பேச்சு



‘‘இதோ பார்... இப்படி அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவு செய்யாதே!’’ - வீடு தேடி வந்த நெருங்கிய நண்பனிடம் எகிறி விழுந்தான் ஏகாம்பரம். ‘‘டேய், மூணாம் மனுஷன்கிட்ட பேசற மாதிரி கத்தாதே! நான் உன் குளோஸ் ஃபிரண்டுடா...’’‘‘இதோட உன் நட்பை குளோஸ் பண்ணிட்டேன்...  போதுமா?’’

பரிதாபமாகத் திரும்பிப் போனான், நாற்பது வருட நண்பன்.‘‘ஏங்க! பீச்சுக்குப் போய் ரொம்ப நாள் ஆச்சு... சாயங்காலம் போலாமா?’’ - ஆசையுடன்  கேட்ட மனைவியை எரித்து விடுவது போல் பார்த்தான் ஏகாம்பரம். ‘‘அங்கே போய் வாங்கினாத்தான் காத்தா? நம்ம வீட்டு மொட்டை மாடியில  போய் நில்லு... அதே காத்து வரும்!’’‘‘அப்பா, செஸ் விளையாட வர்றீங்களா?’’ - கேட்ட மகனுக்கு முதுகிலேயே ஒன்று வைத்தான்.

‘‘டேய்! ஏண்டா இப்படி எல்லார் மேலேயும் எரிஞ்சு விழுறே? அப்படி என்னதான் உனக்குத் தலை போற வேலை?’’ - ஏகாம்பரத்தின் தாய் கேட்டாள்.‘‘நாளைக்கு ஒரு இடத்தில் ஒரு மணி நேரம் சொற்பொழிவு செய்யறதா ஒப்புதல் கொடுத்துட்டேன். அதுக்காக நிறைய தயாரிக்கணும். யாரும் என்னைத்  தொந்தரவு செய்யாதீங்க!’’ என்றபடி தன் அறைக்குள் சென்றான்.‘‘என்ன தலைப்பில் பேசப் போற?’’‘‘அன்பின் பெருமை’’ என்றபடி படாரென்று  கதவைச் சாத்தினான் ஏகாம்பரம்.

எஸ்.குமாரகிருஷ்ணன்