ஒரே ஒரு பெண்ணுக்காக ஓடும் ரயில்!



விநோத ரஸ மஞ்சரி

ஒரே ஒரு மாணவி தினமும் பள்ளிக்குச் சென்று வருவதற்காகவே ஒரு ரயில் மூன்று ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ‘அவ்ளோ பெரிய  பணக்காரியா’ என ஆச்சரியப்படாதீர்கள். சிறு கிராமத்து விவசாயி மகள் அவள். அவள் படிப்பு தடைபடக்கூடாது என்பதற்காக ஓர் அரசாங்கமே  நஷ்டம் பார்க்காமல் ஒரு ரயிலை இயக்குகிறதென்றால் அந்த மனம் ஜப்பானுக்குத்தான் வரும்!

ஜப்பானின்   வடக்குப்  பகுதியில்  இருக்கும்   பனி படர்ந்த சிறிய  தீவுதான் ஹொக்கைடோ. அங்குள்ள ஷிரடாக்கி கிராமத்தில் வசிக்கும் பதினெட்டு  வயதுப் பெண் கானா ஹரடா. கிராம மக்கள் பலரும் நகரத்துக்கு இடம் பெயர்ந்துவிட தற்போது இங்கே எஞ்சியிருப்பது வெறும் 18 குடும்பங்கள்தான்.  இங்குள்ள காமி-ஷிரடாக்கி ரயில் நிலையத்திலிருந்து 36 கி.மீ தூரத்தில் இருக்கும் நகரத்துப் பள்ளிக்கூடத்துக்கு தினமும் ஒற்றை ஆளாய் ரயிலில் சென்று  படித்து வருகிறாள் ஹரடா.

‘ஆளே வராத ஸ்டேஷனில் எதற்காக டீ ஆத்த வேண்டும்’ என யோசித்த ஜப்பான் அரசு, இந்த ரயில் சேவையை நிறுத்திவிடலாம் என்று மூன்று  ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்தது. ஆனால், இந்த ரயிலை விட்டால் ஹரடா பள்ளி செல்வதற்கு வேறு மார்க்கமில்லை.

எனவே, இந்த ஒற்றை  மாணவியின் பள்ளிப்படிப்பு முடியும் வரை ரயில் சேவையைத் தொடர முடிவெடுத்தது ஜப்பான் அரசு. ஹரடாவின் பள்ளி நேரத்துக்கு ஏற்ப இந்த  ரயிலின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த ரயிலில் ஹரடா மட்டும்தான் பயணித்து வருகிறாள்.

‘‘என் படிப்பு வரும் மார்ச் 26ம் தேதியோடு முடிகிறது. அதன் பின் நான் மேற்படிப்புக்காக நகரத்துக்கே சென்று தங்கிவிட இருக்கிறேன். எனவே மார்ச்  27ம் தேதியோடு இந்த ரயில் சேவை நிறுத்தப்படும், காமி-ஷிரடாக்கி ரயில் நிலையமும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த ரயிலின்  கடைசி பயணி நான் என்பது பெருமையாக இருந்தாலும், எங்கள் ஊர் ரயில் நிலையம் தன் கடைசி நாளை எண்ணிக்கொண்டிருப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!’’ என நெகிழ்கிறார் கானா ஹரடா.எங்க ஊர்னா ‘இப்படி ஒரு பொண்ணே அந்த கிராமத்தில்  இல்லை’னு கணக்கு எழுதியிருப்பாங்கம்மா!

- பிஸ்மி பரிணாமன்