ஸ்கிரிப்ட்



ஆதவனே கூட இதை எதிர்பார்க்கவில்லை. அவனது பேய்ப்பட ஸ்கிரிப்ட், தயாரிப்பாளரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.‘‘சூப்பர் தம்பி, இப்போதைய  ட்ரெண்டுக்கு இந்தப் படம் பெரிய ஹிட்டாகும். நாளைக்கே வந்து அட்வான்ஸ் வாங்கிக்கோ. நீ நல்ல வார்த்தைகளா போட்டுப் பேசறே! அதனால  டயலாக்கும் நீயே எழுதிடு. படம் தொடர்பான எல்லா வேலைகளையும் உடனே ஆரம்பிச்சிடுவோம்’’ என்று தயாரிப்பாளர் சொல்ல, ஆதவனின்  இதயம் பேயைப் போலத் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது.

மறு நாள்...அட்வான்ஸ் வாங்கிக்கொள்ள தயாரிப்பாளரின் ஆபீஸுக்கு உற்சாகமாகப் போனான் ஆதவன்.ஆபீஸ் பூட்டியிருந்தது.அந்த அலுவலகத்தை  ஒரு சுற்று சுற்றி வந்தான். தன்னுடைய படத்தின் பெரும்பாலான காட்சிகளை இந்த ஆபீஸிலும் அதைச் சுத்தியுமே வைத்துக்கொள்ளலாம் என்று  மனதுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டான்.மணி பதினொன்றைக் கடந்தும் ஆபீஸைத் திறக்க யாரும் வரவில்லை. பக்கத்தில் இருந்த டீக்கடையில்  விசாரித்தான்.

‘‘ஆபீஸ் ஒரு மாசத்துக்கும் மேல மூடித்தாம்பா கிடக்கு!’’ - டீக்கடைக்காரர் அலட்சியமாய் பதில் சொன்னார்.‘‘இல்லீங்க, நேத்து கூட நான்  தயாரிப்பாளருக்குக் கதை சொன்னேனே!’’ என்றான் ஆதவன்.‘‘என்னது? கதை சொன்னீங்களா? அவர் இதே ஆபீஸ்ல தற்கொலை பண்ணி செத்துப்  போய்தான் ஒரு மாசத்துக்கும் மேல ஆகுதே!’’ - டீக்கடைக்காரர் கலக்கமாய்ச் சொல்ல, முகமெல்லாம் வியர்க்க ஆரம்பித்தது ஆதவனுக்கு!

பா.விஜயராமன்