பாலில் தண்ணீரைப் பிரிக்குமா அன்னம்?





வாத்து வேட்டை என்பது உலகமெங்கிலும் சுவாரஸ்யமான ஒரு விளையாட்டாகும். இந்த வேட்டை தற்போது மேலும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. மற்ற பறவைகள் கூட்டமாகப் பறக்கும்போது அதிலொன்றை எளிதில் சுட்டு வீழ்த்தி விடலாம். ஆனால் வாத்து வேட்டை அவ்வளவு எளிதல்ல. குளம், குட்டைகளில் கூட்டமாக இரை தேடிக் கொண்டிருக்கும் வாத்துகளை, அதன் குரலில் அழைத்துக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும். வாத்துகள் பல்வேறு விதமான குரலொலிகளை வைத்திருக்கின்றன. இரை மலிந்த சூழல், ஆபத்து, எதிரி யின் அருகாமை மற்றும் காதல் ஏக்கம் போன்ற ஒவ்வொன்றையும் ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்துகின்றன. இவற்றுள் பெட்டை வாத்துகளின் கூவல்கள் ஆண் வாத்துகளை அப்படியே மயக்கி ஈர்த்துவிடும். காதல் அனஸ்தீசியா! எனவே, வேட்டைப் பிரியர்கள் முதலில் மிமிக்ரி கற்றாக வேண்டும். இதற்காக வாத்துகளின் பல்வேறு குரல்களைப் பதிவு செய்த ஆடியோக்களை விடிய விடியக் கேட்டு, அப்படியே ‘மிமிக்’ செய்து பழகுகிறார்கள். இயற்கைச் சூழலில் வாத்துகளுக்குத் தெரியாமல் மறைந்துகொண்டு இத்தகைய காதல் கூவல்களை இவர்கள் எழுப்புகிறார்கள். இதனால் ஈர்க்கப்பட்ட ஆண் வாத்துகள் கூட்டத்திலிருந்து ஆர்வமிகுதியால் மேலெழும்பிப் பறக்கும். இச்சமயத்தில்தான் ‘டுமீல்’ விடுகிறார்கள்.


உலகெங்கிலும் ஜாலியான சூழலில் திரிந்து மகிழும் வாத்துகள் அனைத்தும், ‘அன்சேரி ஃபார்மிஸ்’   (Anseriformes)   எனும் வாத்து வம்சத்தின் கீழ்தான் வருகின்றன. இந்த வம்சத்தில் எண்ணற்ற வாத்துகள் அல்லாத நீர்ப்பறவைகளும் இடம் பெறுகின்றன. ‘அனாட்டிடே’   (கிஸீணீtவீபீணீமீ)   என்னும் குடும்பத்தில்தான் வாத்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்திய தேசத்தில் மட்டும் இருபதுக்கு மேற்பட்ட வாத்தினங்கள் நீராடிக் கொண்டிருக்கின்றன. இதில் நாமறிந்து வைத்திருக்கும் சாதாரண வாத்துகளும், தாராக்களும் அன்னங்களும் அடங்கும். அன்னம் பிரிட்டிஷ் பிரஸ்டீஜ்!

நம்நாட்டில் காணப்படும் வாத்தினங்கள் எல்லாம் நமக்குச் சொந்தமானவை அல்ல. ஒரு ஐந்தாறு இனங்கள்தான் பாரதப் பற்று மிக்கவை. பூர்வீக வாத்துகள். இவற்றில் புள்ளி வாத்து, குள்ளத்தாரா, முக்குளிப்பான், மரவாத்து, பெருஞ் சிறகுத்தாரா, கொண்டை வாத்து, பர்மீஸ் வாத்து மற்றும் வெள்ளை றெக்கை போன்றவை அடங்கும். பிற வாத்தினங்களும் குளிர்காலத்தில் நம் நாட்டில் நோகாமல் நோன்பு கும்பிட்டுவிட்டு, வேனிற்காலத் துவக்கத்தில் தங்கள் சொந்த நாடுகளுக்குப் பஞ்சாய்ப் பறந்துவிடுகின்றன. இப்பறவைகள் ஆண்டுதோறும் குளிர் காலத் துவக்கத்தில் இந்தியாவுக்கு வருவதென்பது வெறும் இன்பச் சுற்றுலா!



ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் சைபீரிய பகுதிகளிலிருந்து வாத்தினங்கள் இந்தியாவுக்கு இன்பச் சுற்றுலா வருகின்றன. இதில் குறிப்பாக வரித்தலை வாத்து, சாம்பல் வாத்து, மார்பிள் வாத்து, செந்தலை வாத்து, சிரவை வாத்து, வெள்ளைக்கால் வாத்து, கருங்கலியன் மற்றும் மார்க்கலியன் போன்ற இனங்கள் ரெகுலராக வந்து போகின்றன. ஆண்டுதோறும் இவ்வின வாத்துகளின் இனச்சேர்க்கை இந்தியாவில்தான் நிகழ்கிறது. தந்தையும் தாயும் மட்டுமின்றி, அவர்கள் மூதோர்களும் குலாவி மகிழ்ந்த அதே பகுதியில் தொடர்ந்து நிகழ்கிறது. பாரம்பரிய சாந்தி முகூர்த்தம்!

இதேமாதிரி குளிர்கால உலா வரும் அன்னப் பறவைகள் ஆண்டுதோறும் தொடர்ந்து வருவதில்லை. வடதுருவப் பிரதேசங்களான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பனிமிகுந்த ஆண்டுகளில் மட்டும், குளிர் பொறுக்கமாட்டாமல், இந்தியாவின் மிதமான குளிரைத் தேடி வருகின்றன. வந்தது வந்துவிட்டோமென்று இங்கேயே ரொமான்ஸ் செய்து, வாரிசுகளை உருவாக்கி, அவை பறக்கும் தகுதி பெறும் வரை வளர்த்து ஆளாக்கிக் கொண்டு ‘ச்சீ ச்சீ... இந்தியா புளிக்கிறது’ என்று சொந்த நாடுகளுக்கு விமானித்து விடுகின்றன. இந்த வாத்துகளைப் பற்றிய ஒரு ரகசியம்... அதாவது தண்ணீரில் கலந்த பாலை தனியே பிரித்து அருந்தும் வல்லமை அன்னங்களுக்கு உண்டு என்பது ஒரு பொய் மட்டுமல்ல... உலக மகா பொய்! அதன் பால் வெள்ளை நிறத்தை வைத்து யாரோ கிளப்பிவிட்ட கட்டுக்கதையே அது.

இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வாத்து இனங்களில் புள்ளி வாத்து, மரவாத்து மற்றும் குள்ளத்தாரா போன்ற வாத்தினங்கள் மட்டுமே பகிரங்கப் பிரபலங்கள். இதுபோக பாக்கு மற்றும் வெள்ளை நிறத்தைக் கொண்ட பெருஞ்சிறகுத்தாரா எனும் வாத்து சிற்சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. இது மரவாத்து போன்ற குணத்தைக் கொண்டது. எனினும் சற்றே பெரியது. அயல்நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வரும் வாத்துகளில் வரித்தலை வாத்து மற்றும் சாம்பல் வாத்து போன்றவை ஜிகினா ரகங்கள். - வாத்துகள் நீந்தும்