மூன்று மாணவிகளின் மரணத்துக்கு யார் பொறுப்பு?



சரண்யா, மோனிஷா, பிரியங்கா... இந்த மூன்று மாணவிகளும் தங்கள் மரணத்தின் மூலம், தமிழக உயர் கல்வித்துறையில் புரையோடிக் கிடக்கும்  முடைநாற்றத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

 உள்கட்டமைப்பு இல்லாமல், தகுதியான ஆசிரியர்கள் இல்லாமல், ரவுடிகளையும்,  அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு கொத்தடிமைக் கொட்டில் போல நடத்தப்பட்ட கல்லூரிக்கு எதிராக இவர்கள் நடத்திய  அத்தனை போராட்டங்களும் தோல்வியில் முடிந்தன.

துணைவேந்தர் முதல் ஆளுநர் வரை அத்தனை பேருக்கும் மனுக்கள் அனுப்பி ஓய்ந்து போனார்கள்.  அந்த நரகத்தில் இருந்து விடுபட, அந்த  அவலத்தை வெளிக்கொண்டு வர, மரணத்தைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை!

விழுப்புரம் மாவட்டம் பங்காரம் என்ற கிராமத்தில்  இருக்கிறது எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி. இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பிரிவில் MBBS-க்கு இணையான BNYS (Bachelor of Naturopathy  and Yogic Sciences) என்ற படிப்பை வழங்கும் கல்லூரி இது. இந்தியா முழுவதும் 17 கல்லூரிகள் உண்டு. தமிழகத்தில் 4 தனியார் கல்லூரிகள் உள்ளன.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் எஸ்.வி.எஸ். கல்லூரி 2008ல் தொடங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களோ,  உள்கட்டமைப்போ இல்லாத நிலையிலும் நீதிமன்றம் சென்று மாணவர் சேர்க்கைக்கான அனுமதியைப் பெற்றது கல்லூரி நிர்வாகம். இது தொடர்பாக  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இப்படியொரு வழக்கு இருப்பதே தெரியாமல் பல மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய  அரசும் சத்தமில்லாமல் இருந்திருக்கிறது. டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், ‘2008லேயே கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து  விட்டோம்’ என்கிறது.

ஆனால், பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அங்கீகாரப்பட்ட கல்லூரிகளின் வரிசையில் இந்தக் கல்லூரியின் பெயர் இடம்  பெற்றிருக்கிறது. ‘கல்லூரியில் போதிய வசதிகள் இல்லை, கொடுமைப்படுத்துகிறார்கள், நிறைய தவறு நடக்கிறது’ என்று கலெக்டரிடம் பலமுறை மனு  அளித்திருக்கிறார்கள் மாணவிகள்.

கடந்த மாதம் ஒரு மாணவி, விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடிக்கும் போராட்டத்தைக் கூட நடத்தியிருக்கிறார். காவல்துறை  தொடங்கி பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் வரை பல புகார்கள் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டம், நீதி,  அரசு அனைத்தும் கைவிட்ட பிறகு, மாணவிகளுக்கு இருந்த ஒரே வழி... மரணம்!

மூன்று மாணவிகளின் இந்த துயர மரணத்துக்கு யார் பொறுப்பு? ‘‘இந்தக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியவர்கள், கல்லூரியில் நடக்கும் அட்டூழியங்களை  பலமுறை கவனப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காத கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், கண்ணெட்டும் தூரத்தில் இப்படியொரு முறைகேடான  கல்லூரி இயங்குவதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காத எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர்,

பதிவாளர், 2015 ஜனவரியில் கல்லூரியை ஆய்வுசெய்து, ‘சகல வசதிகளும் இருக்கிறது’ என்று அறிக்கை அளித்த ஆய்வுக்குழுவினர்... இவர்கள் அத்தனை  பேரும் இறந்துபோன மாணவிகளின் ஆன்மாவுக்கு பதில் சொல்ல வேண்டும். இந்த அவலத்துக்கு முற்றிலும் இவர்களே பொறுப்பு...’’ என்கிறார், சமூக  சமத்துவத்துக்கான மருத்துவர் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.

‘‘எஸ்.வி.எஸ். கல்லூரி மட்டுமல்ல... தமிழகத்தில் ஏராளமான கல்லூரிகள் எவ்வித வசதிகளும் இல்லாமல் பணம் பறிப்பதையே குறிக்கோளாகக்  கொண்டு செயல்படுகின்றன. அரசும் சரி, பல்கலைக்கழகங்களும் சரி, தனியாருக்கு சாதகமாகவே செயல்படுகின்றன. ‘இந்தியாவில் பிளஸ் 2 முடித்த 17%  மாணவர்கள் மட்டுமே உயர்கல்விக்குச் செல்கிறார்கள். மற்ற மாணவர்களையும் உயர்கல்விக்குக் கொண்டு வர 150 மில்லியன் டாலர் முதலீடு செய்ய  வேண்டியிருக்கிறது. இதை அரசு மட்டும் செய்ய முடியாது. தனியார் பங்களிப்பும் தேவை’ என்று கூறி வெளிநாட்டு நிறுவனங்களையும் உள்ளே  இழுக்கிறார்கள். 

ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. மாணவர்களின் எதிர்காலம் பற்றி துளியும் கவலையில்லாமல் தனியார் கல்வி நிறுவனங்களின் முறைகேடுகளுக்கு  அதிகாரிகள் துணை போகிறார்கள். இந்த அவலத்தைக் களைய நிறைய நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அனைத்து தனியார் கல்லூரிகளிலும்  பெற்றோர், மாணவர், அரசு தரப்பு, கல்லூரி நிர்வாகிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். அரசே கட்டணத்தை வசூலித்து  கல்லூரிகளுக்குத் தர வேண்டும்; அல்லது வங்கிகள் மூலம் செலுத்த வேண்டும்.

