அணுவின் ஆசான்!





இன்று உலகம் முழுவதும் பயன்படும் மின்சாரத்தில் சுமார் 20 சதவீதத்தை அணுசக்திதான் உற்பத்தி செய்கிறது. அணுக்களின் கதிர்வீச்சு,  கேன்சர் சிகிச்சைக்குப் பயன்படுகிறது. இன்னும் அணுசக்தியால் இயங்கும் விமானம், கார் என்று வருங்காலக் கனவுகள் விரிந்துகொண்டே போகின்றன. இவற்றுக்கெல்லாம் விதை போட்ட விஞ்ஞானிதான் சர்.எர்னஸ்ட் ரூதர் ஃபோர்டு.


நியூசிலாந்து நாட்டில் ஸ்பிரிங் குரோவ் என்னும் இடத்தில் 1871ம் ஆண்டு, ஆகஸ்ட் 30ம் தேதி பிறந்தார் ரூதர்ஃபோர்டு. விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்கினார். அறிவியலை ‘அணு அணு’வாக நேசித்தார். தனது 23வது வயதுக்குள்ளேயே பி.ஏ., எம்.ஏ., பி.எஸ்.சி. ஆகிய மூன்று பட்டங்களைப் பெற்றார். 24வது வயதில் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க ரூதர்ஃபோர்டுக்கு உதவித் தொகை கிடைத்தது.

அங்கே ஆராய்ச்சி மாணவராக இருந்தபோது யுரேனியம் என்ற தனிமம் வெளியிடும் கதிர்வீச்சை அளக்க ஒரு கருவியை உருவாக்கினார் ரூதர்ஃபோர்டு. அந்தக் கதிர்வீச்சைக் கண்காணித்து ஆல்பா, பீட்டா, காமா கதிர்களைப் பிரித்துப் பெயரிடவும் செய்தார். ரூதர்ஃபோர்டின் ஆராய்ச்சி களைப் பார்த்த கனடாவின் மான்ட்ரீல் பல்கலைக்கழகம், இயற்பியல் பேராசிரியர் பணிக்கு அவரை அழைத்துக் கொண்டது. அங்கும் ரூதர்ஃபோர்டு தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டார். ஒன்பது ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து திரும்பிய அவர், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.

அணுக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததற்காக 1908ம் ஆண்டு ரூதர்ஃபோர்டுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. முதல் உலகப்போரின்போது நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் கருவி ஒன்றை ரூதர்ஃபோர்டு கண்டு பிடித்தார். அதற்காக 1914ம் ஆண்டு இங்கிலாந்து அரசு அவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கி கௌரவித்தது. தொடர்ந்த அவர் ஆராய்ச்சிகளின் பலனாக, 1919ம் ஆண்டு அணுக்களைப் பிளக்க முடியும் என்று நிரூபித்தார். அந்த உண்மைதான் பிற்காலத்தில் அணுகுண்டு தயாரிக்க அடிப்படையாக அமைந்தது. ஆக்கத்துக்காக தான் கண்டுபிடித்த அணுசக்தி, அழிவுக்காகப் பயன்பட்டு ஜப்பானைப் பதம் பார்ப்பதற்கு முன்பே... அதாவது, 1937ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதியே தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் ரூதர்ஃபோர்டு. அணுக்கருவியலின் தந்தை என்று போற்றப்பட்ட அவரை கௌர விக்கும் விதமாக அவரது உடல் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபே எனும் புகழ்பெற்ற இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அணு ஆயுதங்களை எந்தக் கட்டத்திலும் பயன்படுத்தாமல் இருப்பதுதானே அவருக்கு நாம் தரும் நல்ல கௌரவமாக இருக்க முடியும்!
- சி.பரத்