ஃபேன்டஸி கதைகள்



செல்வு @selvu

அவன் வீட்டிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடி கொஞ்சம் ஸ்லோ. ‘கண்ணாடி ஸ்லோவா? அதென்ன கடிகாரமா, மோட்டாரா? ஸ்லோ ஸ்பீடு, ஹை  ஸ்பீடு என்றெல்லாம் பிரிப்பதற்கு’ என உங்களுக்குக் கேள்வி எழலாம். ஆனால், அதுதான் உண்மை. அந்த வீட்டிலிருந்த ஒரு முகம் பார்க்கும்  கண்ணாடி மட்டும் ரொம்பவே ஸ்லோவாக இருந்தது.

அந்தக் கண்ணாடி தன் எதிரே இருக்கும் பொருட்களை, மனிதர்களை விட்டுவிட்டு வேறு எதையோ பிரதிபலித்தது. பொதுவாக கண்ணாடிகளை நாம்  எதற்காகப் பயன்படுத்துகிறோம்? நம்மை நாமே பார்த்து பெருமைப்பட்டுக்கொள்ள, தலை வார, பொட்டு வைக்க இப்படி... எத்தனை அவசரமான  வேலையாக வெளியில் கிளம்பினாலும் கண்ணாடியில் முகத்தைப் பார்க்காமல் போகிறோமா?

அந்த வீட்டில் இருப்போரும் இதற்காகத்தான் அந்தக் கண்ணாடியை வாங்கி வந்திருந்தார்கள். ஆனால், அது அவர்களைக் காட்டாமல் வேறு எதையோ  காட்டியது. கண்ணாடி முன்பாகப் போய் நின்றதும் உங்களைப் போலவே ஒரு உருவம் கண்ணாடியில் தெரிய வேண்டும் இல்லையா?

அந்தக்  கண்ணாடியின் முன்பாகப் போய் நின்றால் எதிரில் நிற்பவரின் உருவத்திற்குப் பதிலாக வேறொரு உருவமோ, பொருளோதான் தெரியும். சரி, அப்படி  அந்தக் கண்ணாடியில் தெரியும் பொருட்கள் அங்கே அருகிலோ, எதிரிலோ இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அப்புறம் எங்கிருந்து இந்த  உருவங்கள் கண்ணாடியில் வந்து விழுந்து பிரதிபலிக்கின்றன?

அந்தக் கண்ணாடியை வாங்கி வந்த முதல் வாரத்தில், வீட்டிலிருந்த எல்லோருக்குமே பைத்தியம் பிடித்துவிடுமளவிற்குக் குழப்பமாக இருந்தது. தாங்கள்  வாங்கி வந்தது முகம் பார்க்கும் கண்ணாடியா...

இல்லை, ஏதேனும் எல்.சி.டி. டி.வி.யா என்று குழப்பமாக இருந்தது. முன்னால் நிற்கும் உருவத்திற்கும்,  கண்ணாடி பிரதிபலிக்கும் உருவத்திற்கும் எந்தத் தொடர்புமே இல்லாதபோது அதைக் கண்ணாடி என்று எப்படிச் சொல்வது? அட, அதில்  வேறெதேனும் உருவங்கள் தெரிவதுகூட பரவாயில்லை. குறைந்தபட்சம் அந்த வீட்டிலிருக்கும் ஏதாவது பொருளையோ, மனிதரையோ பிரதிபலித்தாலும்  கூட மகிழ்ந்திருப்பார்கள்.

ஆனால் அது வேறு யாரையோ, எதையோ காட்டியது. எங்கிருந்து அந்த உருவங்களெல்லாம் இங்கே டெலிகாஸ்ட் ஆகின்றன? கரன்ட் இல்லாமல்,  டி.டி.ஹெச் கட்டணமோ, கேபிள் கட்டணமோ செலுத்தாமல் இருபத்தி நான்கு மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் டி.வி.யைப் போல எதையெதையோ பிரதிபலித்துக் கொண்டிருந்தது அது.

எதற்கும் பயனில்லாத இதைத் தூக்கி வீசி விடலாம் என்று நினைத்தபோது, அவன் தலையிலிருந்த 1.36 கிலோகிராம் மூளை அப்பொழுதுதான்  டியூட்டிக்கு வந்து பிரசன்ட் போட்டது. ஒருவேளை டி.வி.யில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் இந்தக் கண்ணாடியில் வந்தால், அடுத்த  மாதத்திலிருந்து கேபிளைக் கட் பண்ணிவிடலாமே என்று ஒரு யோசனையும் அது சொன்னது. ‘உனக்கு இம்புட்டு அறிவா!’ என்று தன் மூளையைப்  பாராட்டி விட்டு, எதற்கும் இருக்கட்டும் என அந்தக் கண்ணாடியை வாஷ்பேசின் அருகில் மாட்டி வைத்தான்.

இரண்டு வாரம் கடந்திருந்தது. அந்தக் கண்ணாடியைப் பற்றிய ஆச்சரியங்களை வீட்டில் யாரும் அதிகமாகக் கண்டுகொள்ளவில்லை. பொதுவாக  இதெல்லாம் மாபெரும் ஆச்சரியம்தான் என்றாலும், யாரிடமும் அவர்கள் சொல்லிக்கொள்ளவில்லை. அதுவும் வீட்டிலிருக்கும் ஒரு வஸ்து என்பதோடு  அவர்களது ஆச்சரியம் குறைந்து போயிருந்தது. அது அதிசயமாக ஒன்றையும் காட்டவில்லை.

