ஒதுங்கும் சுபாவமும் உண்டு. இவர்கள் சிறந்த வினையூக்கியாக செயல்படுவார்கள். அணுக்கருவில்  புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் என்பதில் நியூட்ரானுக்கு அதிபதியாக புதன் வருகிறார். நேர்மின் சுமையுள்ள புரோட்டானையும், எதிர்மின்  சுமையுள்ள எலக்ட்ரானையும் நியூட்ரான் இணைத்து அதிவேகமாக செயல்பட வைக்கிறது. ஆண் தன்மை, பெண் தன்மைக்கு நடுவேயுள்ள இரண்டின்  சாராம்சமும் கொண்ட கிரகமே புதனாகும்.  

அடுக்குமொழிக்கு சொந்தமே புதன்தான். நேர்த்தியாக கவிதை எழுதுவது, சிலேடைப் பேச்சு, பெரும்கூட்டத்தையே வசீகரிக்கும் மேடைப் பேச்சுகளுக்கு  ஆதார கிரகமே இதுதான். சிலருக்கு நன்றாகப் பேச வரும். ஆனால், ஒரு சிலருக்குத்தான் எழுதவும் பேசவும் வரும். அந்த ஒரு சிலரை உருவாக்குபவரே  புதன்தான். நாவன்மை, நாவலர் என்று பல நாவுக்கரசர்களை உருவாக்குவதும் புதனே. படித்ததை மேடையில் ஒப்பிக்காமல் பார்வையாளர்களுக்கு  தகுந்தாற்போல ஜனரஞ்சகமாகப் பேசும் ஆற்றலைத் தருபவனே புதன். நாலு முக்கால் மூணு என்பது முதல் அல்ஜீப்ரா வரையிலும் புதனே  நிர்ணயிக்கிறான். ஷேர் மார்க்கெட் முதல் வங்கிக் கணக்கு வரையிலும் இவர் தன் பொறுப்பில் வைத்திருக்கிறார்.

புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் திறமை பெற்று  தலைசிறந்த வல்லுனர்களாக விளங்குவார்கள். பத்திரிகைத் துறையில் ஆசிரியர், நிருபர், பதிப்பகத்துறை போன்றவற்றில் வெற்றிகரமாக வலம் வர இவரே  உதவுகிறார். குரு, சுக்கிரன், செவ்வாய் உள்ளிட்ட நவகிரகங்களையும் வெறும் கோள்களாக மட்டும் பார்க்கச் செய்யாமல், மனித வாழ்க்கையின் மீது  அவை உண்டாக்கும் தாக்கத்தை ஜோதிடமாக பார்க்கச் செய்பவரே புதன்தான்.

எதிர்காலத்தைக் கணிக்கும் ஜோதிடரை இயக்குவதும் இவரே. எந்த விஷயமாக இருந்தாலும் சுருங்கச் சொல்லச் செய்வதும், ‘சுருக்’கென்று சொல்வதும்  இவரே. சரியான குசும்புப் பேர்வழி என்று பெயரெடுக்கச் செய்பவரும் புதனே. கூர்மையான வார்த்தைகளால் குதறி எடுத்து தவறைச் சுட்டிக்  காட்டுபவரும் புதனே. தூது செல்பவர், உபதேசம் செய்பவர், ஊர் ஊராக சஞ்சாரம் செய்பவரெல்லாருமே புதனின் ஆதிக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். 

இப்போது புதன் ஒருவருடைய ஜாதகத்தில் எங்கு தனித்து அமர்ந்திருக்கிறது என்பதைப் பொறுத்து அடையும் பலன்களைப் பார்க்கலாம்...
 லக்னத்திலேயே - அதாவது மிதுனத்திலேயே புதன் தனித்து அமர்ந்திருந்தால் நல்லதே ஆகும். இந்த அமைப்பு கொண்டவர்கள் நிற்காமல் பாயும் நதி  போல, எதையோ தேடிச் செல்லும் யாத்ரிகன் போல, ஒருவித தேடலோடு இருப்பார்கள். எத்தனை பெரிதாக சாதித்தாலும் திருப்தியற்று இருப்பார்கள்.  எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு ஐந்து முறை யோசித்துத்தான் முடிவெடுப்பார்கள். தான் பார்க்காமல் எந்தவொரு விஷயமும் முடிவு செய்யப்படக்  கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள். சமூகத்தின் பார்வை மிகவும் முக்கியம் என்று நினைப்பார்கள்.

