இது மில்லினியம் தலைமுறையின் வாழ்க்கை!



பொம்மரிலு பாஸ்கர்

‘‘எனக்கு சினிமாதான் தொழிலாகப் போகிறதென்று 15 வயதில் சொல்லியிருந்தால் கூட சத்தம் போட்டு சிரித்திருப்பேன். அப்பா டீச்சர். வேலூர்தான்  பிறந்த ஊர். அக்காவிற்காக நூலகத்தில் புத்தகம் எடுத்துட்டு வர்றதுதான் என் பிரதான வேலை.

சிறுகதை, நாவல்னு ஒவ்வொரு உலகமும் விரிஞ்சது  அங்கேதான். சின்ன வயசிலேயே தமிழ் எழுத்தாளர்களின் அத்தனை படைப்புகளும் என் பார்வைக்கு வந்துவிட்டன. கதைகள் தருகிற பரவசமும்,  திருப்பமும்தான் என்னை சினிமாவிற்குத் திருப்பியிருக்கணும்!’’ - ஆழமாகப் பேசுகிறார் ‘பொம்மரிலு’ பாஸ்கர். ‘பெங்களூர் நாட்கள்’ படத்தின்  இயக்குநர். தெலுங்கு சினிமாவில் போற்றப்படும் தமிழ் இயக்குநர்.

‘‘சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து தெலுங்கில் பிரபலமானது எப்படி?’’‘‘ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேரணும்னு சொன்னபோது ஒரு  வார்த்தையும் மறுப்பு சொல்லாமல் சென்னைக்கு அனுப்பி வைத்தார் என் அப்பா.

அவரைத் தவிர, என் மொத்த வீட்டிற்கும் இதனால் அதிர்ச்சி  உண்டானது. இன்ஸ்டிடியூட்டில் என் கூடப் படித்தவர் ‘ஜெயம்’ ராஜா. அவன்தான் என்னை ஐதராபாத்திற்கு அழைத்துப் போனான். எடிட்டர்  மோகன் அவர்கள் வீட்டில் ராஜா, ரவிக்கு ஈடாக இன்னொரு மகனாகவே என்னைக் கருதினார்கள்.

அப்போது எனக்கு தெலுங்கில் ஒரு வார்த்தைகூட தெரியாது. எதை நம்பி தெலுங்கில் படம் செய்ய வந்தேன் என்பதை இன்று நினைத்துப் பார்த்தாலும்  ஆச்சரியம் மேலிடுகிறது. இன்று நான் தெலுங்கில் எழுதிய வசனங்களை ரிங்டோனா வைத்துக்கொண்டு இங்கே கொண்டாடுகிறார்கள். மனதில்  தெளிவும், ஊக்கமும், இலக்கில் உறுதியும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்றுதான் தோன்றுகிறது!’’

‘‘புகழ்பெற்ற ‘பெங்களூர் டேஸ்’ படத்தை மறு உருவாக்கம் செய்தது ஏன்?’’‘‘ஒருநாள் யதேச்சையாக என் குடும்பத்தை காரில் அள்ளிப் போட்டுக்  கொண்டு சுற்றியபடி இருந்தேன். அந்த நேரத்தில் பிவிபியிடமிருந்து போன். ‘ஒரு படம் பார்க்கிறீங்களா... நேரம் இருக்கிறதா?’ எனக் கேட்டார். நான்  இருக்கிற இடத்தைச் சொன்னேன்.

அதற்கு அருகில் இருக்கிற சினிமா தியேட்டரில் டிக்கெட் எடுத்து அனுப்பி இந்தப் படத்தை பார்க்கச்  சொன்னார்கள். பார்த்துவிட்டு ‘நன்றாக இருக்கிறது’ என என் அபிப்பிராயமாக சிலதைச் சொன்னேன். ‘நீங்கள் இதை எங்களுக்கு தமிழில் எடுத்தால்  நன்றாக இருக்கும். அதே நேரம் தெலுங்கிலும் செய்யலாம்’ என்றார்கள்.

அதுவரைக்கும் ரீமேக் பற்றி நான் சிந்தித்ததே கிடையாது என் ‘பொம்மரிலு’ படம்தான் முக்கிய இந்திய மொழிகளில் எல்லாம் ரீமேக் ஆகி  பரபரப்பான வெற்றியைப் பெற்றிருந்தது. தமிழில் வெளிவந்த ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படம் கூட என் ‘பொம்மரிலு’வின் தமிழ்ப் பதிப்புதான்.  இரண்டு மொழி என்றதும் சம்மதித்தேன்.

பிறகு இவ்வளவு ஆர்ட்டிஸ்ட் வைத்துக்கொண்டு இரண்டு மொழிகளிலும் இயக்குவது சாத்தியம் இல்லை  என்பதையும் உணர்ந்தேன். அப்புறம்தான் தமிழில் ‘பெங்களூர் நாட்க’ளில் என் முழுக் கவனமும் திரும்பியது!’’
‘‘தமிழில் எப்படியிருக்கும் ‘பெங்களூர் நாட்கள்’?’’

‘‘மூன்று கஸின்கள், அவர்கள் வேலை நிமித்தமாக இடம் பெயர்கிறார்கள். ஒரு மெட்ரோ நகரம் அவர்களை என்னவிதமாக மாற்றுகிறது, அந்த  மாற்றங்களை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள், தங்களை எப்படி மாற்றிக்கொள்கிறார்கள், அந்த மாற்றங்களின் வலி, கொண்டாட்டம், காதல்  எல்லாவற்றையும் பேசுவதால் எனக்கும் இதில் வேலையிருக்கிறது என உணர்ந்தேன். வாழ்க்கை என்பதை பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா?  தேவையில்லை...

