உதவி செய்யறேன்னு நடிகர்கள் விளம்பரம் தேடிக்கிட்டாங்க!



‘குற்றப்பரம்பரை’க்கு பாலா உரிமை கொண்டாடக்கூடாது!

இனி தமிழனுக்கே பரிவட்டம்!


சிம்புவுக்கு படிப்பினை வேணும்!


பாரதிராஜா பளீர்

சென்னைக்கும் லண்டனுக்குமாக சீஸன் டிக்கெட் போட்டுப் பறந்து பறந்து வேலை பார்க்கிறார் பாரதிராஜா. வழக்கம் போலவே வெள்ளை  சிரிப்போடு வெளியே வருகிறார். ஆனாலும், குரலில் குறிப்பிட முடியாத வேதனை! எப்படி இருந்தாலும் எல்லாம் பேசுகிற மனசு அவருடையது.  பேசினோம்...

‘‘சென்னை வெள்ளத்தில் மிதந்த சமயம் லண்டன்ல இருந்தேன். ‘ஓம்’ படப்பிடிப்பு. மனிதநேயம் எல்லார்கிட்ட இருந்தும் வெளிப்படக் காரணமா  இந்தப் பெருவெள்ளம் அமைஞ்சுருச்சு. வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாதும்பாங்க. ஆனா, நடிகர்கள் இங்கே விளம்பரத்தைத்  தேடிட்டாங்க. அரசியல்வாதிகள் ஜன்னல் வழியாதான் வெள்ளத்தைப் பார்த்தாங்க. சில பெரிய நடிகர்கள் ஒண்ணுமே செய்யலை.

அது பெரிய வருத்தம்ங்க. அவங்க தாத்தா காலத்தில் இங்கே இருந்த நன்றியை மறக்காம, தெலுங்கு நடிகன் கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுக்குறான்.  இங்கே நம் மக்கள்கிட்டயே வாங்கிச் சாப்பிட்டு கிள்ளிக் கொடுக்குறாங்க. இதுதானேய்யா, கொடுக்குற தருணம்? நன்றியைக் காட்டி, திருப்பிக்  கொடுக்குற நேரம்? நான் லண்டனில் பிரிட்டானியா தமிழ்ச் சங்கம், சைவ சித்தாந்தக் கழகம், இளைய தமிழகம்னு அமைப்புகள்கிட்ட சொல்லி ஒரு  பெருந்தொகையை வாங்கி இங்கே பணிகளுக்குக் கொடுத்தேன். இதை சொல்லிக்கக்கூட நான் வெட்கப்படுகிறேன்!’’

‘‘ ‘ஓம்’ படப்பிடிப்பை லண்டனிலேயே நடத்தி முடிச்சிடுவீங்க போலிருக்கே..?’’‘‘களமே அங்கேதான். இது என் வாழ்வில் ஒரு முக்கியமான படம். சில  விஷயங்கள்தான் நாமே பெருமிதப்படுற மாதிரி நடக்கும். அப்படி இந்த ‘ஓம்’ நிச்சயமா இருக்கும். இதை சினிமா ஜாம்பவான் ஒருத்தர், அருமையான  சினிமா ரசிகன், பல மொழிகளில் கதை எழுதியவர்கள்னு சிலர் பார்த்தாங்க. அவர்களுக்கு அதிர்ச்சி. ‘எப்படி இவ்வளவு உணர்வுபூர்வமா உங்களால்  வெளிப்பட முடிஞ்சது’னு திகைச்சுப் போயிட்டாங்க. ‘இதுதான் தமிழ் சினிமா, உலக சினிமாவுக்குத் தர்ற முயற்சி’ன்னும் சொல்லிட்டாங்க.  இத்தனைக்கும் ரஃப் கட்தான் காட்டினேன்.

இதில் வைரமுத்து, கபிலன், மதன்கார்க்கினு மூவரின் பங்களிப்பும் உண்டு. வைரமுத்துவின் கவிதைகளை அவர் அறியாமலே பயன்படுத்தியிருக்கிறேன்.  என் உதவியாளனிடம், ‘அவர்கிட்ட சொல்லிடு’ என்றேன். சொல்லியிருக்கான். ‘அவருக்கு இல்லாத உரிமையா’னு ஒற்றை வார்த்தையில வெள்ளைக்  கொடி காட்டியிருக்கார். யுவன், ரகுநந்தன் என இசைப் பங்களிப்பும் உண்டு. என்னோட முக்கியமான படம் ‘ஓம்’. என் உதிரத்தை இதில்  விட்டிருக்கேன். என் ஆகச்சிறந்த படைப்பு இப்போதைக்கு இதுதான்!’’‘‘பாலா ‘குற்றப் பரம்பரை’ செய்கிறாராமே... என்னதான் நடக்குது இங்கே?’’