கடகத்திற்கு - அதாவது இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்திற்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். அங்கு புதன் நின்றால், எதுபற்றி பேசத்  தொடங்கினாலும் ஏதேனும் நல்ல விஷயத்தைச் சொல்லி விட்டுத்தான் பேசவே தொடங்குவார்கள். யார் மனமும் புண்படக் கூடாது என்பதில்  தெளிவாக இருப்பார்கள். கவிதை மொழியில் பேசுவதும் இவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும்.

மூன்றாம் இடமான சிம்மத்தில் புதன் தனித்து இருந்தால், இளைய சகோதரி, சகோதரர்கள் மீது மிகவும் அன்போடு இருப்பார்கள். ஆனால், மூத்த  சகோதர, சகோதரி எது சொன்னாலும் மறுத்துப் பேசும் எதிர்மறைத்தன்மையும் இருக்கும். எப்போதும் உழைத்துக்கொண்டே இருப்பார்கள்.
நான்காம் இடத்திற்கு கன்னி புதன் பொறுப்பேற்பதால் தாயார் ஜாடையில் இருப்பதாக இவர்களைக் கூறுவார்கள். தாயை தெய்வம் போலக்  கருதுவார்கள்.

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு பூர்வ புண்ய ஸ்தானம் என்று சொல்லப்படும் ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக துலாச் சுக்கிரன் வருகிறார். இங்கு புதன்  தனித்து இருந்தால், எப்போதும் இறையருள் இருக்கும். அதனால் எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும், அநாயாசமாக அதிலிருந்து மீண்டு  வருவார்கள். பெண் குழந்தைகளின் மீது அபார பிரியத்தோடு இருப்பார்கள். மனம் சஞ்சலப்படும்போது எங்கேனும் தோட்டம் அல்லது  தோப்புகளுக்குச் சென்று நீர் பாய்ச்சுவது அல்லது வேறு ஏதேனும் செய்வது நல்லது.

இல்லையெனில் பிரச்னைகள் பூதாகரமாகக் கிளம்பும். ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்திற்கும், பதினோராம் இடமான லாபத்திற்கும் செவ்வாய்  அதிபதி ஆகிறார். அதாவது சத்ரு ஸ்தானமான விருச்சிகத்தில் புதன் தனித்து அமர்கிறார் எனில், அப்படிப்பட்ட ஜாதகத்தில் செவ்வாய்  சரியில்லாவிட்டால், மூத்த சகோதரர்களால் நிறைய இழப்புகள், ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் கேந்திராதிபதி தோஷமும் இங்கு  உருவாகிறது. பூமிகாரகனான செவ்வாய் இவர்களின் எதிரி ஸ்தானமாக வருவதால், அங்கீகரிக்கப்படாத காலி மனைகளில் முதலீடு செய்யாமல்  இருப்பது நல்லது.

ஏழாம் இடத்திற்கு அதிபதியாக தனுசு குரு வருவதால் மனைவியின் மீது பாசமாக இருப்பார்கள். மனைவியானவர் எதிலேயும் சரியான பார்வையோடு  பேசுவார். எட்டாம் இடமான மகரத்தில் புதன் இருந்தால், ‘மறைந்த புதன் நிறைந்து தருவார்’ என்பது போல எல்லோராலும் கவனிக்கப்படாத  விஷயங்களையெல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள். எட்டாம் இடமான கும்பத்தில் புதன் அமர்ந்தால், தந்தையோடு நிறைய பேச வேண்டுமென்று  விரும்புவார்கள். ஆனால், நேருக்கு நேர் பார்க்கும்போது கேட்காமலேயே விட்டு விடுவார்கள். தந்தையைப் பார்த்து வியப்பார்கள். அவரை  முன்மாதிரியாகக் கூட கொள்வார்கள். செலவாளியாக இல்லாமல் சிக்கனமாக இருக்கப் பழகினாலே போதும்.

