கொம்பு வித்தியாசம்!





மஞ்சள்-கறுப்பு புலி, வெள்ளை-கறுப்பு புலி என்று புலி இனத்தில் இப்போது இரண்டு வகை இருப்பதுபோல, காண்டாமிருகத்திலும் இரண்டு வகை உண்டு. இந்த வகைகளில் நிற மாற்றம் இருக்காது; கொம்புகளில்தான் மாற்றம். ஆமாம்... ஒரு கொம்பு கொண்டது, இரு கொம்புகள் கொண்டது என இருவகை காண்டாமிருகங்கள் உள்ளன. இந்திய காண்டாமிருகங்களுக்கு ஒற்றைக் கொம்பு. ஆப்ரிக்க நாடுகளில் இரட்டைக் கொம்பு!

நீண்ட நேர வானவில்
பொதுவாகவே வானில் நீர்த் துளிகள் சூரிய ஒளி பெற்று அதனால் உருவாகும் வானவில் சில நிமிடங்களுக்குத்தான் நம் கண்களுக்குத் தெரியும். ஆனால் அதிகபட்சமாக 6 மணி நேரம் வானவில் நீடித்த சாதனை 1994ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. பிரிட்டனில் யார்க்ஷயர் என்ற பகுதியில் இந்த இயற்கை அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.

11ன் பெருமை
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி 1921ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி துவங்கப்பட்டது. மாவோ தன்னுடைய 11 நண்பர்களுடன் சேர்ந்து கட்சியை ஆரம்பித்தார். இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி சரணடைந்தது எப்போது தெரியுமா? 1945ம் ஆண்டு 11வது (நவம்பர்) மாதம், 11ம் தேதி, காலை 11 மணி, 11 நிமிடத்தில்!

மரமூஞ்சூறு
மலேசியாவில் காணப்படுகிறது மரமூஞ்சூறு. எலிபோலத் தோற்றமளிக்கும். ஆனால் அணில் போல வால் இருக்கும். சுமார் 7 அங்குல நீளம் உள்ளது. காவி நிறத்தில் இருக்கும் இந்த மூஞ்சூறு. பூச்சிகள், பல்லிகள், சில பழவகைகள்தான் இதன் உணவு. அநேகமாக மரங்களில்தான் வசிக்கும். இமயமலையின் கிழக்குப் பகுதியிலும், பர்மாவிலும் இவை காணப்படுகின்றன.

பயத்துக்குப் பெயர்
இருட்டு என்றால் பயம் உருவாவது இயல்புதான். இப்படி பயப்படுவதை விஞ்ஞானப் பெயரிட்டு அழைக்கிறார்கள். இரவு நேரத்தில், அடர்ந்த கானகத்தில், இயற்கையாக சிறிதும் வெளிச்சம் பெறமுடியாத சூழ் நிலையில் செல்லும் ஒருவர் பயம் கொள்கிறார் என்றால், இந்தவகை பயத்துக்கு ‘நிக்டோஹைலோ ஃபோபியா’ என்று பெயர்!

அணையாது ஹரிக்கேன்


பலத்த காற்றுடன் பெய்யும் மழையை ஹரிக்கேன் என்று அழைப்பார்கள். பெரும் இருளாக மாறக்கூடிய இந்தச் சூழலை அந்நாளில் ஒரு எளிய விளக்கு சற்றே விரட்டி ஒளி கொடுத்தது. கண்ணாடிக் கூண்டுக்குள் எரியும் தீபம், அதை எரியவைக்க வட்டமான பெட்டி போன்ற அடிப்பகுதியில் எண்ணெய். எரியும் தீயின் புகை வெளியேற மேலே சிறு புகைபோக்கி. அது கண்ணாடிக் கூண்டை மேலே உறுதியாகப் பற்றியிருக்கும். அதா வது, இந்த அமைப்பானது, பலத்த காற்றா லும் தீபத்தை  அணைக்காது. அதனாலேயே இந்த விளக்குக்கு ‘ஹரிக்கேன் விளக்கு’ என்று பெயர்.
- வித்யுத்