நல்லவர்



‘‘அப்பா, நான் ஆபீஸ்ல ஒருத்தரை லவ் பண்றேன். அவர் ரொம்ப நல்லவர்!’’‘‘ம்...’’‘‘முதல்ல கோயிலுக்குப் போகலாம்னு சொல்லிட்டு என்னைக் கூட்டிட்டுப் போனார். போன் பண்ணி அவர் அம்மாவையும் வரச்சொல்லியிருக்கார்.  அவ்வளவு டீசென்ட்டான டைப் அவர்...’’‘‘ம்...’’

‘‘சினிமாக்குப் போகலாம்னு சொல்லிட்டு அவர் தங்கையையும் கூட கூட்டிட்டு வந்து எங்க ரெண்டு பேர் சீட்டுக்கும் நடுவுல அவளை உட்காரச்  சொன்னார். ஹி ஈஸ்
எ ஜென்டில்மேன்!’’
‘‘ம்ம்...’’

‘‘நீ முதல்ல உங்க அப்பாகிட்ட பேசு! அவர் ஒத்துக்கிட்டா முறைப்படி எங்க வீட்ல எல்லாரையும் கூட்டிக்கிட்டு முறைப்படி வந்து பேசறேன்னு கண்ணியமா சொன்னார், தெரியுமா?’’‘‘ம்ம்ம்...’’ 

‘‘என்னப்பா இது? நான் பாட்டுக்கு அவரைப் பத்தி சொல்லிக் கிட்டே போறேன். நீங்க ஒண்ணுமே பேசலை? அவரை எனக்கு கல்யாணம் செய்து  வைக்க என்ன தயக்கம்?’’‘‘நீ காதலிக்கிற விஷயம்... அவனோட கோயிலுக்கும், சினிமாக்கும் போன விஷயம்... எல்லாம் எனக்கு இப்பத்தான் தெரியும்.  ஆனா, அவங்க வீட்டுல எல்லாருக்கும் தெரிஞ்சப்புறம்தான் அவன் உன்கூட வந்திருக்கான். அவன் கூட வெளியே போகும்போதெல்லாம் எங்ககிட்ட  எவ்வளவு பொய் சொல்லியிருப்பே! அவ்வளவு நல்ல பையனை எப்படி உன்னை மாதிரி தன்னிச்சையா முடிவெடுக்கற பெண்ணுக்கு கட்டி  வைக்கிறதுன்னுதான் யோசிக்கிறேன்!’’

வி.சிவாஜி