இது சிவப்பு வெள்ளை உலகம்!



நிறம் மாறாத சூப்பர் குடும்பம்

பெங்களூருவில் இறங்கி ஆட்டோவிலோ டாக்ஸியிலோ ஏறி, ‘‘ ‘சிவப்பு - வெள்ளை’  குடும்பம்!’’ என்றாலே போதும், பழைய  ஏர்போர்ட் சாலையில்  இருக்கும் அந்த  வீட்டிற்குச் சரியாகக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். அந்தளவு பெங்களூரு நகரத்தின் ஸ்டார் குடும்பம் இது.   குடும்பத் தலைவரின்  பெயரில் இருந்தே துவங்குகிறது இந்தக் குடும்பத்தின் ஆச்சரியங்கள். உற்சாகமாகத் துவங்குகிறார், 7ராஜ்.

‘‘சத்தியமா சொல்றேங்க... நியூமராலஜிக்காக மாத்திக்கிட்ட பெயர் இல்லை இது. எங்க அப்பா பேர் ராமலிங்கம்.  திறமையான சிற்பி.  அவர்  வடிவமைச்ச    போப் ஆண்டவரின் சிலை இப்பவும் வாடிகன் சிட்டியில இருக்கு. நான் பிறந்தப்போ,   அப்பா  ஜாதி, மதம், இனம் என்ற  வட்டத்திலிருந்து  வெளியே வந்துட்டதா உணர்ந்தார்.

அதான் ஆறு பிள்ளைகளுக்கு இந்து மதப் பெயர்களை வச்சவர், ஏழாவதா பிறந்த எனக்கு ‘7’னு  மட்டும் பெயர் வச்சார். ஸ்கூல்ல வெறும் நம்பரை பேரா ஏத்துக்க முடியாதுன்னாங்க. ‘செவன்’னு எழுதிக் கொடுத்தா ‘சிவன்தானே’னு கேட்டாங்க.  அதனால ‘செவன்ராஜ்’னு சேர்த்து வச்சிட்டாங்க!’’ என்கிற செவன்ராஜ் நுண்கலைக் கல்லூரியில் படித்தவர். நல்ல ஓவியர். ஆனாலும் பார்ப்பது ரியல்  எஸ்டேட் தொழில்தான்.

‘‘எங்க  பூர்வீகம்  கேரளா. அங்கே  வடகராங்ற ஊர்ல இருக்குற சித்த ஆசிரமத்தின் உறுப்பினர்கள் நாங்க.  ஆசிரம விதிப்படி வெண்மை உடைகளை  மட்டுமே உடுத்தணும். எனக்கோ சிவப்பு கலர்னா ரொம்பப்  பிடிக்கும். அதனால வெள்ளையும் சிவப்பும் சேர்த்து உடுத்த ஆரம்பிச்சேன்!’’ என்கிற  செவன்ராஜின் உலகமே வெள்ளை மற்றும் சிவப்பால் ஆனது. இவர்கள் வீட்டின் வெளியேயும் உள்ளேயும் சிவப்பு - வெள்ளை பெயின்ட்தான். கார்,  ஸ்கூட்டர் இரண்டுமே சிவப்பு வெள்ளை நிறத்தில்தான். கடிகாரம், சோபா, நாற்காலி தொடங்கி ஸ்பூனின் கைப்பிடி வரை வீட்டில் எல்லா  பொருளிலும் சிவப்பு வெள்ளைதான்.

‘‘அதெல்லாம் என்னங்க, என் கைக்குட்டை தொடங்கி உள்ளாடை வரை சிவப்பு வெள்ளை கலர்தான். சிவப்பு மாதிரியே என் பேர்ல இருக்குற நம்பர்  ஏழு மேலயும் எனக்கு காதல். அதான் கார் நம்பரை 7777னு கேட்டு வாங்கினேன். என் சட்டையில  ஏழு பட்டன் இருக்கும். ஏழு இந்திய மொழிகளில்   என்னால பேச முடியும்!’’ - பெருமையாகச் சொல்கிறார் செவன்ராஜ். இப்படி ஒருவர் வாழ்வதுகூட பெரிய விஷயமில்லை. இவர் மனைவி புஷ்பாவும்  மகன் பரத் மற்றும் மகள் மனீஷாவும் கூட இவரோடு சேர்ந்து ரெட் வொயிட் உடையில் போஸ் கொடுப்பது பெரும் ஆச்சரியம். ‘‘இந்த விநோதத்தை  மனைவி உற்சாகப்படுத்துவது உலக அதிசயமாச்சே?’’ என்றால் சிரிக்கிறார் புஷ்பா.

