இது பங்களா தாண்டிய பேய்... இது காட்டில் வாழுற பேய்...



விசாகா சிங் விஸ்வரூபம்

‘‘ஒரு பாழடைஞ்ச பங்களா.. அதுக்குள்ள ஒரு பேய்னு சாதாரணமா பேய்ப் படம் பண்ணிட முடியும். ஆனா, அடர்ந்த காட்டுக்குள்ள, ராத்திரியும்  பகலுமா காத்திருந்து, பனி படர்ந்த க்ளைமேட்ல ரிஸ்க்கான விஷயங்களோடு ஒரு பேய்ப் படம் பண்ணியிருக்கோம்.

படம் முழுவதும் ஒரு பயம்  உங்களைத் துரத்துவதை உணர்வீங்க. அதுக்கு நாங்க கேரன்டி!’’ - நம்பிக்கை மின்னப் பேசுகிறார் மணிஷர்மா. ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் அறிமுக  இயக்குநர்.

‘‘அதென்ன ‘பயம் ஒரு பயணம்’?’’
‘‘ஒரு செகண்ட் பயம் வர்றது சகஜம். ஆனா, வாழ்நாள் முழுக்க பயத்தோடவே இருந்தா என்னாகும்?   தொடர்ந்து மூணு நாளா, கொஞ்சமும் ரிலாக்ஸ்  ஆகாம திக்கு திக்குனு பயத்தோட உச்சத்திலேயே ஹீரோ. அவர் ஏன் அப்படி பயப்படுறார்? அவரைப் பார்த்து யார் பயப்படுறாங்க? இதுக்கெல்லாம்  விடைதான் படம்.

‘பயணம்’லயும் கமல் சாரின் ‘உன்னைப்போல் ஒருவன்’லயும் நடிச்ச பரத், இதுல ஹீரோவா  அறிமுகமாகிறார். உண்மையில் ஒரு  டாக்டரா இருந்துக்கிட்டு நடிப்பில் அவர் காட்டுற ஆர்வம் வியக்க வைக்குது. பரத்தின்  மனைவியா மீனாட்சி தீக்‌ஷித். அவங்க லவ் போர்ஷன்ல  அழகான காதல் கவிதை மிளிரும்.

விசாகா சிங்தான் இதுல பேய். ரொம்ப போல்டான கேரக்டர். அவங்களோட அம்மா கேரக்டர்ல ஊர்வசி, மெயின் வில்லனா ஜான் விஜய்னு திகில்  படத்துக்கு பலம் சேர்க்க நிறைய மெனக்கெட்டிருக்கோம். இவங்க தவிர சிங்கம் புலி, யோகி பாபு, முனீஸ்காந்த், மண்ட மனோகர்னு காமெடிக்கு  நிறைய பேர் இருக்காங்க!’’

‘‘கவர்ச்சியில் கலக்குற விசாகா சிங்குக்கு பேய் கேரக்டரா?’’‘‘விசாகாகிட்ட கதையைச் சொன்னதும் ‘அந்த பேய் கேரக்டரை யார் பண்றாங்க?’னுதான்  கேட்டாங்க. அவ்வளவு ஆர்வம். பேயா நடிக்க தனி தைரியம் வேணும். அது அவங்ககிட்ட நிறையவே இருக்கு. மூணாறு காட்டுக்குள்ள  அட்டைப்பூச்சிகள், பாம்புகள் எல்லாம் ரொம்ப சகஜம். அதைப் பத்தி கவலையே படாம, காட்டுல உருண்டு, புரண்டு கேரக்டராவே வாழ்ந்திருக்காங்க.  ஒரே ஷெட்யூலா மூணாறுல முடிச்சிட்டு  வந்திருக்கோம். பிப்ரவரி இறுதியில வர ரெடியாகிட்டு இருக்கோம்!’’

‘‘டெக்னிக்கல் டீம்..?’’‘‘காட்டுக்குள்ள, அதுவும் பனி சீஸன்ல ஷூட் பண்றது ரொம்ப கஷ்டமான விஷயம். மத்தியானம் தாண்டியதுமே வெளிச்சம்  குறைய ஆரம்பிச்சிடும். தெலுங்கில் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்னு பெரிய ஹீரோக்களுக்கு ஹிட் கொடுத்த படங்களின் கேமராமேன் ஐ.ஆண்ட்ரூ  நமக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார்.

அவர் பி.சி.ராம் சாரோட அசிஸ்டென்ட். நைட் எஃபெக்ட்ஸ் எல்லாம் பிரமாதப்படுத்தியிருக்கார். ‘அருந்ததி’ மாதிரி  ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட்  இது. அந்தப் படத்துக்கு கிராஃபிக்ஸ்ல முக்கியத்துவம் கொடுத்தது மாதிரி இதுலயும் கிராஃபிக்ஸ் வொர்க் பேசப்படும். அறிமுக இசையமைப்பாளர்  ஒய்.ஆர்.பிரசாத். இவர் மியூசிக் டைரக்டர் மணிசர்மாவின் அண்ணன் மகன். நான் உதவி இயக்குநரா இருந்தபோதிருந்தே பிரசாத்துடன் கம்போஸிங்ல  இருந்திருக்கேன். அவர் அனுபவம் இதில் தெரியும்!’’
‘‘முதல் படமே பேய்ப் படமா?’’

‘‘ ‘பீட்சா’வுக்கு முன்னமே பண்ணின கதை இது. ஹாரர், த்ரில்லர்னு எப்பவும் திகிலா யோசிக்கறது எனக்குப் பிடிக்கும். நல்ல கதை, நல்ல மேக்கிங்  இருந்தா அதை தமிழ் ஆடியன்ஸ் ரசிக்கிறாங்க. அந்த நம்பிக்கையிலதான் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லரை பண்ணியிருக்கேன். என்னோட சொந்த ஊர்  குடியாத்தம். பாலா சாரோட ‘சேது’ பார்த்துதான் சினிமாவில் இயக்குநராகணும்ங்கற கனவுகளோட சென்னை வந்தேன். பெரிய இயக்குநர்கள் நிறைய  பேர்கிட்ட வேலை செய்த அனுபவத்தோடு, இந்தப் படத்தை இயக்கியிருக்கேன். இப்பவே இதுக்கு ரெண்டாம் பாகம் எடுக்கற ஐடியாவும் இருக்கு.  இதுல விசாகா மாதிரி அதுல பேயா மீனாட்சி!’’

‘‘பங்களா பேய் இல்லாம இது காட்டுப் பேய்... ஓகே, வேற என்ன புது விஷயம் இருக்கு?’’‘‘காமெடி, ஹாரரை எல்லாம் தாண்டி இதில் ஒரு புது நாட்  பிடிச்சிருக்கோம். லவ், காமெடி எல்லாம் இருந்தாலும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு விஷயத்தைத் தொட்டிருக்கோம். படம் பார்த்துட்டு வெளியே  வரும்போது எதையோ இழந்தது மாதிரி நம்ம மனசும் வலிக்கும். அப்படி ஒரு பெயின்ஃபுல் பேய்க்கதை இது!’’

- மை.பாரதிராஜா