புகார்



தெருவில் தையல் மெஷினோடு சென்றவனை உரக்க அழைத்தாள் ராதா. சில புதிய புடவைகளுக்கு பார்டர் தைக்க வேண்டியிருந்தது. கொண்டுவந்து  கொடுத்தாள். வாசலிலேயே மெஷினைப் போட்டு அவனும் தைக்க ஆரம்பித்தான்.

அப்போது ராதாவின் மாமியார் பூரணி, சில நைந்த புடவைகளோடு  வந்தாள். அதிலுள்ள கிழிசல்களை தைத்துத் தரச் சொல்லி அவள் கேட்க, ராதா குறுக்கிட்டாள். ‘‘அதல்லாம் ஒண்ணும் தைக்க வேணாம். ஏம்பா,  உன்னை நான்தானே கூப்பிட்டேன். அவங்க புடவைகளை திருப்பிக் கொடுத்துடு!’’ என்றாள் கோபமாக.

பூரணிக்கு மருமகள் மேல் கோபம். ‘ஆபீஸ் விட்டு என் மகன் கணேஷ் வரட்டும்... சொல்றேன்!’ என முணுமுணுத்துக் கொண்டாள்.மாலை மணி ஆறு. வீடு திரும்பிய கணேஷ் கையில் ஒரு பார்சல் இருந்தது.

நேராக அம்மாவிடம் சென்றான். மகனிடம் புகார் சொல்ல எத்தனித்த அம்மாவின் கையில் பார்சலைக் கொடுத்தான் கணேஷ்.‘‘அம்மா, இதுல நாலு புதுப்புடவைங்க இருக்கு. ரொம்பவும் பழசான புடவைகளை நீங்க  ஒட்டுத் தையல் போட்டு உடுத்துறதா ராதா எனக்கு போன் பண்ணினா. புதுசா புடவை எடுத்து வரச் சொன்னா. இந்தாங்கம்மா!’’
அந்நேரம் புன்னகையுடன் வந்த மருமகள் ராதாவை பாசமாகப் பார்த்தாள் பூரணி.

கு.அருணாசலம்