நினைவோ ஒரு பறவை 14



லட்சுமணன் கோடு

‘‘ராமச்சந்திரனா?’’ என்று கேட்டேன்.
‘‘ஆமாம்’’ என்றான்.
‘‘எந்த ராமச்சந்திரன்?’’
என்று நான் கேட்கவும் இல்லை!
அவன் சொல்லவும் இல்லை!
- கவிஞர் நகுலன்

பாறையில் மோதும் மேகங்கள், நீர்த்துளிகளாகச் சிதறி சூன்யத்திற்குள் பயணிக்கும் மலைக்குடில் ஒன்றில் சீடர்கள் மூவர் குருவிடம் கேட்டனர்.  ‘‘கடவுளை மனதால் நெருங்குவது எப்படி?’’உள்ளிழுத்த காற்றை லயமாய் வெளியனுப்பி குரு பதில் சொன்னார். ‘‘உங்கள் மனதின் எண்ணங்களை ஒரு  சில நொடிகள் உற்றுப் பார்த்து, தோன்றியவற்றை எழுதிக் கொண்டு வாருங்கள்!’’

நொடிகள் கடந்தன. முதல் சீடன் எழுதினான், ‘பலா மரத்திலிருந்து உதிரும் இலைகள், வருத்தம் எதுவுமில்லை!’இரண்டாம் சீடன் எழுதினான், ‘கதவு  திறந்த பின், அறையின் இருட்டிடம் வெளிச்சம் பேசும் ஓசை!’மூன்றாம் சீடன் எழுதினான், ‘குளிர், தேநீர், எதிர் வீட்டுப் பெண், எப்போதோ குடித்த  மது, தற்கொலை, மலைப்பாதை நாய், குருவுக்கு ஒன்றரைக்கண், கூர் தீட்டாத பென்சில்!’மூன்றையும் படித்த குரு புன்னகையுடன் சொன்னார்...  ‘‘கடவுளை மனதால் அடைவது அத்தனை எளிதல்ல. ஏனெனில் மனம் என்பது பைத்திய எண்ணங்களின் ெதாகுப்பு! காற்றில் மிதக்கும் தூசிகளுக்கு  திசை என்பது இல்லை!’’

இந்த குருவுக்கும் சீடர்களுக்கும் இடையிலான உரையாடலைப் போல, உலகில் மிகவும் சிக்கலானதும், புரிந்துகொள்ள முடியாததும் எது? ஒரு ஐந்து  நிமிடம் ஆழ்மனதை உற்றுப் பார்த்து, என்னென்ன நினைக்கிறோமோ அவற்றை எல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி வைத்து படித்துப் பார்த்தால் நம் மீதே  நமக்கு பயம் வந்து விடும். வாழ்வின் ஆகச் சிறந்த புதிரை மனமென்னும் கடலுக்குள் மீண்டும் மீண்டும் மோதி உடையும் அலைகளே  தோற்றுவிக்கின்றன.

என் அப்பாவிற்கும் லட்சுமணனுக்கும் இருந்த உறவைப் பற்றி நினைக்கையில், ‘இரண்டு மனித மனங்கள் தங்களுக்குள் ஆடிய சூதாட்டம்’ என்றே  அதைச் சொல்லத் தோன்றுகிறது.அப்பாவும் லட்சுமணனும் சந்தித்துக் கொள்ளும் இடமாக அய்யம்பேட்டையில் ஒரு டீக்கடை இருந்தது.  காஞ்சிபுரத்தைச் சுற்றி உள்ள நிறைய ஊர்களின் பெயர்கள் பேட்டை என்றே முடியும். நத்தப்பேட்டை, நசரத்பேட்டை, முத்தியால்பேட்டை,  கருக்குப்பேட்டை, ஏகனாம்பேட்டை, ராஜாம்பேட்டை, ஒலி முகமது பேட்டை என நாங்கள் அனைவரும் கோட்டைக்குள் வாழாவிட்டாலும்  பேட்டைக்குள் வாழ்ந்தோம். அய்யம்பேட்டையை கிராமங்களின் அண்ணன் என்று சொல்லலாம்.

கிராமமும் அல்லாத, நகரமும் அல்லாத ஒரு ஊர்.இரண்டு சைவ ஓட்டல்கள்; நாலைந்து வீர அசைவ புரோட்டாக் கடைகள்; டிஸ்கோ சிகை  அலங்காரங்களுடன் கமல், ரஜினி படம் வரைந்த முடித் திருத்தகம்; எப்போது சென்றாலும் யாராவது ஒருவர் தும்மிக் கொண்டிருக்கும் மாவு மில்;  காற்றின் திசையெங்கும் மருந்து வாசம் பரப்பும் அரசாங்க மருத்துவமனை; காட்டன் புடவைகளும் சீட்டித் துணிகளும் விற்கும் ஜவுளிக்கடை  (ஸ்தாபிதம் 1932); ‘மருதமலை மாமணியே’ என இரவுக் காட்சிக்கு அழைக்கும் சீதாலட்சுமி டாக்கீஸ் என சுற்றி உள்ள பேட்டைகளின்  பொருளாதாரமும், பொழுதுபோக்கும் அய்யம்பேட்டையைச் சார்ந்தே இருந்தன.

