தல தோட்டம்!



சமையல், போட்டோகிராபி போல ‘தல’யின் புது ஹாபி என்னவென்று தலயைப் பிய்த்துக்கொண்டு படித்தோம். புன்னகைப் பூந்‘தோட்ட’மாக  அஜித்தை அறிந்து வியந்தோம்!
- கி.மகாதேவன், ஏர்வாடி.

அப்பாவுக்கு பயந்த பிள்ளை சூர்யா என்பதையும், சூர்யா - ஜோதிகா காதலைப் பற்றியும் அரிய தகவல்களை அருமையாகப் பதிவு செய்திருந்த  மனோபாலாவுக்கு நன்றி!
- ஈ.கோமதிநாயகம், கூத்தப்பாக்கம்.

நீண்ட வெறுமைக்குப் பின் அடுத்த வருடமாவது பொங்கல் திருநாளில் நாட்டுப்புறக் கலைகள் ‘சங்கமிக்கும்’ என்பதை கட்டைக் கூத்து திலகவதியின்  ‘கனி’வான ‘மொழி’ மூலம் அறிந்துகொண்டோம்!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

‘பீட்டா’ அமைப்பின் மீதுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் சவுக்கடி. சின்னி கிருஷ்ணன் போன்றோர் அதை மறுத்திருப்பதுதான் விந்தையிலும் விந்தை!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘பசிப் பிணி போக்கும்’ கொள்கை கொண்ட வள்ளலாரின் ‘ஜோதி தரிசனம்’ வடலூரில் நடக்கும் சமயம், ‘பசியே இல்லாத உலகம்’ பற்றிய கட்டுரை  குங்குமத்தில் இடம்பெற்றது என்னே பொருத்தம்!
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

‘தாரை தப்பட்டை’ வில்லன் ஆர்.கே.சுரேஷிடம் ‘இனி இவ்வளவு கொடுமைக்காரனா நடிச்ச கொன்னே போடுவேன்’ என்று சிலர் சொன்னதுதான்  கலைக்குக் கிடைத்த வெற்றி!
- கே.புனிதா குமார், விருதுநகர்.

‘காளைய துன்புறுத்துறாங்கனு ஜல்லிக்கட்டை தடை பண்ணுனீங்க... புருஷனை பொண்டாட்டி துன்புறுத்துறாங்கனு கல்யாணத்தை தடை  பண்ணுவீங்களா?’ - ‘வலைப்பேச்சு’ அபாரம் போங்க!
- எச்.புண்ணியகோடி, கன்னியாகுமரி.

ரஜினியின் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் நாம் அறிந்தவைதான். ராதிகா ஆப்தே உள்ளிட்ட வட இந்தியர்கள் இப்போதுதான் அதை மேஜிக் என  உணர்கிறார்கள்... விருது கொடுக்கிறார்கள்!
- ஜெ.வி.ரஜினிதாசன், காங்கேயம்.

ஆல்தோட்ட பூபதியின் ‘கோலிவுட் ஜல்லிக்கட்டு’ செம ரகளை. சிரிப்புப் பொங்கல் வரிக்கு வரி ரவுண்டு கட்டி அடித்தது!
- வீ.சிவசந்திரன், சென்னை.

‘800 குழந்தைகளுக்கு அப்பா!’ வான பிரிட்டன் நாட்டு சைமன் வாட்சனைக் கண்டு பிரமித்தேன். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு உயிரணுவை  விற்கும் அவர் பணி, தளர்வின்றி தொடரட்டும்!
- டி.வி.குணசேகரன், புதுச்சேரி.