‘‘இந்தியாவிலேயே பெரிய நூலகத்தைத் தொடங்கணும்!’’



‘‘புதிய சிந்தனைகளை உருவாக்கி, அறிவை விசாலப்படுத்தி, மாற்றத்தை விதைக்கக்கூடிய வல்லமை வாசிப்புக்கு மட்டும்தான் இருக்கு. உலகம் முழுவதும்  புத்தக வாசிப்பு விரிவடைஞ்சிருக்கு. ஆனா, நம் பிள்ளைங்க பாடப்புத்தகத்தைக் கடந்து வேறெதையும் படிக்கிறதில்லை. கிணத்துத் தவளையாவே  வளர்றாங்க. இந்த நிலையை மாத்தணும். அதற்காகத் தொடங்கினதுதான் www.readersclub.co.in’’- பொறுப்புணர்வோடு பேசுகிறார் சேதுராமன்.

சென்னை, புழுதிவாக்கத்தில் வசிக்கும் சேதுராமன், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக இருந்தவர். அந்தப் பணியை உதறிவிட்டு  இந்த  இணைய நூலகத்தை ஆரம்பித்திருக்கிறார். ரூ.250 செலுத்தி பதிவு செய்துகொண்டால், நீங்கள் தேர்வு செய்யும் புத்தகங்கள் உங்கள் வீட்டுக்கே வந்து  கதவைத் தட்டும். சுமார் 20,000 புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகத்தை உருவாக்கி இந்த இ-நூலக சேவையை செய்து வருகிறார் சேதுராமன்.
சேதுராமனுக்கு சொந்த ஊர் கும்பகோணம்.

சிறுவயது முதலே வாசிப்பில் ஊறியவர். ‘‘எனக்கு ஒன்பது வயதாகும்போதே அப்பா இறந்துட்டார். அம்மா நிறைய வாசிப்பாங்க. அவங்ககிட்ட இருந்து  எனக்கும் வாசிப்பு ஒட்டிக்கிச்சு. ஆன்மிக புத்தகங்கள்ல ஆரம்பிச்சு, தன்முனைப்பு நூல்களைக் கடந்து இலக்கியத்துக்கு வந்தேன். அந்த வயசுல  வாசிக்கவும், வாசித்ததை விவாதிக்கவும் நண்பர்களே இல்லை. நாலு நண்பர்கள் ஒண்ணு கூடினா சினிமா பத்தி, அரசியல் பத்தி ஜாலியா  பேசுவாங்களே தவிர, ஒரு நல்ல புத்தகம், நல்ல சிறுகதை, நல்ல நாவல்னு பேச யாருமில்லை. அது பெரிய துயரம்.

பி.காம் படிச்சேன். முடிச்சதும் நிறைய நிறுவனங்கள்ல வேலை செஞ்சேன். இறுதியா சென்னையில ஒரு நல்ல நிறுவனத்தில வேலை கிடைச்சுச்சு. மாதம்  60 ஆயிரம் ரூபாய் சம்பளம். பொதுவா வாசிக்கிறவங்க, அது தொடர்பான நட்பு வட்டத்தை உருவாக்கிக்குவாங்க. அல்லது அந்த மாதிரி வட்டத்துல  இணைஞ்சிடுவாங்க. ஆனா எனக்கு அப்படி அமையலை.

இன்னைக்கு தமிழ்நாடு முழுவதும் புத்தகச் சந்தைகள் நடக்குது. மக்கள் கூட்டம் கூட்டமா திருவிழாவுக்கு வர்ற மாதிரி வர்றாங்க. ஆனா, சென்னை  தவிர பிற நகரங்கள்ல புத்தக விற்பனை நிறைவா இல்லே. சென்னையிலே கூட வாங்குறவங்க எல்லாரும் படிக்கிறாங்கன்னு சொல்ல முடியாது.  புத்தகங்கள் வாங்குறது கௌரவமான விஷயமா இருக்கு. அவ்வளவுதான்!

வாசிக்க நினைக்கிற இன்னொரு தரப்பு, எதை வாசிக்கிறதுன்னு தெரியாம தவிக்குது. கலர் கலரா, வித விதமா அட்டைகள் போட்டு ஏராளமான  புத்தகங்கள் குவிஞ்சு கிடக்கு. சில நல்ல புத்தகங்கள் வாங்குற விலையில இல்லை. இந்த விஷயத்தில எனக்கு நிறைய ஆதங்கம் உண்டு. சந்திக்கிற  மாணவர்கள், இளைஞர்கள்கிட்ட ‘ஏன் வாசிக்கிறதில்லை’ன்னு கேட்கிறதுண்டு. ‘நல்ல புத்தகங்கள் கிடைக்கிறதில்லை’ன்னு சொல்வாங்க. ஊருக்கு ஊர்  நூலகங்கள் இருக்கு. ஆனா, பெரும்பாலான மக்களுக்கு நூலகம் எங்கேயிருக்குன்னே தெரியாது.

நல்ல புத்தகங்களை வீடு தேடி கொண்டு போய் கொடுத்தா நிறைய பேர் படிப்பாங்க. நண்பர்கள்கிட்ட, ‘நாமளே ஏன் அந்த மாதிரி ஒரு நடமாடும்  நூலகத்தைத் தொடங்கக் கூடாது’ன்னு கேட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க. ‘தொடங்கலாம்; ஆனா, யாரு வாழ்க்கையை அடகு வைக்கிறது’ன்னு  கேட்டாங்க. ‘நானே என் வாழ்க்கையை அடகு வைக்கிறேன்’னு சொன்னேன்.