அய்யம்பேட்டையிலிருந்து எங்கள் ஊர் மூன்று கிலோ மீட்டர். தினமும் காலையில் எழுந்ததும் அப்பா சைக்கிள் எடுத்துக் கொண்டு அய்யம்பேட்டை  சென்று வருவார். அங்கு ஒரு தேநீர்க் கடையில் நாளிதழ்கள் படித்துவிட்டு, வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, அவர் ஆசிரியராகப் பணியாற்றும்  பள்ளிக்குச் செல்வது வழக்கம்.

சிறு வயதில் ஒரு ஞாயிற்றுக்கிழமை நானும் அப்பாவுடன் அய்யம்பேட்டை சென்றேன். தேநீர்க் கடையில் சென்று மர பெஞ்சில் அமர்ந்ததும்,  அப்பாவிற்கென காத்திருந்தது போல் எதிரிலிருந்த சலூனிலிருந்து லட்சுமணன் ஓடி வந்தார். அழுக்கு வேட்டி, சாயம் போன சட்டை, காலிலிருந்த  செருப்பில் வார் அறுந்து சணல் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. அப்பாவை விட நாலைந்து வயது அதிகமிருக்கும். அவரைப் பார்த்ததும் அப்பா, ‘‘மூணு  டீ’’ என்றார். தேநீர் குடித்து முடிக்கும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கிளம்பும்போது அப்பா அவரிடம் ஒரு ரூபாய் கொடுக்க,  வாங்கிக் கொண்டு ‘‘வர்றேன் வாத்தியாரே’’ என்று விடை பெற்றார்.

அடுத்த நாளும் அப்பாவுடன் செல்ல வேண்டிய வேலை இருந்ததால் அய்யம்பேட்டை சென்றோம். அதே தேநீர்க் கடை, அதே லட்சுமணன், அதே  ‘‘மூணு டீ’’. கிளம்பும்போது ஒரு ரூபாய். ‘‘வர்றேன், வாத்தியாரே’’.வீட்டிற்குத் திரும்புகையில் அப்பாவிடம் கேட்டேன்.‘‘யாருப்பா அவரு?’’‘‘பேரு  லட்சுமணன்டா. ஊரு நத்தப்பேட்ைடன்னு நினைக்கிறேன்.’’‘‘அவருகிட்ட நீங்க கடன் வாங்கியிருக்கீங்களாப்பா?’’‘‘இல்லை’’ என்றார்.
‘‘அவரு உங்க ஃபிரெண்டா?’’‘‘இல்லை!’’‘‘நம்ம தூரத்து சொந்தக்காரரா?’’

‘‘இல்லடா... எதுக்குக் கேக்குறே?’’‘‘பின்ன எதுக்கு தெனமும் ஒரு ரூபா கொடுக்குறீங்க’’ என்றேன்.‘‘பழக்கமாயிடுச்சுப்பா. வந்து நிப்பாரு.  கொடுப்பேன்!’’‘‘எவ்வளவு நாளா கொடுக்குறீங்க?’’‘‘நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் ‘பசிக்குது’ன்னு சொன்னாரு. ஒரு ரூபா கொடுத்தேன்.  தெனமும் வருவாரு. பாவம்டா!’’‘‘அதுக்காக ஒரு ரூபாவா கொடுப்பாங்க?’’‘‘இதெல்லாம் உனக்குப் புரியாது. உன் வேலையைப் பாரு’’ என்றார்  கோபத்துடன்.

என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்நாட்களில் ஒரு ரூபாய்க்கு, நூறு ஒரு காசு தவிட்டு பிஸ்கெட்டுகள் வாங்கலாம். இடைவேளை  முறுக்குடன் படம் பார்க்கலாம். நான் ஆசையாய் ஹார்லிக்ஸ் பாட்டிலில் வளர்க்கும் மீன் குஞ்சுகளுக்கு மாசம் முழுக்க தீனி போடலாம். ‘‘போயும்  போயும் இந்த அப்பா யாரோ தெரியாத ஒருவருக்கு ஒரு ரூபாய் தினம் தினம் கொடுக்கிறாரே’’ என்று கோபம் கோபமாக வந்தது.

