பனிக்கட்டி ரகசியங்கள்!





சிறு பிள்ளைகள் பனிக்கட்டிகளை வைத்துக்கொண்டு விருப்பமாக விளையாடுவதை நாம் பார்க்கலாம். அதன் குளிர்ச்சியான தன்மையும், பளிங்கு போன்ற பளபளப்பும் அவர்களைக் கவர்வதில் வியப்பில்லை. அதில் ருசி உண்டோ இல்லையோ, குழந்தைகள் பனிக்கட்டிகளை வாயில் பிரியமாகப் போட்டுக் கொள்வார்கள். மற்ற ஜீவன்களையும் பனிக்கட்டி சாப்பிடத் தூண்டுமா என்ற கேள்விக்கு விடை தேடி, கோழிக்குஞ்சுகளை வைத்து சிறிய சோதனை ஒன்றைச் செய்தார்கள் விஞ்ஞானிகள். அதன்படி, கோழிக் குஞ்சுகள் அருந்துவதற்கு ஒருபுறம் சாதாரண நீரும், மறுபக்கம் பனி உருகிய நீரையும் வைத்தார்கள். பாதிக்கும் மேற்பட்ட குஞ்சுகள் பனி உருகிய நீரைத்தான் சண்டை போட்டுக் கொண்டு குடித்தனவாம். அதே சமயம், சாதாரண நீரைக் குடித்த சில குஞ்சுகள் எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி நீர் அருந்தி யிருக்கின்றன.

இதை அடுத்து ஒன்றரை மாதங்களாக சில குஞ்சுகளுக்கு பனி உருகிய நீரை மட்டுமே அருந்தக் கொடுத்திருக்கிறார்கள். வேறு சில குஞ்சுகளுக்கு சாதாரண நீரைத் தந்திருக்கிறார்கள். ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அவற்றை எடை போட்டுப் பார்த்ததில், பனிக்கட்டி உருகிய நீரைக் குடித்த குஞ்சுகளின் எடை சாதாரண நீரைக் குடித்து வந்த குஞ்சுகளின் எடையை விடக் கூடுதலாக இருந்ததாம்.
பனி உருகிய நீர் அருந்தத் தூண்டுவது மட்டுமல்லாமல், அருந்திய உயிரினங்களுக்கு நன்மை பயப்பதேன்?

‘‘இதற்குக் காரணம் அந்நீரில் ட்யூடிரியம் என்ற பொருள் அதிகமாக இருப்பதுதான்’’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். நீரின் மூலக்கூறுகள் அலங்கோலமாக இருப்பதுபோல பனிக்கட்டியில் இருப்பது இல்லை. அதற்கு சரியான படிக அமைப்பு உண்டு. பனிக்கட்டி உருகும்போது அதன் அமைப்பு திரவ நிலை வந்த பிறகும் கூட அதிக நேரத்திற்கு நீடித்திருக்கிறது.  பனி உருகிய நீர் வெளித்தோற்றத்திற்கு திரவமாக இருந்தாலும், அதில் உள்ள மூலக்கூறுகள் பனிக்கட்டியின் உள்ளமைப்பைக் கொண்டவை. இதனாலேயே அது உட்கொள்ளப்படும்போது சாதாரண நீரைவிட எளிதாகப் பல பொருள்களுடன் வேதிவினை முறையில் இணைகிறது. சாதாரண நீரை ஒரு பிராணி ஜீரணிக்கும்போது அதன் அமைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும். பனி உருகிய நீரோ சரியான அமைப்பைக் கொண்டது. எனவே, மூலக்கூறுகளை மாற்றிச் சரி செய்வதில் உபரியாகச் சக்தி எதுவும் செலவிட வேண்டியதில்லை. பனி உருகிய நீரின் பங்கு, உயிர் வாழ்க்கையில் மிக அதிகமானது.
- ஆர்.ஆர்.பூபதி,
கன்னிவாடி.