கண்டம் விட்டு கண்டம் தாண்டி!





ஏவுகணை எதுவரை செல்லும்?
- ஆர்.ராஜா, 9ம் வகுப்பு,
ஏகேடி பள்ளி, ராஜபாளையம்.
இரண்டு வகை ஏவுகணைகள் உள்ளன. பேலிஸ்டிக் ஏவுகணை என்பது செலுத்துவிசை நடுவே ஓய்ந்து, எறிவிசை இறங்கும்படி அமைக்கப்பட்ட உந்துவிசை அமைப்பு. பறத்தலின் முதல் கட்டத்தில் வழிகாட்டி அமைப்பு செயல்படும். இலக்கை அடைந்தவுடன் உந்துவிசை நிறுத்தப்பட்டு தானாகவே கீழே விழும். க்ரூஸ் ஏவுகணைகளிலோ தொடர்ச்சியான வழிகாட்டி அமைப்பு செயல்பட்டு, இறுதிவரை ஆற்றலும் அளிக்கப்படும்.

பேலிஸ்டிக் ஏவுகணைகளை, அவை அடையும் தூரத்தைப் பொறுத்து வகைப்படுத்தியிருக்கிறார்கள். ஸ்கட் போன்ற சிறுதொலைவு (ஸ்மால் ரேஞ்ஜ்) ஏவுகணைகள் ‘டெல் அவிவ்’விலிருந்து ஈராக் வரை செல்லும். நடுத்தர (மீடியம் ரேஞ்ஜ்) ஏவுகணைகள் வடகொரியாவிலிருந்து ஜப்பான் வரை உள்ள தொலைவைக் கடக்கும். அதற்கடுத்த இண்டர்மீடியட் ரேஞ்ஜ் ஏவுகணைகள் லிபியாவுக்கும் வட ஐரோப்பாவுக்கும் இடைப்பட்ட தூரத்தையே எட்டும். கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பேலிஸ்டிக் ஏவு கணைகளால் மத்திய ஆசியாவிலிருந்து அமெரிக்கா வரை செல்ல முடியும்!

ஏவுகணை இயக்கத்தில் மூன்று கட்டங்கள் முக்கியமானவை. ‘பூஸ்ட் பேஸ்’ என்ற முதல் கட்டத்தில் புவி ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு கிட்டத்தட்ட வளிமண்டலத்தின் உச்சிக்கு ஒரு தாவல் நிகழ்த்தும். கீழ்நோக்கிச் சென்று தானாக விழும் இரண்டாவது கட்டம் கொஞ்சம் நீளமானது. மூன்றாவது கட்டத்தில் மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும். இந்த மூன்று கட்டங்களிலும் துல்லியமாகச் செயல்பட்டால்தான் ஏவுகணை வெற்றியடையும்.

நதிக்கு எங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது?
- ச.விமலா, 7ம் வகுப்பு,
வாணி வித்யாலயா, வேலூர்.

ஆற்றின் வாழ்க்கை ஊற்றி லிருந்து தொடங்குகிறது. பனிப்பாறைகள் உருகுவதாலோ, நிலம் வழியாக பெருக்கெடுக்கும் நீரோட்டங்களாலோ நதி உயிர் பெறுகிறது. நீரோட்டம் உருவாக வேண்டுமென்றால் மழைநீர் நிலத்துக்குள் புகுந்து சேமிப்பாக வேண்டும். நிலம் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு நீரையும் உறிஞ்சி, கள் நிரம்பிய வயிறு போல பூரிப்பாக இருக்கும். அதன் பிறகு மிகச்சிறிய, நூல் போன்ற கால்வாய்கள் தோன்றி தண்ணீரை எடுத்துச் செல்லும். ஒருகட்டத்தில் இந்த சின்னஞ்சிறு கால்வாய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து செங்குத்துச் சரிவாகப் பாய்ந்து, கடைசியில் ஆற்று நீரோட்டமாக மாறுகிறது.