வீட்டிற்கு வந்ததும் அப்பாவின் ஒரு ரூபாய் ரகசியத்தை எல்லோரிடமும் சொன்னேன். ஒரு ரூபாய்க்கு பாட்டில் நிறைய கடலை எண்ணெய்  வாங்கலாம்; நான்கு முழம் மல்லிப்பூ வாங்கலாம்; மாங்காய் வாங்கி ஊறுகாய் போட்டால் ஒரு வாரம் வரும்; வீட்டிலும் கோபப்பட்டார்கள். அப்பா  இப்போது ஒருமையிலிருந்து பன்மைக்கு மாறினார். ‘‘இதெல்லாம் உங்களுக்குப் புரியாது... உங்க வேலையைப் பாருங்க!’’
அடுத்த நாளிலிருந்து காலையில் அப்பா அய்யம்பேட்டை கிளம்பும்போதெல்லாம் ‘‘கடன்காரன் காத்துக்கிட்டிருப்பான்ல... அதான் கெளம்பிட்டாரு’’  என்பார்கள் வீட்டில். அப்பா காதில் வாங்காதது போலச் சென்று விடுவார்.

அப்பாவுக்குக் காய்ச்சல் வந்து படுத்திருந்தால் என்னிடம் காசு கொடுத்து அனுப்புவார். நான் மறுப்பேன். ‘‘வாத்தியாரு கொடுத்தாருன்னு கொடு’’  என்று எதிர்வீட்டுப் பையனை அனுப்புவார். சிலவேளைகளில் ‘‘நேரமாச்சு வாத்தியாரே... வேலை இருக்கு. சீக்கிரம் கொடு’’ என்று அப்பாவை அந்த  லட்சுமணன் மிரட்டுவதும் நடக்கும். ‘‘இருப்பா... சில்லறை மாத்தணும்’’ என்பார் அப்பா அப்பாவியாக.

அப்பாவுக்கும் அவருக்கும் இடையில் இருந்தது என்ன பந்தம்? நட்பா? நெருங்கிய உறவா? தன்னைச் சார்ந்து ஒருவன் இருக்கிறான் என்கிற  முதலாளித்துவ மனோபாவமா? அப்பாவுடன் பிறந்தவர்கள் பெண்கள்தான். சிறுவயதில் அப்பாவுக்கு முன்பு பிறந்த அண்ணன் இறந்து விட்டாராம்.  இன்னொரு அண்ணனாய் இவரைப் பார்த்தாரா? இதுவரை புரியாத புதிர் அது. அந்த லட்சுமணன் கோட்டை சீதை தாண்டி இருக்கலாம். கடைசி  வரை இந்த லட்சுமணன் கோட்டை அப்பா தாண்டியதே இல்லை.

பின்னாட்களில் அப்பா திருவள்ளூருக்கு மாற்றலாகிச் சென்றபோது நான் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை படித்துக்  கொண்டிருந்தேன். ஒருமுறை அதே தேநீர்க் கடையில் லட்சுமணனைப் பார்த்தேன்.‘‘வாத்தியாரு நல்லா இருக்காரா?’’ என்றார்.
‘‘நல்லா இருக்காரு’’ என்று சொல்லிவிட்டு சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். வாங்க மறுத்து, விலகிச் சென்றார்.

பின்பொருநாள் அவர் பாம்பு கடித்து இறந்த செய்தி கேள்விப்பட்டு லட்சுமணனின் முகவரி விசாரித்து நானும் அப்பாவும் சென்றோம். சாணித் தரை  மெழுகிய கூரை வீடு. வாசலில் பிணத்தைக் கிடத்தியிருந்தார்கள். வைக்கோலை எரிய வைத்து அந்தத் தீயில் சூடேற்றி பறை
யடித்துக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே சாவிற்கு வந்த உறவினர்களின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, ஒரு சிலர் சாப்பாட்டுக் கடையை  நோக்கி யாருக்கும் சொல்லாமல் மெல்ல நழுவிக் கொண்டிருந்தார்கள்.

அப்பா வாங்கி வந்த ‘ரோஜாவும் சம்பங்கியும் ஜரிகையில் சிறைப்பட்ட மாலையை’ லட்சுமணன் கழுத்தில் போட்டு விட்டு நானும் அப்பாவும் நிமிர்ந்து  பார்த்தோம். பிணத்தின் நெற்றியில் ஒரு ரூபாய்!

ஒரு ஐந்து நிமிடம் ஆழ்மனதை உற்றுப் பார்த்து, என்னென்ன நினைக்கிறோமோ அவற்றை  எல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி வைத்து படித்துப்  பார்த்தால் நம் மீதே  நமக்கு பயம் வந்து விடும்.

ஒருரூபாய்க்கு நூறு ஒரு காசு தவிட்டு பிஸ்கெட்டுகள் வாங்கலாம். இடைவேளை முறுக்குடன் படம் பார்க்கலாம். நான் ஆசையாய் ஹார்லிக்ஸ் பாட்டிலில் வளர்க்கும் மீன் குஞ்சுகளுக்கு மாசம் முழுக்க தீனி போடலாம்.

(பறக்கலாம்...)

நா.முத்துக்குமார்
ஓவியங்கள்: மனோகர்