பத்தாம் இடமான உத்யோக ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு வருகிறார். இங்கு புதன் தனித்து அமர்கிறார் எனில், தொடர்ந்து ஒரு இடத்தில் வேலை  பார்க்க விரும்பினாலும் அது முடியாமல் போகும். திடீரென்று சுயதொழில் தொடங்கி முன்னேறுவார்கள். சொந்தமாக கன்சல்டன்சி வைத்து  நடத்துவார்கள். இந்த அமைப்பில் பிறந்த பெரும்பாலானோர் அக்கவுன்டன்ட், ஆடிட்டர் என இருப்பதைக் காணலாம். ஆனாலும், பத்தாம்  இடமென்பது கேந்திராதிபத்ய தோஷமாக இருப்பதால், வேலை விஷயத்தில் நிலையற்ற தன்மை இருந்தபடியே இருக்கும்.

மேஷத்திற்கு - அதாவது பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கு அதிபதி செவ்வாய். இங்கு புதன் தனித்து இருந்தால், குடும்பத்தை விட்டுப் பிரிந்து  சென்று பணம் சம்பாதிப்பார்கள். சவால்களை எதிர்கொண்டு ஜெயித்துக் காட்டும் வல்லமை இவர்களுக்கு உண்டு. ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற  முடிகிறது என்று புலம்புவார்கள். தன்மான கிரகம் உங்களுக்கு செவ்வாயாக இருப்பதால் கொஞ்சம் கோடு போட்டாலே ரோடு போடுவார்கள்.
லக்னாதிபதியும், நான்குக்கு உரியவருமான புதன், 12ம் இடமான ரிஷபத்தில் மறைகிறார்.

இங்கு புதன் தனித்து இருந்தால், உழைப்பு அதிகமாக இருக்கும். ஊதியம் இருக்காது. ஊருக்காக உழைக்கிறவர்களாக இருப்பார்கள். விகடகவியாக  பேசுவார்கள். சுற்றுலா பிரியராகவும் இருப்பார்கள். மனதில் இருப்பதை மறைக்கத் தெரியாமல் மாட்டிக் கொள்வார்கள். கழுத்து வலி அவ்வப்போது  வந்தும் நீங்கியபடி இருக்கும். வாரிசுகளால் பெரிதாக ஆதாயமடைய முடியாது. யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு  விளங்குவார்கள். கொஞ்சம் கோள் சொல்பவர்களாக இருப்பார்கள்.

தனித்த புதன் பொதுவாக எந்தவிதமான எதிர்மறைப் பலன்களையும் தராது. செவ்வாயின் இடமான மேஷம் மற்றும் விருச்சிகத்தில் அமரும்போது சில  சமயம் எதிர்மறையான பலன்களைத் தரக்கூடும். எப்படியிருந்தாலும் நேர்மறையான பலன்களைப் பெற லட்சுமி நரசிம்மர் அருள்
பாலிக்கும் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். அதிலும் சென்னை, நங்கநல்லூரில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று தரிசிப்பது  விசேஷம். இதுதவிர உங்கள் ஊருக்கு அருகேயுள்ள லட்சுமி நரசிம்மரையும் தரிசிக்கலாம். அடுத்த வாரம் முதல் புதனோடு சேர்ந்து வரும் கூட்டுக்  கிரகங்கள் மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்குத் தரும் யோகங்களைப் பார்க்கலாம்.

(கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா
கே.பி.வித்யாதரன்

ஓவியம் மணியம் செல்வன்