குட்டிச்சுவர் சிந்தனைகள்



கோடம்பாக்கத்துல ஒரு டைரக்டர் இருக்காரு. டைட்டானிக் கதையைக் கூட தமிழ்ல எடுக்குமளவு திறமைக்காரரு. நாலு மாசமா விட்டத்தைப் பார்த்து  யோசிச்சு, ‘ஜுராசிக் பார்க்’ படத்தை ‘சூசை தோட்டம்’னு மாத்தி, உல்டா கதை ரெடி பண்ணியிருந்தாரு.

சென்னையை செம்பரம்பாக்கம் தழுவிய ஒரு  நாளில் அந்த பேப்பர்கள் நனைஞ்சு போச்சா... இல்ல, அந்தக் கண்றாவிய புடிக்காம, அந்தப் பேப்பர்களே பெட்ரோல்ல கொளுத்திக்கிட்டு எரிஞ்சு  போச்சா...

இல்ல, ‘ஐ ஆம் வேணுகோபால், from டைடல் பார்க்’னு இயக்குனர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் நேரத்தில் தொலைஞ்சு போச்சானு தெரில.  கிடைச்ச பணியார புரொடியூசர கைவிட்டுடக் கூடாதுன்னு நைட்டோட நைட்டா கதை விவாதத்துல குதிக்கிறாரு டைரக்டரு.இயக்குனர்: தம்பிங்களா, ஆளுக்கொரு டைரக்டரோட கதைய சொல்லுங்க. ஒவ்வொரு படத்திலிருந்தும் ஒவ்வொண்ணா உருவிடுவோம்.

அசிஸ்டென்ட் 1: சார், இப்ப டிரெண்ட் மிஷ்கின் சார்தான். அவரோட ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’னு சுட்டோம்னா கண்டுபிடிச்சுடுவாங்க. அதனால முதல் படமான ‘சித்திரம் பேசுதடி’யை உல்டா பண்ணிடுவோம். படத்தோட கதை என்னன்னா, வெட்டியா இருக்கிற ஒரு  பையன் சார். சும்மா சுத்திக்கிட்டு இருந்த அவன், ஒரு ரவுடிகிட்ட வேலைக்கு சேருறான். நடுவுல ஒரு காதல், இதுக்கிடையில அந்த ரவுடியே  ஹீரோவுக்கு ஒரு துரோகம் செய்யறதுனால அவங்களுக்குள்ள மோதல்... கடைசில வில்லன ஹீரோ துவம்சம் பண்ண, சுபம். இந்தக் கதையை உல்டா  செஞ்சா, செதுக்கிடலாம்.

இயக்குனர்: அற்புதம்யா! ரவுடி ஹீரோ - காதல் - துரோகம் - பழி வாங்குதல், சூப்பர்யா! இந்தக் கதையையே வச்சிப்போம்.
அசிஸ்டென்ட் 2: சார், வேண்டாம் சார், அது ஒரிஜினல் படமா இருந்தாக்கூட, கொரிய படம், ஒரியா படம்னு ட்விட்டர், ஃபேஸ்புக்ல மிஷ்கின லந்து  கொடுத்திருப்பாங்க. தண்டவாளத்துல இருந்து தடம்புரண்டு டிரெயினு தாம்பரத்துல ஓடுன மாதிரி திரைக்கதையோட படம் எடுக்கிறது டைரக்டர்  ஹரிதான். ஹரின்னாவே ஞாபகம் வர்றது ‘சிங்கம்’, ‘சாமி’னு போலீஸ் படங்கள்தான்.

ஆனா, ‘ஆறு’ படத்தை பாருங்க. சின்னச் சின்ன தப்புகள் செஞ்சுக்கிட்டு அடியாளா இருக்கிற ஹீரோ சூர்யா, த்ரிஷாவோட காதல்ல விழுறாரு. அவரு  மொத்தமா நம்பியிருக்கிற வில்லன், சூர்யாவோட நண்பர்களைக் கொன்னு துரோகம் செய்ய, பொங்கி எழுகிற சூர்யா வில்லன் கோஷ்டிய துவம்சம்  பண்றாரு. இதை உல்டா பண்ணிக்கலாம் சார்.இயக்குனர்: பட்டாசுய்யா! ரவுடி ஹீரோ - காதல் - துரோகம் - பழி வாங்குதல். ஆமா, இந்தக் கதை கூட  மிஷ்கினோட ‘சித்திரம் பேசுதடி’ ஒன்லைன் போலவே இருக்கு?

