ரஜினி கொடுத்த கிரீன் சிக்னல்!



வேலூரை அடுத்த சோளிங்கரில் திரும்பிய இடமெல்லாம் தோரணங்கள், பிரமிக்க வைக்கும் 150 அடி உயர கட் அவுட், கொடிகள், சீரியல் லைட்  கிம்மிக்ஸ், இன்னிசைக் கச்சேரி, வழியெங்கும் பன்ச் டயலாக் பேசும் பேனர்கள் என அரசியல் கட்சி மாநாடு போலவே அமர்க்களப்படுத்திய விழா  அது.

ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம், திரையுலகிற்கு வந்து நாற்பது ஆண்டுகள் சாதனை, நலிந்த ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் என முப்பெரும்  விழா. விழாவுக்கு பெயரே ‘மலரட்டும் மனிதநேயம்’ என வைத்து, யாருக்கோ எதையோ சொல்ல வந்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்!

ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர், ‘கபாலி’ தயாரிப்பாளர் தாணு, ‘ரஜினிமுருகன்’ தயாரிப்பாளர் லிங்குசாமி, நடிகர்கள் கருணாஸ், பாபி சிம்ஹா,  கருணாகரன், காமெடி ஜீவா என ரஜினியோடு துளி தொடர்புள்ளவர்களைக் கூட மிஸ் பண்ணவில்லை இந்த மேடை. ரஜினியின் திரைப்படப்  பாடல்களோடு தொடங்கிய விழாவில் ரஜினி மன்றக்கொடி ஏற்றப்பட்டது.  இயக்குநர் சிகரம்  பாலசந்தருக்கு நினைவஞ்சலி செலுத்தி நெகிழ்ச்சியோடு  துவங்கியது நிகழ்ச்சி...

‘‘ரஜினி எப்போது பேசினாலும் ‘ரசிகர்கள்தான் என்னை வாழவைக்கும் தெய்வங்கள்’ என்று சொல்லுவார். அது உண்மைதான். ரஜினி செத்துப்  பிழைத்திருக்கிறார். ரஜினிக்கு உயிர் கொடுத்தது நீங்கள்தான்!’’ எனத் துவங்கினார் ராஜ்பகதூர். ‘‘இந்த விழாவை நடத்தும் சோளிங்கர் என்.ரவி,  யாரிடமும் ஒரு ரூபாய் கூட  வாங்காமல் இந்த விழாவை நடத்துகிறார். இவர் ரஜினி குணமடைய வேண்டி சோளிங்கர்  கோயிலில் 1308 படிகளை  முட்டிக்கால் போட்டு ஏறியவர்!’’ என அவர் உருக, நிகழ்ச்சி அமைப்பாளர் சங்கரிடம் பேசினோம்.

‘‘ஒரு லட்சம் பேர்கிட்ட திரண்டிருக்காங்க.  தமிழ்நாட்டுல இருந்து 35 மாவட்ட நிர்வாகிகள் தவிர, கர்நாடகா, மகாராஷ்டிரா,  கேரளானு பல  மாநிலங்களில் இருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம  வந்திருந்தாங்க. இப்படி ஒரு விழா நடத்தப் போறோம்னு  தெரிஞ்சதும் போலீஸ் அனுமதி  கொடுக்கல.

முந்தின நாள் வரைக்கும் கூட ஏதேதோ காரணம் சொல்லி இழுத்தடிச்சாங்க. அப்புறம் ஒரு வழியா பர்மிஷன் வாங்கிட்டோம்.
கருணாஸ் உள்பட பலரும் ரஜினி  சார் அரசியலுக்கு வரணும்னு மேடையில சொன்னபோது, போலீஸ்காரங்க ஓடி வந்து, ‘அரசியல் பேசக் கூடாது’னு  எச்சரிச்சாங்க. சோளிங்கர்  முழுக்கவே உளவுத்துறை போலீஸ்காரங்களை அதிகம் பார்க்க முடிஞ்சது. இவ்வளவு  கூட்டத்தையும் ஒழுங்குபடுத்தினது,  பாதுகாப்பு கொடுத்தது, வாலன்டியர்களா செயல்பட்டது  எல்லாமே ரசிகர்கள்தான். ரஜினி  ரசிகர்கள் கட்டுக்கோப்பானவங்கனு மறுபடியும்  நிரூபிச்சிருக்கோம்!’’  என்றார் சங்கர் பெருமிதமாக.

