இந்தியாவுக்காக கிராண்ட் ஸ்லாம் வெல்லணும்!



சென்னை ஓபனில் கலக்கிய ராம்குமார்

ராம்குமார் ராமநாதன்... இந்திய டென்னிஸ் ரசிகர்களை ‘ராக்கெட்’ வேகத்தில் தன் பக்கம் கவர்ந்திருக்கும் சென்னை பையன்! சமீபத்தில் முடிந்த  சென்னை ஓபன் டென்னிஸ் டோர்னமென்ட்டில் காலிறுதிக்கு முன்னேறி எல்லோரையும் புருவம் விரிய வைத்தவர். இதனால் லியாண்டர் பயஸ்,  மகேஷ் பூபதி, சோம்தேவ் தேவ்வர்மன் என நம்மவர்கள் அறிந்திருக்கும் ஒருசில இந்திய டென்னிஸ் வீரர்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார்  ராம்குமார்!

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜி! என்னோட பயிற்சிக்கு கிடைச்ச பரிசுனுதான் இதைச் சொல்லணும். எல்ேலாருமே சீனியர் ப்ளேயர்ஸ். உலகளவுல  பெஸ்ட் ரேங்க்ல இருக்கிறவங்க. அவங்களை பீட் பண்ணினதை நினைக்கும்போது கனவா, நனவான்னே சந்தேகமா இருக்கு. நிறைய பேர்  பாராட்டினாங்க. ஒவ்வொரு மேட்ச்சிலும் பெஸ்ட்டா விளையாடணும்னுதான் நினைப்பேன். இந்த முறை காலிறுதி வரை வந்தது நிறைய நம்பிக்கை  தந்திருக்கு!’’ எனப் பேச்சில் உற்சாகம் தெறிக்கிறார் ராம்குமார்.

‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாமே சென்னை தி.நகர்லதான். அப்பா ராமநாதன்... டெக்ஸ்டைல் பிசினஸ் பண்றார். அம்மா அழகம்மை... அப்பாவுக்கு  உறுதுணையா இருக்காங்க. ஒரே அக்கா. திருமணமாகி சிங்கப்பூர்ல செட்டிலாகிட்டாங்க. நான் அஞ்சு வயசுலேயே டென்னிஸ் விளையாட வந்துட் ேடன். காரணம், அப்பாதான்.

அவருக்கு ஸ்போர்ட்ஸ் ஆர்வம் எக்கச்சக்கம். டேபிள் டென்னிஸ், ஷட்டில்னு எப்பவும் விளையாடிட்டே இருப்பார். என்னையும் கூட அழைச்சிட்டுப்  போவார். அதைப் பார்த்துதான் எனக்கும் விளையாடணும் ஆசை வந்துச்சு. ஏனோ, என்னை டென்னிஸில் சேர்த்துவிட்டார்!’’ - ஞாபகங்களை  ரசித்தபடியே பேசுகிறார் ராம்!

‘‘பத்து வயசுல இருந்தே நிறைய போட்டிகள்ல ஆட ஆரம்பிச்சிட்டேன். அண்டர் 12, அண்டர் 16னு போய் விளையாடிட்டு வருவேன். அப்பாவும்  கூடவே வந்து உற்சாகப்படுத்துவார். டேவிஸ் கோப்பை அண்டர் 14 குரூப் இவன்ட்ல மூணாவதா வந்தோம். அண்டர் 16ல எட்டாவது இடம்  கிடைச்சது. இதெல்லாம், இன்னும் சிறப்பா டென்னிஸ்ல வரணும்கிற தூண்டுதலை ஏற்படுத்திச்சு. அப்புறம், தொடர்ந்து வொர்க் அவுட் பண்ண  ஆரம்பிச்சேன். விளையாட்டோடு, ஃபிட்னஸும் தேவையா இருந்ததால, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் ேஜான் பால்செல்ஸ் நடத்துற  அகடமியில சேர்ந்தேன். ஸ்பெயின்லயே தங்கி தீவிரமா ப்ராக்டீஸ் பண்ணினேன்.

இப்போ, அஞ்சு வருஷமா அவரோட தலைமையில என்னோட பயிற்சி போயிட்டு இருக்கு. அப்படியே அமெரிக்க ஓபன், ஃபிரெஞ்ச் ஓபன்,  ஆஸ்திரேலிய ஓபன் என கிராண்ட்ஸ்லாம் போட்டிகள்ல கடந்த ஆண்டு களமிறங்கினேன்!’’ என்கிற ராம்குமார், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின்  ஃப்யூச்சர்ஸ் சிங்கிள்ஸ் டைட்டிலை இரண்டு முறை வென்றிருக்கிறார். அதேபோல், சென்னை ஓபனுக்கு முன் இவர் விளையாடிய கடைசி பன்னிரண்டு  போட்டிகளில் தொடர் வெற்றிகள்தான். தற்ேபாது இந்திய தரவரிசையில் நான்காவது இடத்திலும், உலகளவில் 206வது இடத்திலும் இருக்கிறார் ராம்!

‘‘உலக அளவுல போன டிசம்பர் வரை நான் 248வது ரேங்க்லதான் இருந்தேன். சென்னை ஓபன்ல காலிறுதிக்கு முன்னேறியதும் 42 இடம்  முன்னேறிட்டேன். இன்னும் மேல வரணும். இந்த வருஷத்துக்குள்ள 150க்குள்ள ஒரு இடத்தைப் பிடிக்கணும்ங்கிறது என் கனவு! அதுக்காகத்தான்  கடுமையா உழைச்சிட்டு இருக்கேன்.

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம்னு ப்ராக்டீஸ் போகுது. பொதுவா, டென்னிஸ்ல அதிவேக சர்வீஸுக்கு முக்கியமான இடம் இருக்கு. முதல் சர்வீஸ்  கொஞ்சம் தப்பா போயிட்டாலும் ரெண்டாவது சர்வீஸ் வாய்ப்பு இருக்கு. அதுவும் தப்பா போனா, சர்வீஸ் வாய்ப்பு எதிர்முனைக்கு போயிடும்.  அதனால முதல் சர்வீஸே சரியாவும் துல்லியமாவும் அமையணும். இந்த சதவீதத்தைக் கூட்டினாதான் நிறைய மேட்ச்ல ஜெயிக்க முடியும்னு  சொல்வாங்க. இப்போ, அதுக்கும் தனியா பயிற்சி எடுத்து பழகிட்டு இருக்கேன்!’’ என்கிறவர், தற்போது லயோலா கல்லூரியில் பி.ஏ. எகனாமிக்ஸ்  படித்து வருகிறார்.

‘‘என்னோட ரோல் மாடல் ரோஜர் பெடரர். அவர் மாதிரியே வரணும்ங்கிறதுதான் ஆசை! ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டமாவது வெல்லணும்.  சிங்கிள்ஸ்ல இந்தியாவின் பெருமையை நிலை நாட்டணும். அதுதான் லட்சியம்!’’ - நம்பிக்கை பொங்க முடிக்கிறார் ராம்குமார். ராம்குமார் ஃப்யூச்சர்ஸ்  சிங்கிள்ஸ் டைட்டிலை இரண்டு முறை  வென்றிருக்கிறார். சென்னை ஓபனுக்கு முன் விளையாடிய பன்னிரண்டு போட்டிகளில் தொடர் வெற்றி!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்