பாக்கி



‘‘என்னங்க, ஏதோ அன்பா எங்க அம்மாவை அழைச்சுட்டு வந்திருப்பீங்கனு நினைச்சேன். ‘வரதட்சணையா தர வேண்டிய பாக்கிப் பணத்தை எடுத்து  வையுங்க... இல்லாட்டி எங்க வீட்ல வந்து வேலைக்காரியா இருந்து அதைக் கழிச்சுடுங்க’னு சொல்லிக் கூட்டிட்டு வந்தீங்களாமே..?

எங்க அம்மாவை வேலைக்காரியா நினைக்கிற உங்களுக்கு நான் எப்படி பொண்டாட்டியா இருக்க முடியும்? இனி எனக்கும் இந்த வீட்ல வேலை இல்லை.  நாங்க ரெண்டு பேருமே கிளம்புறோம்!’’ - கணவன் சித்தேஷிடம் பத்மா எகிறிக் குதித்தாள்.அவளைத் தனியே அறைக்குள் அழைத்துப் போய்ப்  பேசினான் சித்தேஷ்.

‘‘நமக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. வரதட்சணை பாக்கியிருக்குறதால இந்த வீட்டுப் பக்கமே வராம இருக்காங்க உங்க  அம்மா. ஒண்டிக்கட்டையா கஷ்டப்படுற அவங்களை நாம வீட்டுல வச்சி பார்த்துக்கறதுதான் முறை. ஆனா, அவங்க வரதட்சணை பாக்கியைக்  கொடுக்கறதுக்காக ஊர்ல ஒரு ஃபேக்டரி வேலைக்குப் போய் கஷ்டப்படுறதா கேள்விப்பட்டேன்.

மக வீட்டுக்கு வந்துடுங்கனு கூப்பிட்டா அதுக்கு அவங்க தன்மானம் இடம் தராதுனு தெரியும். அதனாலதான் இப்படி சொல்லிக் கூப்பிட்டேன். இனி,  அவங்களை நல்லா கவனிச்சிக்க வேண்டியது உன் பொறுப்பு!’’ என்ற சித்தேஷ், பத்மா மனதில் உயர்ந்து நின்றான்.

வெ.தமிழழகன்