‘‘ ‘குற்றப் பரம்பரை’யை எனது லட்சியப் படம்னு சொல்லியிருக்கிறேன். பாலா அதை இயக்குறது பத்தி நானும் கேள்விப்பட்டேன். அவன் மேல  எனக்கு மரியாதை உண்டு. சில சமயம் நாம் வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு போட்டு சவைப்போம். அதை சிறு குழந்தை கேட்கும். கொடுத்தால் பல்  இல்லாமல் அதுவும் சவைக்கும். ஆனால், பாலா குழந்தையில்லையே! நான் சுவைத்த வெத்தலை சாற்றை சுவைக்கிற ஆசை பாலாவிற்கு இருக்க  சான்ஸே இல்லை. நான் துப்பிய எச்சிலை அவன் வாயில் போட்டுக்க மாட்டான்னு நம்புறேன்.

‘குற்றப் பரம்பரை’ எனது பாட்டன், முப்பாட்டன் காலத்தில் நடந்த கதை. அந்த ரணம், வேதனை, வீரம், வெள்ளைக்காரன்கிட்ட அடி வாங்கி செத்தது,  அதிலிருந்து என் மக்களும் இனமும் பட்ட வேதனை, விழுப்புண்களைச் சொல்லணும்னு நினைச்சேன். அந்தக் கலாசாரத்தை நான் அம்மணமா இருந்த  காலத்திலிருந்து, அந்தப் புழுதியில் விழுந்து, உருண்டு, புரண்டு உள்வாங்கியிருக்கேன்.

என் ஆத்தாளின் கருவறையில் நான் இருந்தபோதே, என் அப்பன் சிந்திய கண்ணீர்த் துளிகள்ல நான் கேட்டு வளர்ந்த கதை இது. பிரிட்டிஷ்  ஆதிக்கத்தின் கீழ், என் முன்னோர்கள் 35 வருஷம் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால சிந்திய ரத்தம் அது. பின்னாடி ஆயிரமாயிரம் கட்டுக் கதைகள்,  புனை கதைகள் அத்தனையும் சேர்ந்து கறை படிஞ்ச கதைகள். என் பாட்டன், அப்பன் மேல இருந்த அந்தக் கறைகளை நீக்க நினைச்ச என் கோபத்தின்  வெளிப்பாடுதான் ‘குற்றப் பரம்பரை’. இப்போ பாலா எடுக்கிறாராம்... என்ன விளையாட்டாப்பா இது?’’

‘‘ஆனால் நீங்கள் இவ்வளவு நாளாக எடுக்கவில்லையே?’’‘‘இதை குறைந்த பட்ஜெட்டில் அடக்கிட முடியாது. இருபது கோடியாவது வேணும்.  அதுக்காகவே 20 வருஷம் காத்திருந்தேன். போன மாசம்தான் லண்டன்ல ஒரு மிகப் பெரிய நிறுவனத்துகிட்ட பேசிட்டு வந்தேன்! லண்டனிலிருந்து  திரும்பி வந்தா, நாலா பக்கத்தில் இருந்தும் ‘அது உங்க படமாச்சே’னு ஓயாம விசாரிக்கிறாங்க.

50 நாட்கள் நானும் ரத்னகுமாரும் ரத்தமும் சதையுமா பேசிய கதை. ஒரே ஒரு நாள் வேல.ராமமூர்த்தி நம்மூர்க்காரன்ங்கற காரணத்தினால வந்து  உட்கார்ந்தான். அப்பவே அவன் வெளியே ஒரு மாதிரி பேசவே, ‘இதைப் பத்தி பேசாதே... தப்பு’னு எச்சரிச்சேன். நல்ல எழுத்துக்காரன், என்  பூமிக்காரன்... நீ எப்படி சோரம் போக முடியும்? பாரதிராஜாவின் ‘குற்றப் பரம்பரை’யை நீ தொடவே முடியாது. கலைஞனிடம் லட்சியம் இருக்கலாம்.  வியாபாரப் புத்தி இருக்கலாமா? அந்த மண்ணின் மொழியை உன்னால பேச முடியுமா? அதன் வீரம் செறிந்த மரபு தெரியுமா?

நானே பாலாவுக்கு போன்ல பேசினேன். ‘என்னய்யா, ‘குற்றப் பரம்பரை’ செய்யறீயாமே?’னு கேட்டேன். ‘வேல.ராமமூர்த்தி கொடுத்தார். அதனால...’னு  சொல்ல ஆரம்பிச்சான். ‘இதோ பார் பாலா... பச்சைக் குழந்தைக்குக் கூட தெரியும்... பாரதிராஜாவின் கனவுப் படம் ‘குற்றப் பரம்பரை’...’னு  சொல்லும்போதே, ‘அது வந்து... அது வந்து...’னு திணறினான். அதற்குப் பிறகு அவன்கிட்ட எதையும் பேசலை. ஒண்ணு சொல்றேன்... அறிஞ்சே  ஏமாற்றப்படுறதுதான், ஒரு மனுஷன் அடையிற வேதனைகள்ல ரொம்பக் கொடுமையானது. என் ஆக்கத்தை, உழைப்பை, இடையறாத முயற்சிகளை  இன்னொரு ஆள் உரிமை கொண்டாடுறதுதான் வேதனை ஐயா... வேதனை!’’