ஏதே விளையாட்டாப் பேசுறேன்னு நினைச்சாங்க. வேலையை விட்டுட்டு, ‘நூலகம் தொடங்கப் போறேன்’னு போய் நின்னப்போ அதிர்ந்து  போயிட்டாங்க. வின்சென்ட், ரபீஷ்குமார்னு மனசுக்கு நெருக்கமான ரெண்டு நண்பர்கள் எனக்கு உண்டு. அவங்க என் முடிவை வரவேற்றாங்க.  முதற்கட்டமா 2000 புத்தகங்களும் வாங்கித் தந்து, ‘தைரியமா செய், நாங்க இருக்கோம்’னு நம்பிக்கை கொடுத்தாங்க. 

வேலையை விட்டாச்சு. 2000 புத்தகங்களும் வாங்கியாச்சு. ஆனா, நூலகத்தை எப்படி நடத்துறதுன்னு திட்டம் இல்லை. நிறைய யோசிச்சேன்.  இன்னைக்கு இணையம் எளிமையாயிடுச்சு. நிறைய பேர் மொபைல்லயே நெட் வச்சிருக்காங்க. அதிலும் இளைய தலைமுறை இணையத்துக்குள்ளேதான்  வாழுது. அதையே ஊடகமாக பயன்படுத்திக்க நினைச்சேன்.

 www.readersclub.co.in தொடங்குனேன். நூலகத்துல புத்தகங்களை பிரிச்சுப் படிச்சு தேர்வு செய்யிற மாதிரி இணையத்திலயும் தேர்வு செய்யும் வகையில  வடிவமைச்சேன். துறை ரீதியா புத்தகங்களை லிஸ்ட் பண்ணினேன். ஒருநாளைக்கு 1 ரூபாங்கிற அடிப்படையில வருஷத்துக்கு 366 ரூபாய் கட்டணம்...  பதிவுக்கட்டணம் 250 ரூபாய்... ஒருத்தர் மூலம் ஒருத்தரா மெல்ல மெல்ல நிறைய பேர் வந்தாங்க. புத்தகங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன்.  கட்டணத்தை முறைப்படுத்தினேன். இப்போ 20,000 புத்தகங்கள் இருக்கு.

வருஷத்துக்கு 250 ரூபாய் பதிவுக்கட்டணம். ஒரே நேரத்துல 2 புத்தகத்தை தேர்வு செய்யலாம். புத்தகத்தை நானே வீட்டுல கொண்டு போய்  கொடுத்துடுவேன். போக்குவரத்துச் செலவுக்கு மட்டும் ஒருமுறைக்கு 30 ரூபாய் வாங்குவேன். இப்போ சென்னைக்குள்ள மட்டும்தான் இயங்குறேன். பிற  நகரங்களுக்கும் இதைக் கொண்டு போய் சேக்கணும்.

இப்போ 600 உறுப்பினர்கள் இருக்காங்க. தினமும் 25 பேருக்கு புத்தகங்கள் பட்டுவாடா செய்யிறேன். காலையில 10 மணிக்கு தொடங்குனா ராத்திரி 8  மணி வரைக்கும் பயணம்தான். வருமானம்னு பாத்தா பெரிசா எதுவும் இல்லை. நூலகத்துக்கான வாடகை போக, எதுவும் மிஞ்சாது. ஆனா,  மிகப்பெரிய திருப்தி இருக்கு. எனக்கும், அம்மாவுக்கும் சாப்பாட்டுக்கு கிடைச்சா போதும்ங்கிறதுதான் என் எதிர்பார்ப்பு.

இதைத் தொழிலா நான் செய்யலே. ஒரு கடமை. எல்லோருக்கும் இந்த சமூகத்தில கடமைகள் இருக்கு. நான் இதை என்னோட கடமையா  நினைக்கிறேன். ‘ரீடர்ஸ் கிளப்’ உறுப்பினர்கள்ல முக்கால்வாசிப் பேர் புதுசா வாசிக்க ஆரம்பிச்சவங்க. அவங்களோட வாசிப்பு வளர்ச்சியை அவங்க  தேடல்ல உணர முடியுது.

வேலையை விட்டுட்டு நூலகம் தொடங்கினதால  பெரும் இழப்புகளை எல்லாம் சந்திச்சிருக்கேன். ஆனாலும் நம்பிக்கை குறையாம   நடந்துக்கிட்டிருக்கேன். இன்னைக்கும் நண்பர்கள் என்னை சங்கடத்தோடதான் கடந்து போறாங்க. ஆனா, நிறைய பேர் பாராட்டவும் செய்யிறாங்க.  அவங்க சேமிப்புல இருக்கிற புத்தகங்களைக் கொடுத்து உற்சாகப்படுத்துறாங்க.

என் இறுதிக்குள்ள இந்தியாவிலேயே பெரிய ஒரு நூலகத்தைத் தொடங்கணும்’’ என்கிறார் சேதுராமன்.‘எனக்கு, எனக்கு’ என்று அலைந்து கொண்டிக்கிற  உலகில், மற்றவர்களை உயர்த்திப் பார்க்கத் துடிக்கும் சேதுராமன், நெகிழச் செய்யும் முன்மாதிரி. இதைத் தொழிலா நான் செய்யலே. ஒரு கடமை.  எல்லோருக்கும் இந்த சமூகத்தில கடமைகள் இருக்கு. நான் இதை என்னோட கடமையா நினைக்கிறேன்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்