எப்பொழுதுமே வெறும் சுவரையோ, சில நேரங்களில் ஒன்றிரண்டு முகங்களையோ காட்டியது. அந்த முகங்களையாவது வேறெங்காவது  பார்த்திருக்கிறோமா என்று யோசித்தால், அதுவும் இல்லை. இப்படி ஒரு பயனற்ற வஸ்துவாக அது இடத்தை அடைப்பதாக நினைத்துக்கொண்டே  அதன் எதிரில் நின்று பல் துலக்கிக் கொண்டிருந்தான் அவன்.

அப்பொழுது அந்தக் கண்ணாடியில் ஏதோ ஒரு செய்தித்தாளின் பக்கங்கள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கும்  மேலாக அந்த ஒரே காட்சியைத்தான் அது காட்டிக் கொண்டிருக்கிறது. செல்போன்களில் கூட ஸ்க்ரீன் சேவர்களை வைத்திருக்கிறோம். இம்மாம்  பெரிய கண்ணாடியில் அதுகூட இல்லை போல என நொந்துகொண்டான். அப்பொழுது அந்தக் கண்ணாடியில் தெரிந்த செய்தித்தாள் திடீரென விலகி  ஒரு முகம் தெரிய ஆரம்பித்தது.

அந்த முகத்தைப் பார்த்த அதிர்ச்சியில் பயந்து இரண்டு அடி தள்ளிப் போனான். பின்னர் நன்றாக ஞாபகப்படுத்திப் பார்த்ததும்தான் தெரிந்தது, அதில்  தெரிந்தது அவனது முகம்தான் என்று. அதற்கு அடுத்து அவன் வீட்டினரின் ஒவ்வொரு முகமும் தெரிய ஆரம்பித்தது. அவன் வீடும், அதிலிருந்த  பொருட்களும் என எல்லாமே ஒரு வீடியோவைப் போல அதில் பிரதிபலிக்க ஆரம்பித்தது. இதென்ன புதுக்கதை என்று ஆச்சரியமாகி, வீட்டில்  எல்லோரையும் அழைத்து அதில் தெரிந்த காட்சிகளைக் காட்டினான்.

இப்பொழுது எல்லோருமே அந்தக் கண்ணாடியை அதிசயக் கண்ணாடி என்று நினைத்துக் கொண்டார்கள். கொஞ்சம் நன்றாக யோசித்துப் பார்த்ததில்  அதில் தெரிகின்ற காட்சிகள் எல்லாமே இரண்டு வாரங்களுக்கு முந்தையவை என்பது தெரிய வந்தது. அந்தக் கண்ணாடியை வாங்கி வந்து இரண்டு  வாரங்கள்தான் ஆகியிருந்தன.

இரண்டு நாட்களாக அது செய்தித்தாளைக் காட்டியதற்குக் காரணம், அதை வாங்கிவரும்போது செய்தித்தாளைச் சுற்றித்தான் கொடுத்திருந்தார்கள்.  கடையிலேயே அது ஒரு பேப்பரில் சுற்றப்பட்டுத்தான் வைக்கப்பட்டிருந்தது. நான்கைந்து நாட்கள் மறுபடியும் அந்தக் கண்ணாடியில் பிரதிபலிக்கப்படும்  காட்சிகளை அவதானித்ததில்தான் அந்தக் கண்ணாடி ஸ்லோ என்ற முடிவிற்கு வந்தார்கள். அதாவது அந்தக் கண்ணாடி தன் மீது படும் காட்சிகளை  இரண்டு வார தாமதத்தில் பிரதிபலித்தது. இன்றைக்கு நீங்கள் அதன் முன்னால் போய் நின்றீர்களானால், சரியாக இரண்டு வாரங்கள் கழித்துதான்  அதில் உங்கள் உருவம் பிரதிபலிக்கப்படும்.

இப்படி ஒரு சோம்பேறிக் கழுதையை - இல்லை, சோம்பேறிக் கண்ணாடியை எந்த வகையில் பயன்படுத்தலாம் என்று யோசித்துப் பார்த்தார்கள். தூக்கி  வீசவும் மனமில்லை. மறுபடியும் அவனது ஒன்றரை கிலோ மூளை ‘தான் இன்னும் ரிட்டயர் ஆகவில்லை’ என்று சொல்லிக்கொண்டு ஒரு  யோசனையையும் சொன்னது. அதன்படி அந்தக் கண்ணாடியை தினமும் எடுத்துப் போய் வெயிலில் வைத்தார்கள். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அது  அந்த ஒளியைப் பிரதிபலிக்க ஆரம்பித்தபோது வீட்டிலிருந்த மின்சார பல்புகளையெல்லாம் நிறுத்தி விட்டார்கள். அதிலிருந்து அவர்களது வீட்டில்  மின்சாரக் கட்டணம் குறையத் தொடங்கிவிட்டது.              

கரன்ட் இல்லாமல், டி.டி.ஹெச் கட்டணமோ, கேபிள் கட்டணமோ செலுத்தாமல் இருபத்திநான்கு மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் டி.வி.யைப்  போல எதையெதையோ பிரதிபலித்துக் கொண்டு இருந்தது அது.