அசிஸ்டென்ட் 2: அப்படிப் பார்த்தா, அவரோ முதல் படம் ‘தமிழ்’ கூட இதே மாதிரி ஒன்லைன்தான். வடை சுடுறத விட்டுட்டு கதையை டெவலப்  பண்ண பாருங்க சார்.அசிஸ்டென்ட் 3: சார், இதெல்லாம் வேணாம் சார்! கதை அமைக்கிறதுல டைரக்டர் பாலாதான் பெஸ்ட். அப்படியே கீழ  இருக்கிற விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை ஆழமா காட்டி, நம்ம மனசுல களிம்பு தடவறதுல பாலாதான் மாஸ்டர். ‘பிதாமகன்’ கதையைப்  பாருங்க... ஃபிராடுத்தனம் செஞ்சு வாழுற ஹீரோ.

 இடையில பாலிடெக்னிக் பெண்ணோட காதல். ஆதரவற்ற வெட்டியானுக்கு நட்பையும் தராரு. ரெண்டு பேரும் வில்லன்கிட்ட வேலை செய்யறாங்க.  வில்லன் முதல்ல செகண்ட் ஹீரோவ கொலை செஞ்சு துரோகம் இழைக்கிறாரு. ஹீரோ உடனே வில்லன கொன்னு பழி வாங்குறாரு. அதுவும்  கொரவளைய கடிச்சு கொல்றாரு. நாம வேணா, கொரவளைக்கு பதிலா கல்லீரலையோ, கிட்னியையோ கடிக்கிற மாதிரி காமிச்சுக்கலாம்.
இயக்குனர்: என்னய்யா? இந்தக் கதையும், ஃப்ராடு ஹீரோ - காதல் - துரோகம் - பழிவாங்கல்னு அதே ஒன்லைன்ல இருக்கு?
அசிஸ்டென்ட் 1: அதே டிசைன் சட்டை, ஆனா சைஸ் வேற!

அசிஸ்டென்ட் 3: சார், சமீபத்திய படங்கள் வேணாம் சார்! 1988ல சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்துல கமல் சார் நடிச்சு வந்த ‘சத்யா’வ எடுத்து பவுடர்  பூசுவோம். வேலை வெட்டி இல்லாத ஹீரோவுக்கு ஒரு காதல். நல்லவன்னு நம்பி வில்லன்கிட்ட வேலைக்குச் சேருறாரு. வில்லன் ஹீரோவுக்கும்  அவரோட நண்பர்களுக்கும் துரோகம் செய்ய, பொங்கிய ஹீரோ வில்லன தொங்கி எடுத்திடுறாரு.இயக்குனர்: யோவ், கதை நல்லா இருக்கு! ஆனா  இதுவும் ‘ஹீரோ - காதல் - துரோகம் - வில்லனை பழிவாங்குதல்’னு அதே ரூட்டுலதானே போகுது!

அசிஸ்டென்ட் 1: அதே டிசைன் சட்டை, ஆனா சைஸ் வேற!
அசிஸ்டென்ட் 2: இவ்வளவு ஏன் சார், 1985ல மணிரத்னம் இயக்கத்துல வந்த ‘பகல் நிலவு’ படத்துல கூட சும்மா சுத்தற முரளி, ரேவதியோட காதல்,  சத்யராஜ் செய்யற துரோகம், பழிவாங்கல்னு இதே கதைதான். டேய், நீ ஒண்ணு சொல்வியே... அத சொல்லு!
அசிஸ்டென்ட் 1: அதே டிசைன் சட்டை, ஆனா சைஸ் வேற.
அசிஸ்டென்ட் 3: சார், இந்த வேலை வெட்டி இல்லாதவன், ரவுடியையெல்லாம் விட்டுடுவோம், நேர்மையான போலீஸ் கதை ஒண்ணு சொல்றேன்.
இயக்குனர்: நேர்மையான போலீஸ்னா விஜயகாந்த் படமா?
அசிஸ்டென்ட் 3: கரெக்ட் சார்! ‘ஆனஸ்ட்ராஜ்’னு ஒரு படம். ேநர்மையான அதிகாரி, அவருக்கு அழகிய மனைவி, வில்லத்தனம் தெரியாம பழகுற  நண்பன். துரோகம், பழிவாங்கல்னு அற்புதமான படைப்பு சார்.
இயக்குனர்: இந்தக் கதையை கேட்கிறப்ப எனக்கே ஒண்ணு சொல்லத் தோணுது... ‘அதே டிசைன் சட்டை, ஆனா சைஸ் வேற!’ போடா டேய்...