‘‘நடிகர் சங்கத் தேர்தலை கவனிச்சீங்களா..?’’‘‘எல்லா எலெக்‌ஷனையும் பேசுவோம். நான் எம்.ஜி.ஆரோடு இணைக்கமா இருந்திருக்கேன். பிரிஞ்சிருந்த  நான், இளையராஜா, வைரமுத்து எல்லாம் பார்த்துக்காமலே பாட்டெழுதி, அவர் இறுதி ஊர்வலத்தப்ப மெட்டு போட்டிருக்கோம். கலைஞரோட  விசுவாசமா இருந்திருக்கிறேன். அவரின் மரியாதைக்குரியவன் நான். ஆனா, இங்கே யார் வேணும்னாலும் வரலாம்னு ஆகிப்போச்சு. வா... விருந்தாளியா  மட்டும் வா! திண்ணையில தூங்கு, படுக்கை அறைக்கு வராதே!

தலைமைப் பொறுப்புக்கு தமிழனே வரணும். தமிழன் இனி தலைமை தாங்கலைன்னா தமிழினமே அழிஞ்சு போகும். ஒரு பிரச்னை வந்தா அதை  மறக்கடிக்க இன்னொரு பிரச்னையைக் கொண்டு வந்துடுறாங்க. என்ன செய்ய? ஈழப் பிரச்னை எரியும்போது மின்வெட்டு; மின்வெட்டில்  தவிக்கும்போது மதுவிலக்கு; வெள்ளத்தில் கதறும்போது சிம்பு பாட்டு. எனக்குத் தெரியாது... இனிமே இங்கே மண் சார்ந்த மனிதனுக்கே, தமிழனுக்கே  பரிவட்டம். அதுக்கு தடை வந்தால் இனிமே பாரதிராஜா பொறுக்கமாட்டான். அவனுக்குப் பதவி, பொறுப்பு எதுவும் வேண்டாம். ஒளிவிளக்கு ஏந்தி  அவனே வருவான். யாருக்காகவும் இல்லை... தமிழுக்காக!’’

‘‘சிம்புவின் பாட்டுக்கு இத்தனை முக்கியத்துவமானு நினைச்சீங்களா?’’‘‘அந்தப் பையன்தான் ‘வீட்டுல வச்சிருந்தேன், பொட்டியில வச்சிருந்தேன்’னு  சொல்றானே... நம்ப மாட்டீங்களா? அவனுக்கும் ஒரு படிப்பினை வேணும்தான். கெட்ட வார்த்தையை வச்சு பாட்டுப் போட்டா அதை உலகத்திற்கே  எடுத்துப் போறதா... என்னங்க அசிங்கம் இது? ஜானகி அம்மாவையே ‘நேத்து ராத்திரி யம்மா’னு முக்கல், முனகல், பெருமூச்சோடு பாட வச்சாங்களே...  அப்ப அசிங்கம் தெரியலையா? இப்ப ஒரு படம் பார்த்தேன்...

நாயகிக்கு காது கேட்காது. ஹீரோ ஒரு சீனில் வரிசையா லிப் மூவ்மென்ட்ல கெட்ட வார்த்தையா அடுக்கறான். அப்ப நீங்க பொங்கலையா! ‘மேட்டர்  பண்ணனணும்’னு சொல்றான்... அப்ப கோபம் வரலையா? ‘...ம்மால’னு சொன்னா தப்பு. சரி, ‘கொய்யாலே’னு சொல்றாங்களே... சுத்தமா? ‘டாடி மம்மி  வீட்டில் இல்லை... விளையாட வா’ங்கறா...

இது ஓகேவா? உங்க முதுகைக் காட்டாம, அடுத்தவன் முதுகை மட்டுமே பார்க்கிறீங்களே... ஏன்? நடிகர் சங்கத் தேர்தல் நடந்தது 3,000 பேருக்கு. அதை  என்னமோ நாட்டுக்கே தேர்தல் மாதிரி பண்றாங்க! லண்டன்ல இருக்கிற தமிழன் கூட டி.வி முன்னாடி உட்கார்ந்திருக்கான். அதென்ன அரசியல்,  பொருளாதார மாற்றத்திற்கான அடித்தளமா? தமிழ்நாட்டில்தாங்க இந்தக் கூத்து... கும்மாளம்!’’

- நா.கதிர்வேலன்