இந்த மாதிரி படங்களைப் பார்த்து தெரிந்துகொண்டாலே போதும். சில சமயங்களில் சினிமா வெறும் என்டர்டெயின்மென்ட் இல்லை. அது தனி  மனிதனின் வாழ்க்கையைக் கூட மாற்றி அமைத்துவிடுகிறது. அப்படி மாறியவர்கள் என்னைப் பல சமயங்களில் கொண்டாடி இருக்கிறார்கள்.  அரிசியிலிருந்து அன்பு வரைக்கும் ஒரிஜினலைத் தேடித்தானே ஒவ்வொருத்தரும் போறோம். அப்படி ஒரு ஒரிஜினலான வாழ்க்கை. அதன் ஈரம், காதல்,  மாற்றம்... இந்த மில்லினியம் தலைமுறையின் வாழ்க்கை இதுல இருக்கு!’’

‘‘ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா... இப்படி மூவரை எப்படி சமாளித்தீர்கள்?’’‘‘இன்றைக்கு நடிகர்களுக்கு எல்லாமே தெரியும். அவர்களுக்குள் ஈகோ  இல்லை. சேர்ந்து முன்னேறுவோம் என்ற கொள்கையில்தான் நிற்கிறார்கள். ராணா நூறு டேக் போனாலும் ‘என்னை விட்டுடாதீங்க’ என்றார்.  பொதுவாக எல்லோருமே ஒரிஜினல்தான் நல்லாயிருக்கும் எனச் சொல்வார்கள்.

இந்தப் படமும் அந்தப் பேச்சிலிருந்து தப்பாது. எனக்கு நன்றாகத் தெரியும் இந்தக் கதையில் சொல்லப்பட்ட விஷயத்தை இன்னும் ஒரு படி மேலே  போய் ஜனங்களுக்குப் போய்ச் சேரணும் என முயற்சி செய்திருக்கேன். ஒரிஜினல் கதைக்கு எவ்வளவு பேசுவோமோ, அவ்வளவு பேசியிருக்கேன்.  ஆர்யா, பாபி, திவ்யா எல்லாரையும் நல்லா பழக விட்டு, அதை ஆன் ஸ்கிரீனிலும் கொண்டு வந்தோம்.

ராணாவிற்கு இது கஷ்டமான ரோல். எனக்கு ஆச்சரியம் தந்ததும் அவர்தான். ஆரம்பத்தில் அவரைப் பற்றிய தயக்கம் இருந்தது உண்மை. ஆனால்,  வியக்கும்படியாக வந்தார். பார்வதியின் திறமையைப் பார்த்து... ‘இப்படி ஒருத்தரோட ஒர்க் பண்ணினதில்லை’னு எண்ணம் வந்தது. ஒரு கேரக்டருக்கு  கிளாமர் இல்லாமல், அடுத்த வீட்டுப் பொண்ணு மாதிரி ஒரு ‘ஊதா கலரு ரிப்பன்’தான் தேவைப்பட்டது. அதற்கு திவ்யாவே கிடைத்தார். ராய்  லட்சுமி, சமந்தா எல்லாம் பளிச்சென்று ரோல் செய்திருக்காங்க.

பிரகாஷ்ராஜ் இல்லாமல் என் படங்கள் இல்லை. என்னுடைய படங்கள் நல்லா வருவதற்கு என்னைத் தவிர அவரும் மெனக்கெடுவார். மழை பெய்கிற  நாளை விட மழைக்குப் பிந்திய நாள்தானே அருமையானது. அது மாதிரி காதலின் முன்-பின்னான சுவாரஸ்யங்களும் இருக்கு. எனக்கு என்ன  சந்தோஷம்னா, வாய் நிறைய தமிழ் பேசி, வேலை வாங்கி டைரக்ட் பண்றது இத்தனை வருஷத்தில் எனக்குக் கிடைச்ச பெரும் சந்தோஷம்!’’
‘‘பாடல்கள் அழகா இருக்கு...’’

‘‘ஒரிஜினல் மியூசிக் டைரக்டர் கோபிசுந்தர்தான் இதற்கும். ஒரு டீக்கடையில் வேட்டியை மடிச்சுக் கட்டி உட்கார்ந்துக்கிட்டு, டீயை உறிஞ்சியபடி  ட்யூன்களை உருவாக்கி விடுகிறார். கே.வி.குகன்தான் கேமராமேன். என் மனதைப் படித்துப் பார்த்தது போல் அப்படியே காட்சிகளைத் தருவார்.  வசனங்களை த.செ.ஞானவேலும் பொன்.பார்த்திபனும் இயல்பா கொடுத்தாங்க. சமந்தா, பார்வதி, திவ்யா, ஆர்யா, பாபி, ராணான்னு பெரிய செட்  அமைந்துவிடுவதே பாதி வெற்றியாகிவிடும்.

ஒரிஜினலின் உணர்வு தவறிவிடாமல் பார்த்துக்கொள்வது மட்டுமே என் வேலையாக இருந்தது. படத்தில் இழுத்துப் பிடித்த ரப்பர் பேண்ட் போல  தொடர்ந்த அதிர்வு இருக்கும். எப்போது பலூன் வெடிக்கும் என்று ஊதிக்கொண்டிருப்பதைப் போன்ற ஓட்டமும் இருக்கும். வாங்க... நட்பின், காதலின்  நல்ல பக்கங்களைப் பேசலாம் என தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்!’’

- நா.கதிர்வேலன்