உள்கட்டமைப்பு இல்லாத, போதிய ஆசிரியர் இல்லாத, முறைகேடாக நடக்கும் கல்லூரிகளை அரசு கையகப்படுத்த வேண்டும். இப்போது மருத்துவக்  கல்லூரிகளைப் பொறுத்தவரை ஓராண்டுக்கு அனுமதி தரும் நடைமுறை இருக்கிறது. சிறு அறையில் கல்லூரியைத் தொடங்கி, மாணவர்களிடம் பணம்  வசூலித்து கட்டிடங்களை விரிவுபடுத்திவிட்டு அடுத்த ஆண்டுக்கான அனுமதியை வாங்குகிறார்கள். முதன்முறை அனுமதி தரும்போதே, தேவையான  வசதிகளை உறுதிப்படுத்தி 5 ஆண்டுகளுக்கான அங்கீகாரத்தை மொத்தமாக வழங்க வேண்டும்’’ என்கிறார் ரவீந்திரநாத்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ‘‘லஞ்சமும், ஊழலும் தமிழக உயர்கல்வித் துறையின் இதயத்தை  அரித்துவிட்டன...’’ என்று வருந்துகிறார். ‘‘டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட  கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்ற தகவலே அங்கிருப்பவர்களுக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகம் கல்லூரியை  ஆய்வு செய்ய வேண்டும். இந்தக் கல்லூரியை ஆய்வு செய்தவர்கள் யார்..? அவர்கள் என்ன அறிக்கை அளித்தார்கள்..? மாணவிகளிடம் அவர்கள்  பேசினார்களா, இல்லையா..? பல்கலைக்கழகம் தனது நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதைத்தான் மூன்று மாணவிகளின் மரணம்  வெளிக்காட்டுகிறது.

உடனடியாக விழுப்புரம் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல மாதங்களாக மாணவிகள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால்  அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாணவிகளைத் திட்டி அனுப்பியுள்ளார். கலெக்டர் இந்த மாணவிகளின் மரணத்துக்கு பதில் சொல்லியாக  வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மட்டுமல்ல... பெரும்பாலான எஞ்சினியரிங் கல்லூரிகளின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் விலை  வைத்திருக்கிறார்கள். எந்த ஆய்வுக்குழு போனாலும் சரிக்கட்டி விடுகிறார்கள். அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சில் என  எல்லா அமைப்புகளிலும் கறுப்பு ஆடுகள் இருக்கிறார்கள்.

பெரும்பாலான துணைவேந்தர்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கிறார்கள். கோவை புதூரில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் கலை அறிவியல்  கல்லூரியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று 2 வருடங்களாகப் போராடுகிறார்கள் மாணவர்கள். கலெக்டர் தொடங்கி முதன்மை  செயலாளர் வரைக்கும் மனு கொடுத்துவிட்டார்கள். எந்த நடவடிக்கையும் இல்லை. பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களின்  எதிர்காலத்தின் மீது கொள்ளி வைத்துக் கொண்டிருக்கின்றன...’’ என்கிறார் பாலகுருசாமி.

‘‘தாராளமயக் கொள்கையை ஏற்றுக்கொண்டதன் விளைவை இந்தியா எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்களிடம் இதுமாதிரி  செயல்பாடுகளைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்க முடியாது...’’ என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு. ஆயுஷ் துறை  அங்கீகாரம் மறுத்ததை எதிர்த்து எஸ்.வி.எஸ். கல்லூரி தொடர்ந்த வழக்கை விசாரித்து, ‘ஆயுஷின் முடிவில் தலையிட முடியாது’ என்று தீர்ப்பளித்தவர்  இவர்தான். அத்தீர்ப்பிலேயே ‘கல்லூரியில் போதிய வசதிகள் இல்லை’ என்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தது குறிப்பிடத் தகுந்தது.

‘‘இதற்கு முன்பு டி.டி. மருத்துவக் கல்லூரி அங்கீகாரமே பெறாமல் மாணவர்களைச் சேர்த்து அவர்களை தெருவில் நிறுத்தியது. இன்றுவரை அந்த  மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தனியாரைப் பொறுத்தவரை, அவர்களுக்கு லாபம்தான் குறிக்கோள். அவர்கள் இப்படித்தான் நடந்து  கொள்வார்கள். அரசியல், ரவுடியிசம் என சகலமும் இவர்களோடு ஒருங்கிணைந்து இருக்கிறது.

பெரிய பெரிய வழக்கறிஞர்கள் ஆதரவாக வருகிறார்கள். அரசு ‘எனக்கென்ன’ என்ற மனநிலையில் எதிலும் தலையிடாமல் வேடிக்கை பார்க்கிறது. இது  மிகவும் மோசமான சூழல்’’ என்கிறார் சந்துரு. 94 குழந்தைகள் கருகிய பிறகுதான் கூரைக் கொட்டகைகளில் பள்ளிகள் நடப்பது அரசுக்குத் தெரிந்தது.  இப்போது 3 மாணவிகள் இறந்தபிறகுதான் கல்லூரியில் முறைகேடு நடப்பது தெரிகிறது. மரணங்கள்தான் அரசின் தூக்கத்தைக் கலைக்க வேண்டும்  போலிருக்கிறது!

லஞ்சமும், ஊழலும் தமிழக உயர்கல்வித் துறையின் இதயத்தை அரித்துவிட்டன...

- வெ.நீலகண்டன்