ஏழு கழுதை வயசு முடிஞ்சு எட்டு எருமை வயசாகியும், ஏரோபிளேன் கிட்டக்க பறக்கிற சத்தம் கேட்டா வெளிய முட்டி மோதிக்கிட்டு வந்து  வானத்தைப் பார்க்கிற பழக்கம் இன்னமும் நமக்கு போகல. பத்து ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுற அளவுக்கு பர்ஸ்ல பணமிருந்தாலும், பதினஞ்சு ஐஸ்கிரீம்  தேக்குற அளவுக்கு வயித்துல இடமிருந்தாலும், முதல் ஐஸ்கிரீம சுத்தியிருக்கிற பேப்பர்ல ஒட்டியிருக்கிற ஐஸ்கிரீமை நக்கிப் பார்க்கிற குழந்தைத்தனம்  நமக்குப் போகல.

இன்னமும் யாராவது குழந்தைங்க பலூன் வச்சு விளையாடினா, அவங்களுக்குள்ள பூந்து அதைத் தட்டித் தட்டி பப்பி ஷேம் பண்ற பழக்கம் பலருக்கும்  மாறல. தீபாவளிக்கு சின்னக் குழந்தைங்களுக்கு கம்பி மத்தாப்பு, புஸ்வாணம் வைக்க சொல்லித் தரேன்னு சாக்கு சொல்லி, மொத்த பட்டாசையும்  கொளுத்தி வைக்கிற சேட்டை இன்னமும் மாறல.

இன்னைக்கு ஆபீஸ் லீவு என்கிற செய்தி போதுமானதா இருக்கு, நமக்குள்ள சின்ன வயசுல ‘இன்னைக்கு ஸ்கூலு லீவு’னு கேட்கிறப்ப இருந்த  குழந்தைத்தன சந்தோஷத்தை வெளிய கொண்டு வர!கைக்குழந்தைகளுக்கு செரிலாக், பேரக்ஸ் ஊட்டுறப்ப கொஞ்சம் மிச்சமானாலோ... இல்ல, வெளிய  சிந்தினாலோ அதை எடுத்து டேஸ்ட் பார்க்கிற பழக்கம் இன்னமும் உடம்புல ஒட்டிதான் கிடக்கு.

இப்பவும் பிளாஸ்டிக் பைய ஊதி வெடிக்கிற பய புள்ளைங்க ஊருக்குள்ள பெரியாளா சுத்திக்கிட்டுத்தான் இருக்காங்க. ரோட்டுல யாருமில்லன்னா,  வீதில கிடக்கிற டப்பாவையும் பாட்டிலையும் எட்டி உதைக்கிற எட்டப்பன்கள் தெருவுக்குத் தெரு கொட்டித்தான் கிடக்காங்க. வீட்டுக்குள்ள  நுழையிறப்ப புடிச்சவங்க முதுகு பார்த்து உட்கார்ந்திருந்தா, ஓடிப் போய் கண்ணைப் பொத்தி விளையாடுற கெட்ட பழக்கம் தொட்டில் முதல் தொட்ட  பழக்கமா இருக்கு.

கதவுக்குப் பின்னாடி ஒளிஞ்சிருந்து பயமுறுத்தறது, கரன்ட் போனா கத்தி விளையாடுறதுனு சின்னப்புள்ளத்தனம் மொத்தமும் நமக்குள்ள  மிச்சமாத்தான் கிடக்கு. பன்னிக்குட்டிய கல்ல வச்சு அடிக்கிறது, கரடிகிட்ட இருந்து தப்பிச்சு ஓடுறது, மிட்டாய அமுக்கி விளையாடுறதுன்னு  இன்னமும் நாம செல்போன்ல விளையாடுற கேம்ஸ் எல்லாம் நம் குழந்தைத்தனத்தை நமக்கே தெரியாமல் வெளிக்கொண்டு வரும் விஷயங்கள்.

இன்றளவும் பல்லு துலக்கறப்பவும், டிரஸ் மாத்துறப்பவும் கண்ணாடி முன்னால மூஞ்சிய கோண சேட்டைகள் பண்ணிக்கிட்டுதான் இருக்கோம். ரெண்டு காரு வச்சிருந்தாலும், மாசம் ரெண்டு தடவை ஃப்ளைட்ல போறளவு பதவில இருந்தாலும், இப்பவும் கார்லயோ, பஸ்லயோ போறப்ப,  ஜன்னலோர சீட்டுக்குத்தான் சண்டை போடுறோம்.

இப்படி தினம் தினம் நமக்குள் இருக்கும் குழந்தைத்தனங்களை மீட்டெடுக்க வாய்ப்புகள் வர்றப்ப,  ஏன் இன்னமும் சின்ன மனஸ்தாபத்துக்கு பேசாம இருக்கிறது, பிடிக்காதவன போட்டுக் கொடுக்கிறதுன்னு குழந்தைங்க பண்ண வேண்டியதை  பண்ணிக்கிட்டு இருக்கோம்? குழந்தைத்தனத்தோட இருக்கலாம், இன்னமும் குழந்தையாவே இருக்கலாமா?

ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்