விண்ணில் உருவாகி வரும் உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்!





சமீபத்தில் கஜகஸ்தான் நாட்டிலிருக்கும் ஏவுதளத்தில் இருந்து ரஷ்யா ஃபெடரேஷன் ஏவியுள்ள விண்கலம்தான் ‘ரேடியோ ஆஸ்ட்ரான்’. இந்த விண்கலம், பூமிக்கு மேலே விண்ணில் தனது சுற்றுவட்டப் பாதையில் நிலைகொள்ளும்போது, இதிலுள்ள 300 மீட்டர் விட்டம் கொண்ட ஆன்டெனா விரியும். பூமியில் பல இடங்களில் ஏற்கனவே உள்ள டெலஸ்கோப் சிக்னல்களுடன் இது இணைக்கப்படும். அப்போது இந்த விண்கல ஆன்டெனா உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பாக மாறிவிடும். அப்போது அதன் விட்டம் 3 லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும். கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவுக்கு இதன் சிக்னல்கள் மிகத் துல்லியமாக இருக்கும்.

இந்த ஆன்டெனாவை ‘இன்டர்பெர்ரோமெட்ரி’ என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் பூமியில் இருந்துகொண்டே இயக்க முடியும். விஞ்ஞானிகள் இந்த டெலஸ்கோப்பை பயன்படுத்தி, தொலை தூரத்தில் இருக்கும் பிரபஞ்சத்தின் பகுதிகளையும் துல்லியமாகப் படமெடுக்கலாம். எனவேதான் இந்த ‘ரேடியோ ஆஸ்ட்ரான்’ விண்கலம் உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோல பல ரேடியோ டெலஸ்கோப்புகள் விண்ணில் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இந்த ரேடியோ ஆஸ்ட்ரானுக்கென ஒரு தனிச்சிறப்பு உள்ளது. அதாவது, பூமிக்கு மேலே 10 ஆயிரம் கி.மீ முதல் 3 லட்சத்து 90 ஆயிரம் கி.மீ வரை உயர்ந்தும் தாழ்ந்தும் நகரும் திறன் கொண்டது இந்த விண்கலம். பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதன் உயரத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியும். அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா, ஜெர்மனி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள டெலஸ்கோப்கள் இந்த ரேடியோ ஆஸ்ட்ரான் சிக்னல்கள் மூலம் இணைக்கப்படும். எம்.87 எனப்படும் ஒரு நட்சத்திர மண்டலத்தின் நடுப்பகுதியில் ராட்சத கறுப்பு ஓட்டை ஒன்று உள்ளது. இந்தக் கறுப்பு ஓட்டையில் பல மர்மங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அந்த மர்மப் பிரதேசத்தை துல்லியமாகப் படமெடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. காரணம், சாதாரண விண்வெளி டெலஸ்கோப்பைக் காட்டிலும் இது 10 ஆயிரம் மடங்கு அதிக துல்லியமாக செயல்படக் கூடியது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு விண்ணில் இருக்கப் போகும் இந்த ‘ரேடியோ ஆஸ்ட்ரான்’ விண்கல டெலஸ்கோப்பிலிருந்து வினாடிக்கு 144 மெகாபைட்ஸ் வேகத்தில் தகவல்களைப் பெற முடியும். எதுக்கும் பாத்ரூமுக்கு ஓடு போடாதவங்க போட்டுருங்கப்பா!
- முக்கிமலை நஞ்சன்,
நீலகிரி.