‘‘எங்க அப்பாவும் இவர் அப்பாவும் நண்பர்கள். நாங்களும் வெள்ளை மட்டும் உடுத்துறதுதான் வழக்கம். இவர் வெள்ளையில் சிவப்பு பார்டர் வைத்த  கல்யாணப் புடவை எடுத்துக் கொடுத்தார். அப்போதிருந்தே நானும் இதுக்கு டியூன் ஆகிட்டேன். குடும்பத்தோடு வெளியே போகும்போது ரெட்  அண்ட் வொயிட்தான்!’’ என்கிற அம்மாவை ஆமோதிக்கிறார்கள் பரத்தும் மனீஷாவும்.

ஆனாலும் இப்படி இருக்க ஏதாவது காரணம் இருக்கணுமே...‘‘காந்தின்னா மூக்குக்கண்ணாடி, பாரதின்னா முறுக்கு மீசை, சர்ச்சில்னா சிகார் பைப்...  இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு அடையாளம் இருக்கு. அப்படி எனக்கும் ஒரு அடையாளம் வேணும்னு விரும்பினேன். ஆரம்பத்தில் நிறைய கிண்டல்  பண்ணினாங்க. தலைமுடியை சிவப்பா ஆக்கிக்குவாயானு கேப்பாங்க...

கருவிழியை என்ன பண்ணுவேனு கேப்பாங்க... எல்லாமே ஏழுன்னா ஏழு கல்யாணம் ஏன் பண்ணிக்கல? ஏழு குழந்தைகள் ஏன் பெத்துக்கலனு  எக்கச்சக்கமா கலாய்ச்சிருக்காங்க. ஆனாலும் தொடர்ந்து இரு வித கலரை மட்டுமே பல வருஷமா பயன்படுத்துறவர்ங்கற விதத்துல கின்னஸ்  புத்தகத்துல இடம் பிடிக்கணும்னு எனக்கு ஆசை. அதான் 22 வருஷமா இப்படியே இருக்கேன்.

என் பசங்களை கட்டாயப்படுத்துறதில்லை. ஆனா, குடும்பத்தோட இப்படி சிவப்பு வெள்ளை கோலத்துல வெளிய போகும்போது மக்கள் கவனம்  கிடைக்குது. சிவப்பு வெள்ளை குடும்பம்னு ஒரு புகழ் கிடைக்குது. இது அவங்களுக்கும் பிடிச்சிருக்குது. ஜெர்மன் டி.வி சேனல், இங்கிலாந்தின்  டெய்லி  மெயில்   நாளிதழ், வளைகுடா நாடுகளின்  பத்திரிகைகள்னு பலரும் எங்களைப் பேட்டி எடுத்திருக்காங்க.

ஜெர்மனியில OFCனு ஒரு ஃபுட்பால் டீம்... அவங்க யூனிஃபார்ம் இதே சிவப்பு வெள்ளைதானாம். என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு அவங்க எல்லாரும்  அவங்க டீம் டி-ஷர்ட்டில் கையெழுத்து போட்டு எனக்கு அனுப்பி வச்சாங்க. இது மாதிரி உற்சாகம் கிடைக்கும்போதெல்லாம் ஆயுள் முழுக்க நான்  இப்படியே இருப்பேன்னு ஒரு நம்பிக்கை பிறக்குது!’’ என்கிறார் செவன்ராஜ் செம ஃபீலிங்காக!

- பிஸ்மி பரிணாமன்