‘‘விழா நடக்கப் போகுதுனு தெரிஞ்சதும், வெளிநாட்டுல இருந்த ரஜினி ரசிகர்கள் கூட ‘எவ்வளவு அனுப்பணும்?’னு கேட்டாங்க. ‘நீங்க எல்லாம்  குடும்பமா வந்து சிறப்பிச்சாலே போதும்’னு சொல்லிட்டேன்!’’ எனத் துவங்கினார் சோளிங்கர் என்.ரவி.

‘‘எனக்கு மட்டுமில்லாம மொத்த ரசிகர்களுக்குமே ‘நீ முதல்ல உன் குடும்பத்தை நேசி’னு வழிகாட்டியவர் ரஜினி. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு செவி  சாய்க்கிறவர் அவர். என் தம்பி முருகனின் திருமணத்துக்கு அழைச்சதும் வந்து ஆசீர்வதிச்சார். தம்பி குழந்தைக்கு ‘வைபவி’னு பெயரும் வச்சார். முதல்ல  இதை தலைவரோட பிறந்தநாள் விழாவாத்தான் கொண்டாட திட்டமிட்டோம். வெறும் கொண்டாட்டமா இல்லாம 1500 நலிந்த ரசிகர்களைக்  கணக்கெடுத்து, அவங்களுக்கு 17 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் தரலாம்னு நினைச்சோம். ரஜினி சார்கிட்ட அனுமதி கேட்டேன்.  ‘விழாவெல்லாம் எதுக்கு ரவி?’னு தயங்கினார். அப்புறம் நான் தொடர்ந்து ஆர்வமா ஃபாலோ பண்ணினதால, ரெண்டு நாளைக்குப் பிறகு, ‘சரி,  அமைதியா பண்ணுங்க’னு சொன்னார்.

நாங்க இன்விடேஷன் அடிச்சு விழா ஏற்பாடுகள் பண்ணிட்டிருக்கும்போது, அடைமழை வந்துடுச்சு. உடனே தலைவர், ‘மக்கள் வேதனையில  இருக்கும்போது விழா வேண்டாம். இதுவரைக்கும் உங்களுக்கு நிறைய செலவு ஆகியிருக்கும். மன்றத்துல சொல்லி வைக்கறேன்... அதை வாங்கிக்குங்க’னு  சொன்னார். நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம், திடீர்னு ஒரு நாள் தலைவர்கிட்ட இருந்து போன், ‘ஜனவரியில பண்ணுங்க’னு கிரீன்  சிக்னல் கொடுத்தார்.

விழாவுக்கு எப்படியும் அவர் வந்துடுவார்னு நெனச்சோம். ஆனா அவரால வர முடியல. ஆனா, விழாவின் ஒவ்வொரு  நிகழ்வையும் அவருக்குத்  தகவலா அனுப்பிக்கிட்டே இருந்தோம். ‘எக்ஸலன்ட்டா பண்ணியிருக்கீங்க...’னு சொன்னார். ‘ரஜினிக்கு வயசாகிடுச்சு... அவர் ரசிகர்களுக்கும்  வயசாகிடுச்சு... இனிமே விழா நடத்தினா கூட்டம் சேராதுனு சிலர் கிண்டல் பண்ணினாங்க. அவங்களை பிரமிக்க வைக்கத்தான் இப்படி ஒரு விழாவை  நடத்த ஆசைப்பட்டேன்’னு தலைவர்கிட்ட சொன்னேன். ‘ரவி...

 யார் எது சொன்னாலும் அதைப் பத்தி கவலைப்பட்டுக்கிட்டு இருக்கக் கூடாது. நமக்கு மேல ஆண்டவன் இருக்கான். தப்பா பேசறவங்களை அவன்  பார்த்துப்பான்’னு எனக்கு ஆறுதல் சொன்னார்!’’ என்ற ரவியிடம் எக்கச்சக்க எமோஷன்.
‘‘சின்ன வயசில இருந்து நான் ரஜினி ரசிகன். அவரை அப்படியே இமிடேட் பண்ணுவேன். அப்படி ஒரு வெறித்தனமான ரசிகன். இப்ப கூட விழா  முடிஞ்சு எல்லாரும் பாதுகாப்பா வீடு திரும்பணும்னு ரஜினி சாரின் மனசு முழுக்க இங்கதான் இருக்கும்!’’ என்றார் இயக்குநர்
லிங்குசாமி.

- மை.பாரதிராஜா