பலர் விரும்பும் கலர்!





கார்களின் நிறங்கள் குறித்து உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வு களில் ஒவ்வொரு நாட்டினரும் சில குறிப்பிட்ட கலர் கார்களை விரும்பி வாங்குவது தெரிய வந்துள்ளது. உதாரணமாக, இத்தாலியர்களுக்கு சாம்பல் அல்லது வெளிர் மஞ்சள் நிறக் கார்களே பிடிக்கிறது. சுவீடன் மக்கள் வெளிர் நீல நிறக் கார்களே கம்பீரமானவை எனக் கருதுகிறார்கள். இங்கிலாந்து மக்கள் சிவப்பு, நீலம், வெள்ளை ஆகிய வண்ணக் கார்களை அதிகம் வாங்குகின்றனர். அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினர் சிவப்பு, காக்கி, வெள்ளை, மற்றும் நீல நிறக் கார்களை விரும்புகிறார்கள். உயர்தட்டு அமெரிக்கர்கள் இளஞ்சிவப்பு, சாம்பல், சில்வர் வண்ணங்களையே அதிகம் நேர்ந்தெடுக்கிறார்கள். இவை தவிர, ஸ்போர்ட்ஸ் மாடல் கார்கள் ஆழ்ந்த சிவப்பு வண்ணத்தில் இருந்தால் மட்டுமே நன்கு விற்பனையாகிறதாம்.

அச்சில் ஏறிய தமிழ்!
இந்திய மொழிகளில் அச்சிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மொழி தமிழ். ஐரோப்பியக் குடும்பத்தைச் சாராத மொழிகளிலேயே முதன்முதலில் அச்சேறிய மொழியும் தமிழ்தான். 1554ல் போர்ச்சுகல் தலைநகரமான லிஸ்பன் நகரில் ‘கார்தில்லா-இ-லிங்கோவா-டாமுல்’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட நூலில்தான் முதல் தமிழ் அச்சு எழுத்துகள் இடம் பெற்றிருந்தன. 1556ல் கோவாவில் ஆசியாவின் முதல் அச்சகம் அமைக்கப்பட்டது. 1726ல் சென்னை வேப்பேரியில் ‘கிறிஸ்தவ ஞான வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பினரால் துவங்கப்பட்ட அச்சகமே தென்னிந்தியாவின் முதல் அச்சகம்!

1831ல் வெளியான ‘தமிழ் மேகஸின்’ என்ற இதழ்தான் முழுக்க முழுக்க தமிழ் எழுத்துக்களைத் தாங்கி வந்த முதல் தமிழ் இதழாகும்.

அகராதியின் கதை!
சொல் இலக்கணத்தை கி.மு 600க்கு முன்பே அறிமுகப்படுத்திய நூல் தொல்காப்பியம். மிகப் பழங்கால சொல் அகராதியாக தொல்காப்பியத்தைக் கருதலாம். சொற்களின் தோற்றம், வகை, பொருள் பயன்படுமுறையை இது விளக்குகிறது. கி.மு. 669-626 காலகட்டத்தைச் சேர்ந்த ஆசூர்பானிபல் என்ற அரசரின் ஆட்சிக் காலத்தில் அசீரிய மொழியில் அகராதி ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.
10 ஆயிரம் சொற்களுக்கான விளக்கங்களைக் கொண்ட சீன அகராதி கி.மு 150ல் வெளியிடப்பட்டது. கி.மு 5ம் நூற்றாண்டில் வடமொழியில் அகராதி அமைக்கப்பட்டு இருந்தது. தமிழ்மொழியில் சொற்களை முதலெழுத்து வரிசையில் அமைத்து பொருள் கூறிய முதல் நூல் என்ற பெருமையைப் பெறுவது ‘அகராதி நிகண்டு’. இதை கி.பி. 1594ல் இரேவண சித்தர் என்பவர் தொகுத்திருந்தார்.

சர் தாமஸ் எலியட் என்பவர்தான் முதல்முதலில் ‘டிக்ஷனரி’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அதுவே பின்பு நிலைத்துவிட்டது.
- மீ.சொர்ணம்,
உடுமலைப்பேட்டை.